September 26, 2021

கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி உறுதி. உறுதி. உறுதி! – ஸ்டாலின் பேச்சு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் முத்துக்குமாரசாமி கோவில் எதிரே உள்ள மைதானத்தில் தி.மு.க. சார்பில் ‘முடியட்டும், விடியட்டும், விடியல் மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’ நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
mk stalin sep 6 a
பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “இங்குள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. முதலை வாயில் சிக்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார் மீட்டுள்ளார் என்பது வரலாறு. இன்று ஒட்டுமொத்த தமிழகமே அ.தி.மு.க. ஆட்சி என்ற முதலையின் வாயில் சிக்கியுள்ளது. அது போல் தமிழகத்தை மீட்க, வளர்ச்சியை மீட்க, பொருளாதாரத்தை மீட்க நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். முதல்கட்டமாக மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி, கடலூரில் நீதிகேட்கும் பேரணி, இப்போது வியடில் மீட்பு பேரணி நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

தமிழகம் எங்கு சென்று கொண்டு இருக்கிறது. 5 வருடத்துக்கு ஒருமுறை வாக்களிப்பது நமது உரிமையல்ல, வாக்களிக்கக்கூடிய அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்று கண்காணிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 4½ ஆண்டு களில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து அறிவித்துள்ளார். இது வரை எதுவும் நிறைவேற்றவில்லை. அவர் அறிவிப்பது 110. ஆனால் மக்களுக்கு அவர் போடுவதோ 111 என்ற நிலையை பார்க்கிறோம்.

சிங்கப்பூரை போல் கோவையில் மோனோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தலுக்கு முன்பு கூறினார்கள். எங்கும் மோனோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படவில்லை. பருத்தி விவசாயிகளுக்கு தனி நபர் வருமானத்தை 2 மடங்கு உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தப்படவில்லை. நெசவாளர்களுக்கு 10 இடங்களில் ஆடை அலங்கார பூங்கா அமைக்கப்படும் என்றார்கள். அமைக்கவில்லை.

தென்னை விவசாயிகளின் தனிநபர் வருமானம் 3 மடங்கு உயர்த்தப்படும் என்றார்கள். ஆனால் கொப்பரை தேங்காய் க்கு உரிய விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சாயப்பட்டறை கழிவு பிரச்சினை தீர்ப்போம் என்றார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடாசலம் பொய் சொல்லி பேசுகிறார். ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை முழுமையாக கடைபிடிக்கிறோம் என்கிறார். நாங்கள் தான் மத்திய அரசிடம் இருந்து பங்குத்தொகையாக ரூ.200 கோடியை பெற்றுத்தந்தோம் என்கிறார். இதை மறுத்து பேச எங்களுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களிடம் கூறுகிறேன்.

பொதுகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நிதி தேவை என்று தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் என்னிடம் உள்ளது. நான் பிரதமரை சந்தித்து முறையிட்டதால் மத்திய அரசிடம் ரூ.200 கோடி நிதி கிடைத்தது. அதற்காக திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தினோம்.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சில்லல் லார் நீரேற்று மின்திட்டம் அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் 110 விதியில் இதே திட்டத்தை அறிவித்து ஆய்வுப்பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கிறார். 2013-ல் அறிவித்ததை மீண்டும் 2015-ல் அறிவிக்கிறார். தமிழகம் பொருளாதாரம் பின்தங்கி உள்ளோம்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மனிதனை காணவில்லை என்ற நிலையில் தான் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு உள்ளது. இதை நான் சொல்லவில்லை. தேசிய குற்ற ஆவணகம் வெளியிட்டு உள்ளது. பிரதமர் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்தார். 45 நிமிடம் உரையாடினார். பிரதமர் தலைமையில் செயல்படும் துறைதான் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகும். 2014-ல் குற்றம் தொடர்பாக புகார் 4 லட்சத்து 84 ஆயிரத்து 592. கற்பழிப்பு 455, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 1,802. கொலைகள் 1,805. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2,354. கொள்ளைகள், வழிப்பறி 2,070. கலவரங்கள் 2,074. ஆள்கடத்தல் 1,845. கோவையில் நடந்த குற்றங்கள் 4,281. திருச்சியில் 3,074, மதுரையில் 3,326. சென்னையில் 16,861. சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பது இந்தியாவில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கக்கூடிய தமிழகம் தான். இதுதான் அ.தி.மு.க.வின் சாதனை. இந்த நிலை மாற வேண்டும். மாற்ற வேண்டும். மாற்ற நீங்கள் தயாரா?.
mk stalin sep 6 b
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். காவல்துறை எளிதில் அணுகவும் தொடர்பு கொள்ளவும் உறுதி செய்யப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை, குற்றங்கள் தொடர்பாகவும் தனித்தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். காவல்துறையின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்ட, மாநில அளவில் போலீஸ் ஆணையம் உருவாக்க வேண்டும். காவல்துறை மரணங்கள், சித்ரவதை உள்ளிட்ட போலீசார் மீதான விசாரணையை போலீஸ் ஆணையம் விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் சொல்லுகிற காவல்துறை சீர்திருந்தங்களை செய்ய வேண்டும். காவல்துறை அரசியல் தலையீடு அரவே ஒழிக்கப்பட்டாகவே வேண்டும். விடியலை மீட்க போராடுகிறோம். காவல்துறையில் சுதந்திரத்தை மீட்க போராடுகிறோம். இவைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டால் சட்டம், ஒழுங்கு சரியாகும். ஆகவே உங்கள் முன்னால் உறுதி அளிக்கிறேன். கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும் காவல்துறையில் அரசியல் தலையீடு எந்த ஒரு நிலையிலும் அனுமதிக்கமாட்டோம். இது உறுதி. உறுதி. உறுதி.”என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.