March 25, 2023

கலவரமூட்டும் செல்போன் கதிர்வீச்சு அபாயம்!

தொலைத்தொடர்பின் அசுரத்தனமான வளர்ச்சியினால் இன்று செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. குழந்தை பிறப்பு முதல் இறுதி யாத்திரை வரை செல்ஃபோன் இல்லாத இடமே இல்லை. தொன்னூறுகளில் நூற்றுக்கு ஏழு என்று இருந்த தொலைதொடர்பு அடர்த்தி இன்று இந்தியாவில் நூற்றுக்கு சுமார் என்பது பேர் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த வளர்ச்சியினால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு என்றாலும் சில பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.
sep 2 - tec cell Tower_
செல்ஃபோன் என்பது மின்காந்தவியல் கதிர்வீச்சின் மூலமாகவே இயங்குகிறது. நாம் கையில் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனம், பேஸ் ஸ்டேசன் என்று சொல்லக்கூடிய மொபைல் டவரின் ஆண்டனாவை கம்பியில்லா இணைப்பின் மூலம் கதிர்வீச்சினால் தொடர்பு கொள்வதன் மூலம் இணைப்பு கிடைத்து நாம் தேவையானவர்களுடன் உரையாடுகிறோம். இதில் ஒவ்வொரு செல்ஃபோன் சாதனமும் ஒன்று முதல் மூன்று வாட் (watt) வரையில் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. அதே போல் மொபைல் டவரின் ஆண்டனாவும் தன் பங்குக்கு சுமார் பணிரெண்டு வாட் கதிர்வீச்சை வெளியேற்றுகிறது. இது அரசினால் நிர்ணயிக்கப்பட்ட அளவு.

ஆனால் கொடுமை என்னவென்றால் இந்தியாவில் பெரும்பான்மையான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதில்லை. (பி.எஸ்.என்.எல் மட்டும் விதிவிலக்கு. ஏன்னென்றால் அரசுத் துறையாதலால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கதிர்வீச்சை வெளியேற்ற விதியும் இடம் தராது, இயந்திரங்களும் ஒத்துழைக்காது) மாறாக பனிரெண்டு வாட் என்ற அளவுக்குப் பதிலாக சுமார் அறுபது வாட் வரை கதிர்வீச்சை வெளியேற்றுகின்றனர்

சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். விளைவு, எட்டு டவர்கள் பொருத்த வேண்டிய இடத்தில் ஒரு டவர் பொருத்தினால் போதுமானது. இதன் மூலம் அவர்களின் செலவு கணக்கும் குறைகிறது. கதிர்வீச்சின் தன்மை மிக அதிகமாக இருப்பதனால் கண்ணாடி அறை, உள்ளடங்கிய பகுதி, குடோன், அடித்தளம், பரண் என்று சகல இடங்களுக்கும் கதிர்வீச்சு ஊடுருவி சிக்னலும் நன்றாகக் கிடைக்கிறது. சரி, சிக்னல் நன்றாகக் கிடைத்தால் நல்லது தானே. எங்கிருந்தாலும் தெளிவாக இடையூறு இன்றி பேசலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தோராயமாக 40 மீட்டர் உயரமுள்ள செல்ஃபோன் டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கும் பட்சத்தில், டவருக்கு அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் இருந்தால் கூட அதன் வீச்சு மிக குறைந்து மில்லி வாட் அளவிலேயே இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நமது உடலின் ஒரு அங்கம் போல் எப்போதும் உடன் வைத்திருக்கும் செல்ஃபோன் சாதனத்திலிருந்து வரும் கதிர்வீச்சானது டவர் ஆண்டனாவில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை விட கிட்டத்தட்ட நூறு மடங்கு அதிகமாக இருக்கும். அதிலும் சிக்னல் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் நமது செல்ஃபோன் சாதனம் தானாகவே அதிக கதிர்வீச்சி வெளியேற்றி சிக்னலைப் பெற முயற்சி செய்து கொண்டிருக்கும். இதனால் வரும் அபாயங்களே அதிகம் அச்சுறுத்துவதாக உள்ளது.

கதிர்வீச்சு அதிகமாக இருந்தால், நாம் தொடர்ந்து அதிக அளவிலோ, நீண்ட நேரமோ செல்ஃபோனை பயன்படுத்தும்போது அதிலிருந்து வரும் கதிர்வீச்சை நாமே நம் உடலுக்குள் செலுத்திக் கொள்கிறோம். இதனால் மூளைப் புற்று நோய், காது கேளாமை, மரபியல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சரி, மாறி வரும் உலக நடைமுறையில் தொலைத்தொடர்பில்லாமல் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. அவ்வாறெனில், நாம் செய்ய வேண்டியது என்ன?

வரும் முன் காப்போம்:

நீண்ட நேர உரையாடல்களுக்கு எப்போதும் செல்ஃபோனைத் தவிர்த்து, தரைவழி தொலைபேசியையே பயன்படுத்துங்கள்.

தரைவழி தொலைபேசிகள் முழுவதும் வயர்கள் மூலமாக இணைக்கப்பட்டிருப்பதால் கதிர்வீச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை.

முடிந்த மட்டும் செல்ஃபோனை உடலுக்கு அருகாமையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பேசும் போது கண்டிப்பாக
ஹெட்செட்டோ, ப்ளூடூத் சாதனமோ பயன்படுத்தவும்

குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட பி.எஸ்.என்.எல். சேவையை உபயோகியுங்கள்.

மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்ஃபோன் சாதனங்களை பயன்படுத்தாமல், குறைந்த அளவு
கதிர்வீச்சு அளவுகோல் கொண்ட சாதனமா என்று பரிசோதித்து வாங்கவும்

குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனமாக செல்ஃபோனை ஒருபோதும் அறிமுகப்படுத்தாதீர்க்ள்.
செல்ஃபோன் என்பது நாம் அலுவலகத்திலோ, வீட்டிலோ இல்லாத பொழுது நம்மை தொடர்பு கொள்வதற்காக உள்ள ஒரு அவசர கால கருவி மட்டுமே என்பதை உணருங்கள்.

சுருக்கமாக தெரிவிக்க வேண்டிய செய்திகளுக்கு எஸ்.எம்.எஸ். சேவையை பயன்படுத்துங்கள்

ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர் செல்ஃபோன் உபயோகிப்பதனால் தனிப்பட்ட அளவில் பாதிப்புகள் வருவதாக இது வரை உறுதி செய்யப்படவில்லை, இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபேஸ்பேக்கர் பொருத்தப்பட்ட பகுதிக்கு எதிர்ப்புறமுள்ள காதில் வைத்து செல் பேசலாம். மேலும் ஆன் செய்யப்பட்ட செல்லை ஃபேஸ்மேக்கர் கருவிக்கு அருகே கொண்டு செல்லாமல் இருப்பதும் நல்லது.

ஒரு தொழில்நுட்பத்தின் வெற்றி அதை உபயோகிப்பவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்பார்கள். செல்ஃபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. அற்புதமான இந்த தகவல் தொழில்நுட்ப சாதனத்தை அளவாக மற்றும் முறையாக பயன்படுத்தி வளம் பெறுவோம்.

வி.பாலகுமார்