April 11, 2021

‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை தடையில்லாமல் பெற உதவும் ஜி சாட் 15 சக்சஸ்!

இந்தியாவின் அதிநவீன தொலைதொடர்பு செயற்கோளான ‘ஜி-சாட் 15’ தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. இந்த செயற்கைகோளை ‘ஏரியன்-5’ ராக்கெட் விண்ணுக்கு எடுத்துச்சென்றது. அடுத்து வரும் நாட்களில் இந்த செயற்கைகோளின் புவிசுற்று வட்ட பாதையை உயர்த்தும் பணி நடைபெறும். அதனை தொடர்ந்து செயற்கை கோளில் உள்ள சோலார் பேனல்கள் மற்றும் ஆண்டனா இயக்கி வைக்கப்படும். அப்போது செயற்கை கோள் முழு பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
gsat nov 12


இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்புக்காவும், போக்குவரத்துக்கு துறையில் வழிகாட்டுவதற்கு மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்காகவும் ‘கியூபேண்ட்’ எனப்படும் அதிநவீன தொலை தொடர்பு கருவிகள் 24 பொருத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான இந்த செயற்கைகோளின் மொத்த எடை 3,164.5 கிலோவாகும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட 43 நிமிடங்கள் 23 நொடிகளில் செயற்கைகோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள் வந்தது. முதற்கட்ட சோதனையில் செயற்கைகோளின் செயல்பாடு நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பேசிய ‘இஸ்ரோ’ செயற்கைகோள் மைய இயக்குனர் அண்ணாதுரை “இந்த செயற்கைகோள் ஏவப்பட்டதன் மூலம் ‘கியூபேண்ட்’ தொலைதொடர்பு சேவையை பயன்படுத்தி வரும் இந்திய பயனீட்டாளர்களுக்கு தடையில்லா சேவையை வழங்கமுடியும். இதன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் ஒரு அடி முன்வைத்துள்ளது. ‘ஜி-சாட் 17’ மற்றும் ‘ஜி-சாட் 18’ ஆகிய செயற்கைகோள்களும் ‘ஏரியன்’ ராக்கெட் மூலமாக பிரெஞ்சு கயானாவில் இருந்து 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்” என்றார்.