September 21, 2021

காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்!

“திரும்ப திரும்ப சொல்லியாகிவிட்டது யாரும் கேட்பதில்லை ஆதலால் மீண்டும் துவக்கத்திலிருந்து’ என்றார் பிரஞ்சு சிந்தனையாளர் ஆந்ரே கிடே. சீராக அமல்படுத்தாதலால் பல பிரச்னைகள் தொடர்கின்றன. புதிய ஆரம்பம் பழைய பிரச்னைக்கு. அதுதான் “முதல் தகவலறிக்கை காவல் நிலையத்தில் தாக்கல் செய்தவுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவு.
dec 2 - edit police
குற்றவியல் சட்டம் பிரிவு 154இன்படி காவல் நிலையங்களில், விசாரணை செய்யக்கூடிய புகார்கள் கொடுக்கப்பட்டால் உடனே பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வாய்மொழி புகாரை எழுத்து வடிவத்தில் மாற்றி வழக்கு பதிவு செய்வது காவல்நிலைய அதிகாரியின் பொறுப்பு, அதில் தாமதம் இருக்கக் கூடாது. சட்டம் தெளிவாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் எல்லா வழக்குகளும் பதிவு செய்யப்படுவதில்லை.

முன்பு ஒரு முறை ஹரியாணா மாநில முன்னாள் டிஜிபி மீது தொடரப்பட்ட பாலியல் குற்ற வழக்கில் தண்டனை வழங்கிய நீதிமன்றம், முதல் தகவலறிக்கை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இது தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அது தொடர்பாக மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி காவல் நிலையங்களில் புகார் பெற்ற மூன்று நாள்களுக்குள் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்துள்ளது.

2008ஆம் வருடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வயதுக்கு வராத தனது மகள் காணாமல் போனதைப் பற்றி தாய் லலிதாகுமாரி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார். காவல்நிலைய அதிகாரி வழக்குப் பதிவு செய்யவில்லை. மாவட்டக் கண்காணிப்பாளர் தலையிட்ட பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆயினும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மீண்டும் முறையிடப்பட்டது. நீதி கிடைக்காததால் அரசியல் சாசனம் 32ஆவது பிரிவின் கீழ் மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு விசாரணையின்போது பல தரப்பு விவாதங்கள் கேட்கப்பட்டன. அதில் சிபிஐ தரப்பில், புலன் கொள் புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும், தாமதிக்கவோ வேறு விசாரணைக்கோ இடமே இல்லை என்று கூறப்பட்டது. மேலும் புலன் கொள்ளக்கூடிய தகவல் கிடைக்கப் பெற்றாலே அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்பது குற்றவியல் சட்டம் பிரிவு 154இன்படி வேறு அனுமானத்திற்கு இடமின்றி தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநில தரப்பில், வழக்குபதிவு செய்வதற்கு முன் புகார் உண்மையானதா என்பதை தெளிவுபடுத்திய பிறகு பதிவு செய்தால் அநாவசிய சர்ச்சைகளுக்கும், நிரபராதிகளுக்கு வழக்கால் தொல்லையும் தவிர்க்கப்படும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வுகளை மிகைப்படுத்தி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. மேலோட்ட சரிபார்ப்பிற்குப் பிறகு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில அரசு நிலையாணைகளும் அறிவுரைகளும் கொடுத்துள்ளது என்றும் அதன்படி சரிபார்ப்பிற்கு பிறகே வழக்கு பதிவு செய்தல் உசிதமானது மட்டுமின்றி குற்றமற்றவர்கள் தொல்லைகளுக்கு உட்படுவதும் தவிர்க்கப்படும் என்று வாதிடப்பட்டது. 1977ஆம் வருடம் தர்மவீரா தலைமையில் அமைக்கபட்ட போலீஸ் கமிஷன் தனது பரிந்துரையில் முதல் தகவல் அறிக்கை கையாள்வதைப் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளது.

புகார்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கலாம். வழக்குகள் அதிகமாக பதிவு செய்தால் குற்றப்புள்ளி விவரம் அதிகரிக்கும், பொது அமைதி பாதிக்கப்பட்டதாக சித்திரிக்கப்படும். காவல்துறை மீது குற்றங்களை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழும், காவல்நிலைய மற்றும் சரக அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு காவல்நிலைய எல்லைக்குள் நடந்த குற்றங்களின் புலன் விசாரணையை, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மேற் கொள்ள வேண்டும் என்று குற்றவியல் சட்டம் 156ஆவது பிரிவு கூறுகிறது. இதை காரணமாக வைத்து எல்லைக்குள்பட்டதல்ல என்று கூறி வழக்குப்பதிவு செய்வதில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம், காவல் நிலைய அதிகாரி மீது அதிகமான எழுத்து வேலையை திணிக்கிறது.

இத்தகைய காரணங்களை ஆராய்ந்து போலீஸ் கமிஷன் சில தீர்வுகளை கொடுத்திருக்கிறது. முதலாவதாக, பாதிக்கப்பட்டவர் அலைக்கழிக்கப்படக் கூடாது. ஆதலால் புகார் பதிவு செய்வதற்காக பிரத்யேக புறக்காவல்நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு புகார்கள் பதியப்பட்டு நகல் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சரக காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்ப வேண்டும். மேலும், இதற்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் பிரிவு 154இல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அதில் புகாரின் உண்மைத்தன்மையை அறிய மேலும் விவரங்கள் கேட்டு உறுதி செய்ய அதிகாரம் அளிக்க வழிவகை செய்ய வேண்டும், விசாரணை துரிதப்படுத்த கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1960-70களில் உத்தரப்பிரதேசம் மற்றும் வேறு சில வட மாநிலங்களில் தடையின்றி புகார்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பரீட்சார்த்த முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேச காவல்துறை தலைவர் சாக்ஸனா என்ற ஐபிஸ் அதிகாரி இதனை அமல்படுத்தினார். ஒரே வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முந்தைய வருடத்தைவிட சுமார் நூறு சதவிகிதம் அதிகரித்தன. தில்லியில் 1970ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 81 சதவிகிதம் அதிகரித்தன. வழிப்பறி குற்றங்கள் மட்டும் 725 சதவிகிதம் அதிகரித்தன.

2012 டிசம்பர் மாதம் தில்லியில் நிகழ்ந்த நிர்பயா வன்புணர்ச்சி கொலைக்குப் பிறகு இத்தகைய வன்புணர்ச்சி புகார்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவிற்குப் பிறகு இந்த வருடம் 2013 செப்டம்பர் மாதம் வரை 1148 வழக்குள் பதியப்பட்டன. 2012ஆம் வருடம் பதியப்பட்ட வழக்குகள் 468. ஒன்பது மாதங்களில் கடந்த வருடத்தை விட முந்நூறு சதவீதம் அதிகரித்துள்ளன.

உண்மையில் பார்த்தால் பதிவு செய்வதுதான் அதிகரித்துள்ளது. குற்றங்கள் என்னமோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா நல்ல முயற்சிகளின் முடிவு போலவே, வட மாநிலங்களில் 40 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சுதந்திர வழக்குப் பதியும் முறையும் காற்றோடு போயிற்று

உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு விவாதத்தின்போது பொய் புகார்களை தவிர்ப்பதற்காக மேலோட்ட விசாரணையின் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. கணவன் மனைவிக்குள் ஏற்படும் தகராறுகளிலும் மிகைப்படுத்தப்பட்ட புகார்கள் கொடுக்கப்படுகின்றன. வரதட்சணை ஒழிப்பு சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இம்மாதிரி புகார்களின் உண்மைத்தன்மையை தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

குடும்பத் தகராறுகளில் மிகைப்படுத்திக் கொடுக்கப்படும் புகார்களில் வழக்குகள் பதிவு செய்ய ஆரம்பித்தால் எல்லையே இருக்காது. சொத்து தகராறு, நிலத்தகராறு சம்பந்தபட்ட புகார்களில் பல குற்றங்கள் ஜோடனை செய்யப்பட்டு கொடுக்கப்படும். இம்மாதிரி மனுக்கள் அதற்கான படிவத்தில் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. பொய்புகார்களும் வரும். காழ்ப்புணர்வு காரணமாக புனையப்படும் புகார்களில் மனு கொடுத்தவர் மீது நடிவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. அது ஏற்கெனவே வேலைப்பளுவால் நொந்திருக்கும் காவல் அதிகாரியை விரக்தியடையச் செய்யும்.

சில பொதுப்பிரச்னைகள் மூலம் தம்மை ஊடகங்களில் அடையாளம் காட்டுவதற்கு போராட்டங்களில் ஈடுபடுபர்களின் சட்ட மீறல்கள் காவல் துறைக்கு இன்னொரு தலைவலி. இவ்வாறு விதிகளை மீறி பொது இடங்களில் கூடுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு வழக்குப் பதிவு செய்து பிறகு விடுதலை செய்ய வேண்டும். நேர விரயத்தால் முக்கிய காவல் பணிக்கு இழப்பு. சமயோஜிதமான காவல் அதிகாரிகள் இவ்வாறு பிரச்னை கொடுக்கும் விளம்பரம் தேடும் நபர்களை போலீஸ் வண்டியில் ஏற்றி நகரத்தின் வெளியில் இறக்கி விட்டு நல்லதனமாகப் பேசி அனுப்பிவிடுவார்கள். காவல் நிலைய அதிகாரியின் பொறுப்பு கடினமானது. வாதி, பிரதிவாதி, நீதிமன்றம், நிர்வாகம், காவல் நிலை ஆணைகள், சமுதாயம், ஊடகம், மனித உரிமைகள் ஆணையம், சண்டையிட துடிக்கும் பொது நல விரும்பிகள் என்று கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும். எந்த ஒரு குற்றமும், சட்ட மீறலும் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்படுபவை. யாரோ குற்றம் புரிய குற்ற நிகழ்விற்கு காரண கர்த்தாவாக, குற்றவாளியாக போலீஸ் சித்திரிக்கப்படும் நிலை மாறவேண்டும்.

குற்றப் பதிவுகள், குற்றப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் காவல் பராமரிப்பை கணிக்கும் முறை அகல வேண்டும். மேலும் எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டும் என்பதில்லை. விசாரணை மேற்கொண்டு, தேவைப்பட்டால் மட்டும் கைது செய்தல், நேர்மையான புலன் விசாரணை, சார்பு சாரா சாட்சிகளின் வாக்குமூலம் இவற்றின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் காவல்துறை மீது நம்பிக்கை பிறக்கும்; குற்றம் பதிவு செய்தாலே ஒருவர் மீது களங்கம் உள்ளது என்ற சமுதாயக் கண்ணோட்டமும் மாறும். இது தொழில் நுட்ப யுகம். ஏன் கணினி மூலமும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது?

ஆர். நடராஜ் ஐ பி எஸ்(ரிட்டயர்ட்)