September 18, 2021

”கல்யாண வயசுல பொண்ணு இருந்தாலே டென்ஷன் தானே?” என்று கேட்ட பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறி, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்காக, நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாகவும், வில்லி வாக்கத்தைச் சேர்ந்த சஃபியா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நடிகர் பிரகாஷ்ராஜ் திருமண வயதில் உள்ள பெண்களினால் பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த விளம்பரம், பெண்களை இழிவுப் படுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் சஃபியா வலியுறுத்தியுள்ளார். இந்த மனு, வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
prakash aug 9
இதனிடையே இவ்விளம்பரம் குறித்து  வீ.கே. சுந்தர்  தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது இது!

நடிகர் பிரகாஷ்ராஜிடம் ஒரே ஒரு கேள்வி!

கடந்த இரண்டு வாரமாகவே லேப்டாப்பைத் திறந்து டைப் பண்ணத்தொடங்குவேன்… சரி, நமக்கெதுக்கு இந்த வேலை! அவரவர் விருப்பம்,பணம் சார்ந்த தேடலும் மனிதனை எப்படி வேனாலும் பயணிக்கச் சொல்லும் இதில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கு !? என்ற கேள்வி டைப்பத் தொடங்கினவுடனே எதிரில்வந்து முட்டுக்கட்டை போடும்! லேப்டாப்பை மூடி வைத்து விடுவேன்.என் மகள் பௌஷ்யாவைப் பார்க்கும்போதெல்லாம் பெண் குழந்தைகள் மீது இந்த சமூகம் கொண்டிருக்கும் பார்வையும் புரிதலும் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று இன்னொரு கேள்வி எழும்! ஆசையாய் ஒரு மகளை …ஒரு தேவதையை, வாழ்கையின் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் அள்ளிக்கொடுத்த மகளுக்காகவாவது சொல்லியாக வேண்டும் –சொல்கிறேன்.

மூத்த பிள்ளை பெண் குழந்தையாக இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் தம்பிகளுக்கு இரண்டு தாய் என்பார்கள், அப்பாக்களுக்கும் அப்படியே என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கையுண்டு – அப்படியே ஆசிர்வதிக்கப்பட்டது என் வாழ்கையும்.நான் குங்குமத்தில் உதவி ஆசிரியராக இருந்த காலக்கட்டம் அது.வாரம் ஒருமுறை ஒரு பிரபலத்திடம் பேட்டி எடுத்து அட்டைப் படத்தில் போட்டு அட்ராசிட்டி பண்ணுவோம். எனக்கும் அண்ணன் எம்.பி.உதயசூரியன் அண்ணனுக்கும் கடுமையான போட்டி நடக்கும்!

அப்படியான ஒரு நேரத்தில்தான் நடிகர் பிரகாஷ்ராஜிடம் ஒரு பேட்டி எடுத்துப் போட்டோம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேள்விகள் காரசாரமாகவும் எக்குத்தப்பாகவும் இருக்கும்.அப்போதெல்லாம் பிரகாஷ்ராஜுக்கு இப்போதுள்ள அளவுக்கு அட்சரசுத்தமாக தமிழ் பேசவராது.அருமையான ஆங்கிலத்திலும்,அம்பத்தைந்து சொச்சம் கன்னடம் கலந்த தமிழிலும்தான் பேசுவார்.

பேட்டி வெளிவந்த அடுத்தநாள் அவரிடமிருந்து அழைப்பு –மாலைப்பொழுதில் சந்திப்போம் என்று தகவல் வந்தது. அப்போது அவரது அலுவலகம் சாலிகிராமம் ஏரியாவிலுள்ள பாரதியார் தெருவில் இருந்தது.போனேன்.எப்படிச் செல்லம்…எப்பிட்றா ! லவ் யூ ஸோ மச் …! என்று ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளைப் போட்டு வியந்து பேசி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.அவர் பேசின ஆங்கிலத் தையும் கலப்படத்தமிழையும் புரிந்துகொண்டு நான் எழுதிய பேட்டிக்குதான் அத்தனை பாராட்டும் வியப்பும்.நான் என்ன சொல்ல நினைத்தேனோ அது அத்தனையும் அப்படியே பதிவாகியிருக்கு என்று சொல்லிவிட்டு என்ன சாப்பிட்ற எனக் கேட்டார். டீ என்றேன். வேற? என்றார்.

எனக்குப் புரியவில்லை! புரியாத அந்த சங்கேத பாஷைகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்து விட்டு உதவியாளரை அழைத்தார்.என்னைவிட அந்த அலுவலக உதவியாளருக்கு அந்த பாஷைகள் அத்துபடி என்பது உடனடியாக புரிந்துகொள்ள முடிந்தது!கையில் நான்கைந்து வெளிநாட்டு சார்க்குகளைக் கையோடு கொண்டுவந்து டேபிளை நிரப்பினார்.அடுத்தடுத்து உள்ளே போய் வந்ததில் ஐஸ் பாக்ஸ்,ஸ்நாக்ஸ் இன்னபிற வந்து சேர்ந்தது என்பதைச் சொல்லி நான்கைந்து வரிகளை நீட்டி…! ம்கூம்.ஆளுக்கொரு லார்ச் ஊத்திக்கொண்டு மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து பரஸ்பரம் ஐ லவ் யூ சொல்லி, உலக விஷயங்கள் தொடங்கி அவர் நாடக நடிகராக பட்ட கஷ்டங்கள் இந்த இடத்துக்கு வர அவர் கடந்து வந்த வலிமிகுந்த நெடிய பயணம் என நாலாவது லார்ச் போவதற்குள் குட்டி ட்ரெயிலர் மாதிரி சொல்லி முடித்திருந்தார்.ஒரு பேட்டியும் நான்கு லார்ச் விஸ்க்கியும் பத்திரிகையாளன் நடிகர் என்றிருந்த உறவை நட்பாக மாற்றியிருந்தது!

