November 29, 2021

கால மாற்றத்தின் கட்டாயம் By கதிர்

ட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஒருவர் பேசுகிறார். கேட்கும்போது சிரிப்பு வருகிறது. அரசியல் சாசனமும் பாட புத்தகமும் சொல்கிறதே தவிர, உண்மை நிலவரம் அப்படி இல்லை என்று தெரியும். அதனால் சிரிப்பு வருகிறது. அனுபவம் பெறாதவர்களுக்கு கோபம் வருகிறது.உலகம் அப்படித்தான். ஐ.நா சபை, சர்வதேச நீதிமன்றம் எல்லாம் இருந்தாலும் சில நாடுகள் மற்ற நாடுகளை விட கூடுதல் சமம். உலக வர்த்தக ஒப்பந்தம், பூமி சூடாவதை தடுப்பது போன்ற முயற்சிகளில் அந்த நாடுகள் கண்ணாமூச்சி விளையாடுவதை பார்க்கும்போது உண்மை புலப்படும்.
edit - aug 16 2
அவை பணக்கார நாடுகள். தாம் சொல்வதை ஏழை நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றன. உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முடிவு எட்ட முடியாமல் போனதற்கு இந்தியாவை குற்றம் சொல்கிறது அமெரிக்கா. வேளாண் பொருட்களுக்கு மானியம் வழங்குவதையும், மலிவு விலையில் தானியங்கள் வினியோகிப்பதற்காக கணிசமாக இருப்பு வைப்பதையும் அமெரிக்கா எதிர்க்கிறது. ஏனைய பணக்கார நாடுகளும்.

அந்த நாடுகள் தமது விளை பொருட்களை கொண்டு குவித்து விற்க இந்தியா போன்ற வளரும் நாடுகள் கதவு திறந்துவிட வேண்டும் என்று கோருகின்றன. `உங்கள் பொருட்களை வாங்கும் சக்தி எங்கள் ஏழைகளுக்கு கிடையாது; அவர்களுக்காக நாங்கள் மானியத்தையும் தானிய சேமிப்பையும் தொடர வேண்டியது அவசியம்` என்று இந்தியா கூறுகிறது.

`ஏழைகளும் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்படும் அரசுக்கு, அந்த ஏழைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது` என்று அமெரிக்க அமைச்சரிடம் முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார் மோடி. மேலைநாடுகளுக்கு பெரிய ஏமாற்றம். அந்த நாடுகளில் பணக்காரர்களுக்காகவே சட்டங்களும் திட்டங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டியது ஏழையின் பொறுப்பு என்ற முதலாளித்துவ சித்தாந்தம் அங்கே குடி கொண்டுள்ளது. அவர்களுக்காக அதிகபட்சம் அரசு செய்யக்கூடியது இரவு தங்குமிடம் தருவதும், சாப்பாடு கூப்பன் வழங்குவதுமே. மருத்துவமும் இலவசமாக அளிப்போம் என்று கூடுதலாக ஓரடி எடுத்து வைத்த ஒபாமாவை தடுத்து நிறுத்தி, அந்த துணிச்சலுக்காக அவரை தண்டிக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளது எதிர்க்கட்சி.

பூமியின் வெப்பம் அதிகரிப்பதை தடுக்கும் முயற்சிக்கும் மேலைநாடுகள் இதே பாணியில் முட்டுக்கட்டை போடுகின்றன. உண்மையில் இந்த நாடுகள்தான் பிரச்னைக்கே காரணம்.

வெப்பமயம் இன்று நேற்று உருவான தலைவலி அல்ல. தாமஸ் நியுகாமன் என்ற பிரிட்டிஷ் கொல்லர் தனது பட்டறையில் நீராவி இன்ஜினை உருவாக்கிய 1712ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போடப்பட்ட பிரச்னை .நிலக்கரியை எரித்து தண்ணீரை கொதிக்க வைத்து நீராவியாக்கி இன்ஜினை இயக்கலாம் என்று அந்த ஆள் நிரூபித்த நேரத்தில் தொழில் புரட்சிக்கான விதை ஊன்றப்பட்டது. 1886ல் கார்ல் பென்ஸ் தனது மோட்டார் வேகனில் வீதியுலா சென்றபோது, வாகன புரட்சிக்கான விதை தூவப்பட்டது.

