October 16, 2021

காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ?

“”அவர்கள் காலணிகளை அணிந்து நீ நடந்து பார்” என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கிளேர் லூரூ டூபே கூறுவார்.

“அப்படி என்றால் என்ன? “உன்னிடம் வந்து நியாயம் கேட்பவரின் கூற்றை நீ உன் அனுபவங்களை வைத்து அணுகாதே, அவருடைய அனுபவம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்; அப்பொழுதுதான் நல்ல முறையில் தீர்ப்பளிக்க முடியும்’ என்று பொருள். இந்த அணுகுமுறையை நாம் அனைவரும் நம் சமூகப் பரிமாற்றங்களில் கடைபிடித்தால் மனித நேயம் தழைக்கும்.
Toddler Standing in Father's Shoes
பிரெஞ்சு நாட்டு ராணி மேரி அன்டாய்நெட், அந்நாட்டு மக்கள் ரொட்டி இல்லாமல் பட்டினியால் தவிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும், “ஏன்? கேக் சாப்பிடட்டுமே?” என்றாராம். அரண்மனை சொகுசும் செüகரியமும் மட்டுமே அறிந்தவருக்கு வெளியே வறுமையும் சோகமும் இருப்பது தெரியவில்லை. வந்தது புரட்சி, வீழ்ந்தது மன்னராட்சி; பிறந்தன ஜனநாயகத்தின் உயிர்ப்புச் சொற்கள் “”சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்”.

அன்று பிரெஞ்சு நாட்டுப் பிரபுக்களுக்கு ஏழைகளின் துயரம் புரியவில்லை.

காலணி கடைக்குச் செல்வோமா? இன்றுபோல நினைவுக்கு வருகிறது. “இந்திரா காந்தி சுடப்பட்டார்’ என்ற செய்தி வந்த நேரம். “”கொன்றவர் முஸ்லிமாக இருக்கக்கூடாது” என்று என்னருகே ஒரு குரல் கேட்டது. படித்த, செல்வாக்கு படைத்த அவர் இஸ்லாமியர். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று திகைத்தேன். பின் வடக்கிலும் ஏன், இங்கே கோவையிலும் நடந்த “சீக்கியர் படுகொலை’ என்ற கோர தாண்டவம் அவர் அப்படிக் கூறியது ஏன் என்பதை எனக்குப் புரியவைத்தது.

சிறுபான்மையினருக்குத்தான் அது புரியும். மதம் சார்ந்த சிறுபான்மையினராக இருக்கலாம். மொழி, இனம், ஜாதி அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கலாம். ஏன் ஆண்பால், பெண்பால் என்றால் – பெண்கள்தான் சிறுபான்மையினர். ஒரு நொடியில் தாங்கள் தனிப்பட்டுப் போவோம் என்று தெரியும் அவர்களுக்கு. மற்றவருக்குத் தெரியாது. ஏன் என்றால் அவர்களுக்கு எண்ணிக்கையின் பலம் உண்டு.

இது போலவே இன்னொரு நிகழ்வு – கோவை குண்டுவெடிப்பு வழக்கின் மேல்முறையீடு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த இடங்கள், பிணங்கள், இன்னும் பலவற்றைப் போலீஸôர் “விடியோ’ படம் எடுத்திருந்தார்கள். அது வழக்கின் முக்கிய ஆவணம். இந்தப் படத்தை, விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் பார்த்தார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 163 பேர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள், ஆவணங்கள்.

அந்தத் தீர்ப்பின் சில வாக்கியங்கள், “”அந்த சாட்சிகளில் ஒருவர் சொன்னார், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று இரவில் பல இளம் இஸ்லாமிய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் அவர்களை 8 அல்லது 9 பேர்களாக நிற்கவைத்து புகைப்படம் எடுத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அல்ல, அவர்கள் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே. அவர்களில் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்ல. நினைத்துப் பாருங்கள் – எவ்வளவு கூனிக்குறுகிப் போயிருப்பார்கள்?”.