அதன் தொடர்ச்சியான காலங்களில் தொழில் சம்பந்தமில்லாமல் அடிக்கடி அந்த அலுவலகச் சந்திப்பும் அண்ணன் வெங்கட்,இயக்குனர் தரணி,இயக்குனர் விஜி,இயக்குனர் திருப்பதி சாமி,அண்ணன் தயா செந்தில், திருமலை படத்தின் மோகன் தொடங்கி இன்னபிற நட்புகளும் கிடைக்கப் பெற்றது எப்போதும் மறக்கமுடியாது.

அவ்வாறான மாலைப்பொழுதுகளில் வழக்கமான ‘டேபிளில்’ ட்ரைலர் சினிமாவாக விரியும்…சில தருணங்களில் அவர் கன்னடத்தில் எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டுவார்.பிரகாஷ்ராஜ் வழக்கமான நடிகர் இல்லை..!கொண்டாட்டமான வாழ்க்கை,நபர்கள்,நல்ல சினிமா என்று எனக்கு அவரைப் பற்றிய வேறொரு மனிதனை அடையாளப் படுத்திய தருணங்கள்.நன்றி ஏதோ ஸ்காட்ச்!

படப்பிடிப்பு இல்லாத தருணங்களில் பகலிலும் சந்திப்பு தொடர்த்து கொண்டிருந்த ஒரு நாளில், செல்லம் என்னோட கவிதைகளை நான் சொல்லச் சொல்ல தமிழில் எழுதறயா ..ஒரு கவிதைத் தொகுப்பு போட்டிடலாம் என்றார். அதன் பிறகான நாட்களில் தொடர்ந்து சந்திப்பதற்கு கவிதையும் காரணமாக இருந்தது. கவிதைக் காலங்களில் ஒருநாள் ஏகப்பட்ட ‘ப்ளோ அப்’கள் அலுவலகத்திற்கு வந்திருந்தது.எடுத்துப் பிரித்தால் அவரது மூத்த மகள் பூஜாவின் புகைப்படங்கள். உயிருள்ள கவிதை …என் செல்லம்…என்று அதைப் பார்த்தபடி உருகினார்.இவள்தான் என் உலகம் என்றார்.அவர் மீதான மதிப்பீடு எனக்கு இன்னும் அதிகமானது.

பின் நாட்களில் பூஜா பற்றிய பேச்சு வரும்போது ஒருநாள் இப்படிச் சொன்னார்.என் செல்லத்தை எப்படியெல்லாம் வளர்க்கப் போறேன் தெரியுமா!? பதிமூணு வயசுக்குள்ள உலகத்தின் எந்த நாட்டுக்கு வேணாலும் தனி ஆளா போய் வர்ற அளவுக்கு தைரியமான பொண்ணா வளர்க்க ணும்.அவரது மகள்மீது சொல்லமுடியாத அளவுக்கு கனவுகள் சுமந்து கொண்டிருக்கும் ஒரு அப்பனைக் கண்கூடாகக் கண்டபோது என் மகள் பௌஷியாவுக்கும் அப்படியொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

அதன் பிறகு படப்பிடிப்புகளில் நிற்க நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறார் நண்பர் பிரகாஷ் ராஜ்.சினிமாவில் அவர் நினைத்த ஆசைப்பட்ட உயரங்களைத் தாண்டி இப்போது எங்கோ இருக்கிறார். ஓடி ஓடி உழைத்த பணத்தையெல்லாம் நல்ல சினிமாவாக எடுத்து எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்தாலும் தொடர்ந்து மாற்று சினிமாவுக்கான தேடலோடு இருக்கும் பிரகாஷ் ராஜைப் பார்க்கும்போது பிரமிப்பு விலகாமலே இருக்கு! அவர் நினைத்தால் இந்திய மொழியில் உள்ள மிகப் பெரிய ஸ்டார்களை வைத்துப் படம் தயாரித்து பணத்தைக் கோடிகளில் சம்பாதிக்க முடியும்.ஆனாலும் நண்பர்களுக்காக …நல்ல சினிமாவுக்காக என்ற அந்த மனசுதான்…ஐ லவ் யூ செ
ல்லம்.

சொல்ல வந்ததைச் சொல்லியாச்சு! கேட்க வந்தது…

“இவ்வளவு உயரம் தொட்ட உங்களுக்கு ‘கல்யாண வயசுல பொண்ணு இருந்தாலே டென்ஷன் தானே’ என்று எப்படி நண்பா சொல்ல முடிந்தது!!!

வீ.கே, சுந்தர்

இதனிடையே இப்படி சர்ச்சையைக் கிளப்பும் நோக்கில் வெளியிடப்பட்ட விளம்பரம் வாப்ஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது