September 18, 2021

காமிக் வடிவில் வெளியான மோடி வாழ்க்கைப் புத்தகம் ஹிட்!

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி டீக் கடை ஹிட்டையடுத்து மோடியின் இளமை கால வாழ்க்கை பற்றிய காமிக் புத்தகம் ஒன்றுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்தின் போது இந்த புத்தகத்தை இலவசமாக வினியோகிக்க பா.ஜ.வினர் திட்டமிட்டுள்ளனர். – ரன்னேட் பிரகாஷன் என்பவர் தலைமையில் பால நரேந்திரா என்ற தலைப்பில் புளூ ஸ்நெயில் அனிமேஷன் நிறுவனம் இந்த காமிக் புத்தகத்தை வடிவமைத்துள்ளது.
bal-narendra-comics
எளிய மொழியில் உருவாகியுள்ள பால நரேந்திரா காமிக் புத்தகத்தில், மோடி வீட்டு வேலைகள் செய்வது, தாய்க்கு உதவி செய்வது, துணி துவைப்பது உள்பட தன் வேலைகளை தானே செய்து கொள்வது, டீக்கடையில் தந்தைக்கு உதவியாக இருப்பது, இந்திய & சீனா போரின் போது எல்லையில் வீரர்களுக்கு அவ்வப்போது டீ வழங்குவது, ஏரியில் முதலையிடம் சிக்கிய நண்பனை காப்பாற்றியது, விவேகானந்தர், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை படிப்பது போன்ற காட்சிகளுடன் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியில் கபடி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற சக நண்பர்களுக்கு வியூகம் வகுத்து கொடுத்தது, பள்ளியில் இடிந்த சுவரை எழுப்ப நன்கொடை வசூலித்து கொடுத்தது உள்பட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவருடைய இளமை கால வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காமிக் புத்தகத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது