October 19, 2021

காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

அந்தமான் நிகோபர் தீவில் போர்ட் பிளேரில் இருந்து வடக்கு வங்க கடல் பகுதிக்கு தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் ‘அக்வா மரைன்’ என்ற படகில் 45 பயணிகள் சுற்றுலா சென்றனர். இவர்களில் 33 பேர் காஞ்சிபுரத்தையும், மற்றவர்கள் மும்பையையும் சேர்ந்தவர்கள். மாலை 3.15 மணியளவில் ரோஸ் தீவுக்கு அருகே படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்தது. அதிலிருந்த பயணிகள் கடலில் விழுந்தனர். அவர்களில் 27 பேர் மூழ்கி இறந்தனர். 13 பேர் மீட்கப்பட்டனர்.இன்னும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
jan 27 = andaman boat accident
அந்தமான் கடலில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் உட்பட 27 பேர் பலியாகினர். பலரை காணவில்லை.அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்கப்பட்டவர்கள் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த படகில் 25 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், 45 பேர் பயணம் செய்ததால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தில் அந்தமான் நிர்வாகம் நேற்று காலை முதலே ஈடுபட்டு இருந்த காரணத்தால், மீட்பு பணிக்கான நடவடிக்கையை திடீரென மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. கவிழ்ந்த படகை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் கேபினில் மேலும் சில பயணிகள் சிக்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அந்தமான் கவர்னர் ஏ.கே.சிங்கை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே விவரங்களை கேட்டறிந்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்க கவர்னர் சிங் உத்தரவிட்டுள்ளார்.பலியானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணத்தை அறிய, நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா குழுவினர் கடந்த வாரம் அந்தமான் சென்றனர். அந்தமானில் அவர்கள் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு ஒரு படகு மூலம் ரோஸ் ஐலேண்ட் என்னும் இடத்துக்கு நேற்று காலை செல்ல முடிவு செய்தனர்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. சுமார் 25 பேர் செல்லக்கூடிய படகில் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகளை படகுகாரர் ஏற்றியுள்ளார். மேலும் பயணிகள் யாருக்கும் லைப் ஜாக்கெட் உள்பட எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை. ரோஸ் ஐலேண்டுக்கு சென்றவர்கள் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் போர்ட்பிளேயருக்கு திரும்பியுள்ளனர்.

மாலை 4 மணி அளவில் வடக்கு வங்கக்கடலில் படகு வந்தபோது போர்ட்பிளேயருக்கு அருகில் கடல் அலைகள் அதிகம் இருந்ததால், படகு தள்ளாடியது. ஏற்கனவே படகில் ஆட்கள் அதிகம் இருந்ததால் பாரம் தாங்காமல் கவிழந்தது. படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு ஒரு பக்கம் திரண்டதால், கடலில் விழுந்து மூழ்கி தத்தளித்தனர். பலர் நீரில் பரிதாபமாக இறந்தனர்.கடலில் படகு கவிழ்ந்த தகவல் கிடைத்து மீட்பு பணியினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் ஆனால், அதற்குள் 27 பேர் கடல் நீரில் பிணமாக மிதந்தனர்.

27 பேரின் சடலங்களும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது. கடலில் உயிருக்கு தத்தளித்த 16 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர், சிறிய படகுகள், சிறிய கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் இருள் சூழந்ததால், தேடும் பணியில் தொய்வு ஏற்ப்பட்டது. ஆனாலும் ஒளி வீசும் விளக்குகள் மூலம் தேடும் பணி நடைபெற்றது.