“”நான் குற்றம் செய்யவில்லையே” என்று அன்று நீங்கள் தில்லியிலோ கோவையிலோ கத்தியிருந்தால்கூட யார் காதிலும் விழுந்திருக்காது. இது ஆணிகள் பொருந்திய காலணி.

அடுத்த ஜோடிக் காலணியைப் பார்ப்போம். இருபது ஆண்டுகள் முன்னிருக்கும். நான் நீதிபதி பதவி ஏற்பதற்கு முன்னால் கியூபா நாட்டு எழுத்தாளர் மரியா ஐரீன் போஃர்னஸ் எழுதிய கியூபா புரட்சி பற்றிய நாடகத்தில் பங்கேற்றேன். ஐந்து கதாபாத்திரங்கள். கணவன், மனைவி, கணவனின் நண்பன், வீட்டில் உதவி செய்யும் பெண்மணி, வீட்டில் அடைக்கலம் புகுந்த இளம்பெண். நான் அந்த வீட்டில் வேலைசெய்யும் பெண்மணி. ஒத்திகை நடக்கும் அந்த சில மணி நேரங்களில் நான் நின்றுகொண்டும் வேலை செய்துகொண்டும் இருப்பேன். எஜமானி நாற்காலியில் அமர்ந்திருப்பார் – வேலை செய்யாமல். அந்த இரண்டு மணி நேரத்துற்குள்ளாகவே எனக்கு எரிச்சல் வரும், “நான் மட்டும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்’ என்று. எவ்வளவு மணி நேரங்கள், நாள்கள், வருடங்கள் நமக்கு வீட்டில் உதவி செய்பவர்கள் இதையே செய்கிறார்கள்? அன்றிலிருந்து நான் “வேலையாள்’ என்று சொல்வதில்லை. நாம் செய்ய வேண்டிய அலுவல்களை நமக்காகச் செய்து உதவி செய்கிறார்கள். நாம் நன்றிக் கடனல்லவா செலுத்த வேண்டும்? அதை விடுத்து அவர்களைத் திட்டி, கோபித்து சரியாகக்கூட ஊதியம் கொடுக்காமல்… ஒரு நாள் வெளியே சாப்பிட்டால் ஹோட்டல் பில்லைப் பாருங்கள். அவர்களுடைய மாத ஊதியத்தை ஒப்பிடுங்கள். அந்தக் காலணி எப்படி இருக்கிறது? கடிக்கிறதா?

அடுத்த ஜோடிக் காலணி திருநங்கைகளுடையது. திருநங்கைகள் கூடி தில்லியில் ஒரு பொது விசாரணை நடந்தது. அதில் நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றேன். சோகமயமான வாழ்க்கை. ஹரியாணாவிலிருந்து வந்த ஒரு திருநங்கை கவிதையாக ஒரு கேள்வி கேட்டார். “”இரவுமில்லாத, பகலுமில்லாத மாலைப்பொழுது அழகு என்கிறீர்களே? அப்படித்தானே நாங்களும்? எங்களை மட்டும் ஏன் வெறுக்கிறீர்கள்?”. அவர்களுடைய உடல் “ஆண்’ என்று அடையாளம் காட்டும். உள்ளமோ நான் – “பெண்’ “பெண்’ – என்று கதறும். எப்படிப்பட்ட துயரம், நினைத்துப் பாருங்கள். எவ்வளவு படிவங்கள் நாம் பூர்த்தி செய்கிறோம். ஆண்/பெண் என்று குறிப்பிடும் இடத்தில் தயக்கம் இல்லாமல் நாம் ஒன்றைக் குறிப்பிடுகிறோம். அந்த இடத்தில் அவர்களுக்குப் பேனா தடுமாறுகிறது. “”நான் ஆணா, பெண்ணா? எங்கு குறியிடுவது?” என்ற கேள்வி எழுகிறது. ஏதோ ஒன்றில் குறியிடுவதுதானே என்று அலட்சியமாக சொல்லாதீர்கள். இது “”நான் யார்” என்பது பற்றியது. இதில் “”ஏதோ”வெல்லாம் கிடையாது. அதுபோலவே ஆண், பெண் என்று அடையாளம் காட்டும் பொதுக் கழிவறைகள். ஆண் பிரிவுக்குச் சென்றால் இவர்களுக்குக் கிடைக்கும் பரிகாசம், ஏளனம். பெண்கள் பிரிவுக்குச் செல்லமுடியாது. பின்?

