September 18, 2021

காங்கிரசில் ஏன் சேர்ந்தேன் ?குஷ்பூ விளக்கம்! வீடியோ

”எப்போதும் அலையுடனே ஏன் பயணிக்க வேண்டும்? அலையை எதிர்த்தும் நீந்தலாம். அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளேன். காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி. காங்கிரஸ் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைத்துக்கொண்டு செல்ல முடியும். அதனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்.” என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
kushboo soniya
தி.மு.க.வில் இருந்த நடிகை குஷ்பு, கடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தி.மு.க.வில் இருந்து விலகினார்.இந்த நிலையில், நேற்று அவர் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.இதற்காக டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.அப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தித் தொடர்பாளர் ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,”இது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி தருணம் ஆகும். காங்கிரஸ் கட்சியில் என்னை ஓர் உறுப்பினராக, தொண்டராக இணைத்துக்கொள்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். என்னுடைய சிறுவயதில் இருந்தே என் குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தை பார்த்து வளர்ந்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையிலும் காங்கிரஸ் கட்சியின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் பெரும் மதிப்பு கொண்டவள் நான். இந்த கட்சியில் சேர்ந்ததை மிகவும் அற்புதமான ஒரு நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனென்றால், இறுதியாக நான் வந்துசேர வேண்டிய இடத்திலேயே சரியாக சேர்ந்து இருக்கிறேன் என்பதை நினைத்துப்பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மிகவும் நேர்மையுடன் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்னை மிகவும் பாசத்துடன் வரவேற்றார்கள். என்னை தங்கள் கட்சியில் ஒருத்தியாக மகிழ்ச்சியுடன் இணைத்துக்கொண்டார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்னிலையில் பாரம்பரியம் மிக்க இந்த கட்சியில் இணைந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதுபோன்ற ஒரு மகத்தான சந்தர்ப்பத்துக்காகத்தான் நான் காத்து இருந்தேன். இனி என்றும் இந்த காங்கிரஸ் குடும்பத்தின் பெருமை மிகுந்த ஓர் அங்கமாக நான் பணியாற்றுவேன்.
என்னுடைய சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் மேன்மையை பார்த்து வளர்ந்தவள் நான். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற மகத்தான தலைவர்களை பார்த்துத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். நான் வேறு ஒரு கட்சியில் இருந்தேன்.

ஆனால் என் மனதில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகுதான் உண்மையிலேயே மீண்டும் பிறந்தது போன்ற அமைதி, நிம்மதி எல்லாம் எனக்கு கிடைத்து இருக்கிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, உங்கள் அனைவரின் முன்பும் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக மேடையில் இருப்பது எனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

நேற்று வரை நான் ஏதேதோ கட்சியில் சேர்ந்து விடுவேன் என்பது போன்ற பேச்சுகள் அடிபட்டன. நான் எங்கே இருப்பேன்? எந்த கட்சியில் இருப்பேன் என்பது குறித்து எனக்கு மட்டும்தான் தெரியும். நான் எங்கே இருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்கிறேன் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.

‘‘தி.மு.க.வை விட்டு விலகியதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?’’ என்று கேட்டதற்கு, ‘‘நான் தி.மு.க.வில் இருந்து விலகியபோதும் காரணம் ஏதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக நினைக்கவில்லை’’ என்று பதில் அளித்தார்.‘‘இனி காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘நான் ஏற்கனவே கூறினேன். நான் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே வந்து அடைந்து விட்டேன் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது’’ என்றார்.

‘‘தற்போது எல்லோரும் ஆளும் கட்சியான பா.ஜ.க.வில்தான் சேருகிறார்கள். நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சேர காரணம் என்ன?’’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, இளங்கோவன் குறுக்கிட்டு பதில் அளித்தார். ‘‘நீங்கள் எல்லாம் டெல்லியில் இருப்பதால் பா.ஜ.க. பற்றி பேசுகிறீர்கள். தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா என்பது மாநிலத்தில் எங்குமே காண முடியாத கட்சி. நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம். பா.ஜ.க.வுக்கு அங்கு வேர்கள் எதுவும் இல்லை. அக்கட்சியின் அடையாளமே தமிழகத்தில் கிடையாது. குஷ்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியால்தான் இந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்று கருதி இக்கட்சியில் சேர்ந்து இருக்கிறார்’’ என்று அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதும் குஷ்பு தொடர்ந்து,”எப்போதும் அலையுடனே ஏன் பயணிக்க வேண்டும்? அலையை எதிர்த்தும் நீந்தலாம். அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளேன். காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி. காங்கிரஸ் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைத்துக்கொண்டு செல்ல முடியும். அதனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன். முன்பு ஒரு கட்சியில் இருந்தேன். அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஆண்டுக்கு முன்பே வந்தது. நான் அங்கிருந்து ஏன் வெளியேற நினைத்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதுபற்றி இப்போது நான் எதுவும் கூற முடியாது.

இப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன். கட்சியில் என்னுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதை இப்போது என்னால் கண்டிப்பாக கூற முடியாது. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.”என்று குஷ்பு கூறினார்.

 

குஷ்பூ டெல்லி பேட்டியின் வீடியோ :https://www.youtube.com/watch?v=y1xVHdIGpzk