September 18, 2021

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் வீற்றிருக்கும் வாய்ப்பை மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார். நான்கு முறை தொடர்ந்து நேரு பிரதமராக இருந்தார். அவருக்கும் இந்திரா காந்திக்கும் பிறகு வேறு எந்தப் பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு இருமுறை பிரதமராக இருக்கும் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு மட்டும்தான் அமைந்தது. அவருக்கு அது பெருமை, அதுவே பதவிக்கு ஏற்பட்ட சிறுமை.ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக, கட்சியின் மக்களவைத் தலைவராக நேரு விளங்கினார். அது மக்களவைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் வளர்ச்சியைத் தந்தது.
nov 19 - commonwealth.mini
அதற்கு மாறாக, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல், அதைவிட மேலாக 1999 பொதுத்தேர்தலில் தெற்கு தில்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மகானுபாவர் மன்மோகன் சிங், மாநிலங்களவையின் உறுப்பினராக, அங்கு தலைவராக இருந்தபடி பிரதமர் பதவியில் பத்தாண்டு காலத்தைச் சாதித்துவிட்டார்.

தென்னாப்பிரிக்காவில் இன அழிவு நடைபெற்றது என்பதற்காக இந்திய மக்களின் உணர்வுகளை,கண்டனத்தை வெளிப்படுத்த மக்கள் சபையில் ஒரு கண்டனத் தீர்மானத்தை பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிறைவேற்றினார். அத்தகைய நெருக்கடி, மக்கள் தொடர்பு எதுவும் இல்லாத காரணத்தால், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் பற்றிக் கவலைப்பட வேண்டிய கட்டாயம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்படவில்லை.

காமன்வெல்த் அமைப்பில் இந்தியா சேருவது பற்றி பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1949இல் தந்த விளக்கத்தில் ஒன்றை முக்கியமாக வலியுறுத்தினார்: “நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில், எத்தகைய ரகசிய உடன்பாட்டையும் நாம் செய்து கொள்ள மாட்டோம்’.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் மனித உரிமைகள் பற்றிய விவரங்களை ஆராயவும், தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் மக்கள் உரிமை அமைப்பு ஜெனிவா நகரில் உள்ளது. 2009இல் கூடவிருந்த மக்கள் உரிமை அமைப்புக் கூட்டத்தில், “மனித உரிமைகளை மீறி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆராயவேண்டும் என்று சுவிட்சர்லாந்து எழுப்பிய ஒரு விவாதத்துக்கு 15 நாடுகள் ஆதரவு தந்தன.

ஆனால் தமிழ் மக்களுக்கு தக்க உதவிகளை இலங்கை அரசு செய்துள்ளது என்று ஒரு எதிர்ப்புத் தீர்மானத்தை இலங்கைப் பிரதிநிதி அனுப்பினார். அதற்கு ஆதரவாக, இந்தோனேசியா, சீனா, அரேபியா, பாகிஸ்தான், கியூபா போன்ற பலநாடுகள் ஆதரவு தந்தன. இதற்கிடையில் 2009 மே 22 தேதியிட்ட இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியப் பிரதிநிதியும் கையெழுத்திட்டுள்ளது வெளிப்பட்டது. இந்தியாவே இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்ததால் 16 நாடுகள் அடங்கிய சுவிட்சர்லாந்து தீர்மானம் செயலற்றதாகிவிட்டது.

1949இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வெளிநாட்டுக் கொள்கையில் எந்த நாட்டுடனும் எத்தகைய ரகசிய உடன்பாடும் இருக்காது என்று திட்டவட்டமாக அறிவித்தார். 2009இல் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை – இன அழிவு செயல்பாடுகளை ஆராயவேண்டுமென வந்த தீர்மானத்தையே எதிர்த்து இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டது. ஆக வெளிநாட்டு கொள்கையை நேர்மையாக ஆராய்வதுகூட தேவையில்லை என்று வெளிப்படையாக ஒரு ஏற்பாடு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ரகசிய உடன்பாடு ஏதாவது ஏற்பட்டதா, அது தொடர்ந்து நீடிக்கிறதா என்பது தெளிவாக்கப் படவேண்டும்.

இன வேறுபாடுகளை கட்டாயப்படுத்திய தென்னாபிரிக்க நாடு காமன்வெல்த் அமைப்பில் இடம்பெறக்கூடாது என்ற பிரதமர் நேருவின் முயற்சி வெற்றி பெற்றது. நேருவின் உறுதியான வெளியுறவுக் கொள்கைக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் உரிமை அமைப்பில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து நடனமாடியது.

தமிழகச் சட்டப்பேரவை அடுத்தடுத்து தீர்மானங்களைப் போட்டாலும், மக்களின் குரல் மகேசனின் குரல் என்றாலும்,, இன்று அது செவிடன் காதில் ஊதிய சங்கின் முழக்கமாக ஆகிவிட்டது.

இந்தியப் பிரதமரும் அவர் சார்ந்த கட்சியின் தலைவரும் மந்திரிப் பிரதானிகளாக உள்ள ஆளவந்தார்களும் மக்களின் தொடர்ந்த வேண்டுகோள்களுக்கும், குரலோசைக்கும் மதிப்புத் தரவில்லை என்றாலும் நாம் கவலைப்பட வேண்டாம். பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. வாக்குச்சாவடிகளில் நின்று நல்வாக்குத் தரும் மக்கள் தமது விரலசைவினால் தரும் தீர்ப்பினால் திட்டவட்டமாக காலம் மாறும்; கவலைகள் தீரும்; நிஜமான மக்களாட்சி மீண்டும் மலரும்!

இரா. செழியன்