சில வருடங்களுக்கு முன்பு நடந்த கதையல்ல, நிஜம். ஒரு திருநங்கைக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவரை ஆண்கள் சிறைக்கு அனுப்பலாமென்றால் அங்கு பரிகாசம் மட்டுமல்ல பாலியல் வன்முறையும் பரிசாகக் கிடைக்கும். பெண் குற்றவாளிகளோ “இங்கே அனுப்பாதீர்கள்’ என்று சொல்லிவிட்டனர். மனிதநேயமுள்ள அந்த சிறைக்காவலாளர் தன் அரசு இருப்பிடத்தில் இருக்கும் “அவுட்-ஹெüசில்’ அவரைச் சிறை வைத்தார். இது அந்த அதிகாரியின் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. அதிகாரியிடம் காணப்பட்ட அந்தப் புரிதல் இன்றும்கூட மக்களிடம் பரவியதாகத் தெரியவில்லை. இந்தக் காலணிக்குள்ளே கால் செல்லவில்லை!

அடுத்தது ஒரு பயங்கரம். நான் வழக்கறிஞராக இருந்த காலத்தில் ஒரு பெண், குடும்ப நீதிமன்ற வழக்கு சம்பந்தமாக என்னைச் சந்தித்தார். வயது இருபது – இருபத்திரண்டு இருக்கும். பொதுவாக எல்லாக் கட்சிக்காரர்களும் தங்கள் வழக்கைப் பற்றி ஒரு மணி நேரம் சொல்வார்கள் என்றால், கசந்துபோன தம்பதிகள் பத்து மணி நேரம் சொல்வார்கள். அதாவது, ஒரு சம்பவம் விடாது எல்லாவற்றையும் கொட்டுவார்கள். எல்லா கசப்பும் உரைப்பும் வெளியே வரும். முதலில் நாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். பிறகுதான் வழக்கின் அணுகுமுறை, தீர்வைப்பற்றி ஆலோசிக்க வேண்டும். அவள் வித்தியாசமாக இருந்தாள். அமைதியாக – சலனமே இல்லாமல், குரலில் ஏற்றத்தாழ்வே இல்லாமல் ஒப்பிப்பது போல சொல்லிக்கொண்டே வந்தாள். உணர்ச்சி இல்லை, முகபாவத்தில் மாற்றம் இல்லை.

“”சாப்பாடு சரியா இல்லைன்னா அவர் என்ன செய்வார் தெரியுமா?”

“”என்ன?”

“”இரவில் வீட்டுக்குள் விடமாட்டார், வெளியே நாய் படுக்கும் இடத்தில்தான்”.

“”என்ன?” – முந்தைய என்னவிற்கும் இந்த என்னவிற்கும் பல காதம் வித்தியாசம். “அலறினேன்’ என்று கூட சொல்லலாம்.

“”நாய் படுக்கும் இடம் மேடம்”.

“”கோபம் வந்ததா உங்களுக்கு?”

“”வரும் மேடம்”. இதுவும் அதே குரலில்.

“”பொய் சொல்கிறாரோ? இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா?”

அப்பொழுதுதான் அந்தக் கைகளைப் பார்த்தேன். அந்தக் கைகளிடையே ஒரு கைக்குட்டை பறித்து, கிழிக்கப்பட்டு செத்துக் கொண்டிருந்தது. அவர் சொல்வது உண்மை. எவ்வளவு கனவுகளுடன் அவர் திருமணம் செய்துகொண்டிருப்பார்? நாயுடன் படுக்கவா பெற்றோர் அவரைக் கட்டிக்கொடுத்தனர்? அந்தக் கணவனுக்கு அம்மா இருந்தாள், அக்கா – தங்கைகள்கூட இருந்தார்கள். ஒருவருக்குமா இதுமனித உரிமைப் பறிப்பு என்று தோன்றவில்லை? இந்தக் காலணிகள் எரிகின்றனவா?

அடுத்த காலணி உங்களுக்குக் கொள்ளாது, சிறியவை. குழந்தைத் தொழிலாளர் பலரை விடுவித்து சென்னைக்கு அழைத்துவந்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்கள். இந்தக் கொடுமை ஒழியவேண்டும் என்று அந்தக் குழந்தைகள் எல்லோரும் கொடி தூக்கினார்கள். பொதுக்கூட்டங்கள் நடத்தி இந்த அவலங்களை ஒழிக்க முடியுமென்றால் நம் நாடு சுவர்க்க பூமியாகியிருக்கும். அவைகள் ஒழிக்கப்படுவதில்லை. இருந்தும் ஒரு சின்ன நம்பிக்கை. இந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பரிமாறப்படும் எண்ண விதைகளாவது விளைநிலத்தில் விழாதா என்று? நப்பாசை என்று கூடச் சொல்லலாம். அங்கே பல குழந்தைத் தொழிலாளர்கள்; சிலருடன் பேச முடிந்தது.

அங்கேதான் ஹஸீனாவைச் சந்தித்தேன். ஊதா நிற உடை. “”ஹஸீனாவுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டேன். “”ஒரு பலூன் அம்மா; ஒரு பலூன் வேண்டும். அதைப் பிடித்துக்கொண்டு உயர உயரப் பறக்கணும்”.

ஏழைக் குழந்தைத் தொழிலாளர் என்றாலும் கனவு காணும் உரிமை ஹஸீனாவுக்கும் உண்டு. ஹஸீனாவுக்கு பெற்றோர்கள் நிலாச்சோறு ஊட்டியிருப்பார்களா? ஹஸீனாவின் பாட்டி, “ஒரே ஒரு ஊரிலே’ கதை சொல்லியிருப்பாரா? பிறந்த நாள் கொண்டாடியிருப்பாரா? அட ஒரு மணிநேரம் பாண்டி விளையாட்டுதான் ஹஸீனா ஆடியிருப்பாரா?

காலை 4 மணிக்குத் தொழிற்சாலை வண்டி வந்து அழைத்துச் சென்றால் இரவுதான் வீடு என்று விதிக்கப்பட்டிருக்கும் ஹஸீனாவுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம்? ஒரு பலூனைப் பிடித்துக்கொண்டு பறந்தால் இந்தச் சிறையிலிருந்து பறந்துவிடலாம் என்று ஹஸீனாவுக்குத் தோன்றியதோ?

நமக்கே தெரியும், தொழிற்சாலைகளில், வீடுகளில், ஹோட்டல்களில் எவ்வளவு குழந்தைத் தொழிலாளர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் உரிமைகள் ஹஸீனா போன்ற குழந்தைகளுக்கும் உண்டு. வழக்கமான கதைதான்; சட்டமிருக்கிறது, சமூகம் மாறவில்லை. ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தமும் இருக்கிறது. நம் வீட்டுக்குழந்தைகள் போலத்தானே ஹஸீனாவும் மற்றவர்களும்; ஆனால் நாம் ஏன் அவர்களைக் குழந்தைகளாக இருக்கவிடவில்லை?

காலணிக்கடை இதுவே; இன்னும் பல காலணிகள் – சில குத்தும், சில கடிக்கும். ஆனால் போட்டுப் பார்த்தோமானால் மெதுவாகப் புரியும் – கடையில் இருக்கும் காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறவேண்டும் என்று!

பிரபா ஸ்ரீதேவன்(உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.)