நிலக்கரி மற்றும் ஆயிலை எரிப்பதால் உருவாகும் வாயுக்கள் காற்று மண்டலத்தில் அடர்த்தியாக பரவி, சூரியன் மூலம் பூமிக்கு வரும் வெப்பம் முழுவதுமாக திரும்ப முடியாமல் தடுப்பதால் க்ரீன்ஹவுஸ் எஃபக்ட் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தொழில் உற்பத்தி, வாகனங்கள், மின்சாரம் போன்ற துறைகளில் நிலக்கரியை ஆயிலை அதிகம் பயன்படுத்தி பலன் அடைந்தவை அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள். நூறாண்டுகளுக்கு மேலாக அவை எரித்த புகையின் விளைவு பூமியின் வெப்பம் உயர்ந்து பலவிதமான வானிலை, நிலத்தடி பாதிப்புகளை எதிர்கொள்கிறோம்.

பூமியை சூடாக்கும் வாயுக்கள் உற்பத்தி ஆவதை பத்து ஆண்டுகளில் 5 சதவீதமாவது குறைப்போம் என்று ஜப்பானின் கியோட்டோ நகரில் 1992ல் சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. அதை ஏற்க மாட்டோம் என்று அமெரிக்க செனட் நிராகரித்தது. 2001ல் ஜார்ஜ் புஷ் அந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

கோபத்துக்கு காரணம், இந்தியா, சீனா போன்றவை மிக அதிகமாக நிலக்கரி, ஆயில் எரித்த போதிலும் அவற்றுக்கு 5 சதவீத குறைப்பு பொருந்தாது என்பதுதான். `100 வருடத்துக்கு மேலாக நீங்கள் நிலக்கரியும் ஆயிலும் எரித்து உற்பத்தியை பெருக்கி முன்னேற்றம் அடைந்துவிட்டீர்கள். நாங்கள் இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்கு எங்களால் குறைக்கவோ நிறுத்தவோ இயலாது` என்று இந்தியா – சீனா சொன்னதை அமெரிக்கா ஏற்கவில்லை.

மட்டும் அல்ல. அனல் மின்சாரத்துக்கு மாற்றாக அணு மின்சாரம், பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பயோ ஃபியுவல், புகை மாசு தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மேலைநாடுகள் கையாள தொடங்கின. புகை கக்கும் தொழிற்சாலைகளின் எந்திரங்கள் புது தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்பட்டன. `எங்களுக்கும் அந்த தொழில்நுட்பத்தை தாருங்கள். ஆலைகளை சீரமைக்க நிதி கொடுங்கள்` என ஏழை நாடுகள் கேட்டன. சீர்கேடுக்கு காரணமான நாடுகள் என்ற அடிப்படையில் மேலைநாடுகள் அவ்வாறு உதவ வேண்டும். உதவுகிறோம் என்று கூறின. ஆனால் நிதி திரட்டவோ ஒதுக்கவோ இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இந்தியாவும் சீனாவும் இறங்கி வராதவரை எதுவும் நடக்காது என பூச்சாண்டி காட்டுகின்றன.

இப்போது நமது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுபவை அதிக புகை க்க்காத கார்கள். வெப்பம் உண்டாக்கும் குண்டு பல்புகளை ஒழித்து, வளைந்த பல்புகளை தயாரிக்கிறோம். ஃப்ரிட்ஜ், டீவி, கம்ப்யூட்டர் போன்ற மின்சார, மின்னணு சாதனங்களும் சூடாகி வெப்பத்தை பரப்புகின்றன. அவற்றின் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் செய்து, வெப்பத்தின் அளவை குறைக்கும் முயற்சியில் இந்திய கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஏராளமான செலவாகும்.

பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான இந்த மல்லுக்கட்டை ரஷ்யா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. `பூமி வெப்பமாதல் என்பதே பெரிய புருடா. சிறு சிறு வெப்ப மாறுதல்களை சமாளித்து சமநிலையை தக்க வைத்துக் கொள்ளும் சக்தி இயற்கைக்கு உண்டு. வெப்பம், மாசு, க்ரீன்ஹவுஸ் என்று பீதியை கிளப்பி விடுவது அமெரிக்காவும் நண்பர்களும்தான். இதுவரை தங்கள் பாடாவதியான பொருட்களையும் காலாவதியான தொழில்நுட்பத்தையும் ஏழை நாடுகளுக்கு விற்று காசு பார்த்த இந்த நாடுகள், இப்போது அதையெல்லாம் மாற்றியாக வேண்டும் என்று சொல்லி இன்னும் காசு பார்க்க டுபாக்கூர் வேலை செய்கின்றன` என்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.

எனினும், வெப்பம் கூடுவதன் விளைவுகள் மறுக்க முடியாதபடி கண்முன் விரிகின்றன. பருவமழை தவறுகிறது. கோடை வெயில் குளிர்காலத்தில் நீடிக்கிறது. நிலத்தடி நீர் அதிவேகமாக வற்றுகிறது. வளமான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்குகின்றன. கணிக்க முடியாத புயல்கள் உருவாகின்றன. பாதுகாப்பான பகுதி என வரைபடத்தில் குறியிட்டுள்ள நாடுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்படுகிறது. வானிலை மாறும் வேகம் நிபுணர்களை திணற வைக்கிறது.

இயற்கையில் நிகழும் இந்த மாற்றங்கள் ஒவ்வொரு மனிதனையும் தீண்டக்கூடியவை. 1800ல் 100 கோடியை எட்டியது உலக ஜனத்தொகை. அது இரு மடங்கு ஆக 130 ஆண்டுகள் பிடித்தது. அடுத்த 100 கோடி சேர 30 ஆண்டுகள் போதுமானதாக இருந்தது. அதை தொடர்ந்து ஒவ்வொரு 100 கோடிக்கும் இடைவெளி 15, 12 ஆண்டுகளாக சுருங்கி, இன்று 724 கோடி மனிதர்களையும் அவர்களின் எண்ணற்ற கோடி பாவங்களையும் சுமந்து மெல்லச் சுழல்கிறது நமது பூமி. இதே வேகத்தில் வெப்பம் அதிகரித்தால் அழிவுக்கு அதிக காலம் காத்திருக்க நேராது.

பிரசில், சவுத் ஆப்ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளும் கைகோர்த்து இந்த பிரச்னையில் பணக்கார நாடுகளை வழிக்கு கொண்டுவர முயன்று வருகின்றன. `பேசிக்` என்று இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டி உள்ளனர். மூன்று நாட்களுக்கு முன் டெல்லியில் பேசிக் அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். பூமி வெப்பம் குறித்த புதிய உடன்படிக்கை பாரிஸ் நகரில் 2015 நவம்பரில் கையெழுத்தாக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் அதற்கு முன்னோட்டமான பேச்சுவார்த்தைகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடக்கும். அதில் உடன்படிக்கையின் மாதிரி இறுதி செய்யப்படும். படவேண்டும்.
edit - aug 16 1
மோடி அரசு இந்த விவகாரத்தில் உறுதியுடன் நிற்பது ஆறுதல் அளிக்கிறது. முந்தைய அரசின் நிலைப்பாடுதான் என்றாலும், நமது கருத்தை அடித்தொண்டையில் முணுமுணுக்காமல் உரத்த குரலில் எடுத்துச் சொல்லி உலக அளவில் தாக்கம் உண்டாக்க முனைகிறது. தாதாவுடன் மோத நேரும்போது வீதியில் போவோர் வருவோரை கூவியழைத்து இந்த அநியாயத்தை பார் பார் என்று கூட்டம் சேர்ப்பது புத்திசாலித்தனமான உபாயம். சர்வதேச அரங்கிலும் பலன் அளிக்க வல்லது. குரல் கொடுக்க சீனாவை சேர்த்துக் கொண்டது கால மாற்றத்தின் கட்டாயம் மட்டுமல்ல, மெச்சத்தக்க ராஜதந்திரமும் கூட.

(இழு தள்ளு 49/ கதிர் /குமுதம் ரிப்போர்ட்டர் 17.08.2014)