September 27, 2021

காவல் துறையில் சில சீர்திருத்தங்கள் தேவை!

கடந்த சில நாள்களாக செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பேசும் செய்தி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்துத்தான். இதுகுறித்து ஒவ்வொருவரும் தாங்கள் பேசும் வார்த்தைகளில் நியாயம் உண்டா, இல்லையா என்பது குறித்துக் கவலைப்படாமல், தங்கள் வாதங்களுக்கு வலு சேர்த்து வருகிறார்கள். பொதுவாக, காவல் துறையில் நிலவும் பிரச்னைகளையும் உயர் அதிகாரி கள் தங்களுக்குக் கீழுள்ளவர்களை நடத்தும் வழிமுறைகளையும் மனித உரிமை ஆணையம் விசாரித்தால் இலங்கைப் போர்க் குற்றங்களைவிட அதிக மனித உரிமை மீறல்கள் கண்டிப்பாக இருக்கும்.
edit sep 22
கீழ்நிலையில் உள்ள காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளைச் செய்தாக வேண்டி யுள்ளது. காவல் துறையினருக்குச் சங்கம் இல்லாததால் உயர் அதிகாரிகளின் செயல்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது.ஒவ்வொரு துறையிலும், தங்களுக்கு மேல் உள்ளவர்களிடம் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஆதாயம் தேடும் எட்டப்பர்கள் எப்போதும் உள்ளனர். இந்த எட்டப்பர்கள் உண்மையைச் சொன்னால் பரவாயில்லை.

தங்கள் இருப்பை நியாயப்படுத்துவதற்காகச் செயல்படும் இதுபோன்ற மனநோயாளிகளை நம்பும் உயரதிகாரிகளையும் சமயம் பார்த்து இவர்கள் கழுத்தறுப்பார்கள். தாங்கள் பாதிக்கப்படும் போது தான் மனநோயாளிகளின் உண்மையான சொரூபம் உயரதிகாரிகளுக்கே தெரிய வரும். அப்போது காலம் கடந்திருக்கும். பிற துறைகளை விடக் காவல் துறையில் இந்தச் செயல் சற்று அதிகமாக இருக்கும்.

கேள்விகள் கேட்டதால், பணியில் மிக மூத்த டி.எஸ்.பி. ஒருவரை கன்னியாகுமரியில் உள்ள கோயிலுக்குப் பாதுகாப்புப் பணிக்காக கோயமுத்தூர் எஸ்.பி.யாக இருந்தவர் அனுப்பினார். பொது வாக, பாதுகாப்புப் பணிக்கு பணியில் இளையவரை அனுப்புவதுதான் வழக்கம். தன்னை எதிர்த்துப் பேசியதால் டி.எஸ்.பி.யை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிய எஸ்.பி.யின் செயலை என்னவென்று சொல்வது? இது அப்போது செய்தியாக வெளிவந்தது. இதுகுறித்து விசாரிக்க வேறு ஓர் அதிகாரி யை காவல் துறை நியமித்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும் தனக்கும் ஏற்கெனவே பிரச்னை உள்ளது; அவர் விசாரித்தால் தனக்குப் பாதகமாகத்தான் முடிவு இருக்கும் என்று எஸ்.பி. நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண காவலர்களின் நிலையைக் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. இது ஓர் உதாரணம் மட்டுமே. ஆனால், வெளியில் தெரியாத பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக, காவல் துறையினரை வைத்து ஏதாவது ஒரு பிரச்னைக்குத் தீர்வு காணச் சென்றால், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் தீர்வு கிடைக்கும் என்பது எழுதப் படாத விதி. இதையும் மீறி இதயமும் மனச்சாட்சியுமுள்ள அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

பொதுவாக, யாராக இருந்தாலும் தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனமான முடிவென்பதில் மாற்றுக் கருத்தில்லை. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவைப் பொருத்தவரையில் தற்கொலை செய்ய முடிவெடுத்தது இது முதல் முறையல்ல என்பது அவர் எழுதி வைத்த கடிதத்தில் இருந்தே தெரிகிறது. மூன்றாவது முயற்சியில்தான் அவர் தற்கொலையில் வென்றிருக்கிறார். தற் கொலைக்கு முயன்று சிரமப்பட்டதற்குப் பதிலாக எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வாழலாம் என்ற வைராக்கியத்துடன் இருந்திருந்தால் வாழ்க்கையில் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும்.

அவருடைய நெருங்கிய தோழியும் டி.எஸ்.பி.யாகப் பணிபுரிபவருமான மகேஸ்வரி, விஷ்ணு பிரியா மிகவும் நேர்மையானவர் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற செய்தி கண்டிப்பாக அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிந் திருக்கும். ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி அவருக்கு சிகிச்சை அளித்திருக்கலாம். அதைவிடுத்து இப்போது யாரைக் குறை கூறி என்ன பயன்? ஒரு நேர்மையான அதிகாரியின் உயிரல்லவா போய்விட்டது. இனி என்ன செய்தால் அந்த உயிர் திரும்பக் கிடைக்கும்?

நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கும்போது அழுத்தம் இல்லாமலா இருந்திருக்கும்? கண்டிப்பாக காவல் துறை உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரி களிடம் இருந்து அழுத்தம் இருந்திருக்கும். அழுத்தம் காரணமாக சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கத் தன்னால் முடியாது என்று விஷ்ணுபிரியா நீதிமன்றத்தில் கூறியிருந்தால், ஒரு நேர்மையான அதிகாரியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளே அழுத்தம் காரணமாக சில வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவில்லையா?அனைத்துத் துறைகளை விடக் காவல் துறையில் அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகளைவிட உயர் அதிகாரிகளுக்குத்தான் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதற்காக ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று தொடங்கினால் காவல் துறையில் யாரும் பணியாற்ற மாட்டார்கள். அதனால், ஒவ்வொரு வருக்கும் மன நலப் பயிற்சியும் உடல் பயிற்சியும் தர அரசு உத்தரவிடலாம்.

பிற இடங்களில் குற்றங்கள் நிகழ்ந்தால் காவல் துறையில் புகார் செய்யலாம். ஆனால், காவல் துறையில் கண்ணியமில்லாமல் பேசுபவர்களைக் களையெடுக்கவும், காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்று காட்டவும் சில சீர்திருத்தங்கள் தேவை. அதற்கு விஷ்ணுபிரியாவின் தற்கொலை முதலெழுத்தாக வேண்டும்.

ஆர். வேல்முருகன்