October 19, 2021

கருப்புப் பணத்தின் உதவியுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கு!

கருப்புப் பணத்தின் அளவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மிக மிக அதிகமான’ என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாகும். குறிப்பிடும் தொகையின் அளவு மாறுபட்டாலும் கூட குறிப்பிடப்படும் தொகை மிக மிக அதிகமானதாகவே உள்ளது. கருப்புப் பணம் இவ்வளவுதான் என்று யாருமே அறுதியிட்டு வரையறுத்துக் கூற முடியாது. அப்படி கூறுபவர்களின் இயலாமையை நாம் பொறுத்துக் கொள்ளலாம். காரணம், கருப்புப் பணம் என்பதே கணக்கில் வராததுதானே.
edit nov 17
கருப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பது யாருக்குமே தெரியாது. ஓரளவு விவரம் தெரிந்தவர்கள், பல்வேறு நிர்பந்தங்கள் காரணமாகத் தெரிவிக்கமாட்டார்கள்.இப்போதைய அரசும் சரி, முந்தைய அரசும் சரி, கருப்புப் பண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காததில் இருந்தே இதைத் தெரிந்துகொள்ளலாம்.

கருப்புப் பணம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. எனவே, கருப்புப் பணம் எவ்வளவு என்பதை இப்போதைய அரசாலும் கூறமுடியாது என்பது உறுதி.சுதந்திரத்துக்குப் பிறகு 40 கமிட்டிகளும், விசாரணைக் குழுக்களும் அமைத்த பிறகும் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

அப்படியெனில், இப்பிரச்னைக்கு தீர்வு என்ன? ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து அளிக்கப்பட வேண்டும் என்றால், நோயின் மூல காரணத்தைக் கண்டறிய வேண்டும். நோயின் மூல காரணம் நம்மைத் திடுக்கிடச் செய்வதாகக் கூட இருக்கலாம். ஆனால், மூல காரணத்தைக் கண்டுபிடித்தால்தான் பொருத்தமான மருந்தைத் தர முடியும்.

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களில் 627 பேரின் பெயர்ப் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் சமர்ப்பித்தது.எனவே, இப்பிரச்னையின் காரணம் மற்றும் தீர்வு குறித்து கூறுவதற்கு முன், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த மதிப்பீடுகளைப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

கருப்புப் பணத்தின் அளவு உண்மையிலேயே மலைக்க வைப்பதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 75 சதவீதம் அளவுக்கு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்கிறது தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பைனான்ஸ் அன்ட் பாலிசி) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை.

“குளோபல் பைனான்ஸ் இன்டக்ரிட்டி’ அமைப்பின் அறிக்கையே அவ்வப்போது பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. 1948 முதல் 2008 வரை பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தின் அளவு 468 பில்லியன் டாலர் (பில்லியன் – 100 கோடி) என்று அந்த அமைப்பு கூறுகிறது.கருப்புப் பணத்தின் அளவு ரூ.28 லட்சம் கோடி (466 பில்லியன் டாலர்) என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி 2011-இல் குறிப்பிட்டார். இது “குளோபல் பைனான்ஸ் இன்டக்ரிட்டி’யின் அறிக்கையுடன் ஒத்துப்போகிறது.

கருப்புப் பணத்தின் அளவு 500 பில்லியன் டாலர் என மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதைவிட அதிகம் என்கிறார் பேராசிரியர் அருண்குமார். 1947 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் பதுக்கப்பட்ட பணத்தின் அளவு ரூ.72 லட்சம் கோடி என்று அவர் மதிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த கருப்புப் பணத்தின் சிறு பகுதியே வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்படுகிறது. இப்போது வெளிவந்திருப்பதைப் போன்று பத்து மடங்குக்கும் அதிகமாக கருப்புப் பணம் இருக்கும் என்றே பல்வேறு மதிப்பீடுகளும் தெரிவிக்கின்றன.

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2012 மே மாதத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதில் குற்றச் செயல்களும், சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளும் இரு பிரிவுகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கள்ளத்தனமாக பொருள்களைக் கடத்துவது, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகம், போலி ஆவணங்கள் தயார் செய்வது, சட்ட விரோத சுரங்கத் தொழில், வனத்தில் உள்ள மரங்களை வெட்டுவது, கள்ளச் சாராய வர்த்தகம், திருட்டு, ஆள் கடத்தல், பாலியல் தொழில், நிதி மோசடி, பொதுப் பணத்தைக் கையாடுதல், வங்கி மோசடிகள், சட்ட விரோத ஆயுத விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் கருப்புப் பணம் உருவாக ஆதாரமாக உள்ளன.

ஊழலும் குற்றச் செயலில் அடங்கும். தொழில் தொடங்க உரிமம் வழங்க லஞ்சம் பெறுதல், சமூகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் அரசு நிதியில் ஊழல், விலைக் கட்டுப்பாட்டுக்குள்பட்ட பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல், விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்துதல் உள்ளிட்டவை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் ஊழலுக்கு வித்திடுகின்றன.

வருமானத்தை மறைப்பதால் கருப்புப் பணம் பெருகுகிறது. சட்டப்பூர்வ விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதை மூடி மறைப்பது அல்லது வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடனேயே வருமானம் மறைக்கப்படுகிறது.கணக்கில் வராத, சட்ட விதிகளின்படி அரசுக்குத் தெரியப்படுத்தப்படாத பணம் கருப்புப் பணமாகிறது. வருமான வரி, சுங்க வரி, விற்பனை வரி, முத்திரைத் தாள் தீர்வை போன்றவற்றை செலுத்தாதது மற்றும் தொழில் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் போன்றவற்றை கடைப்பிடிக்காமல் ஏய்ப்பது போன்றவையும் கருப்புப் பணம் உருவாகக் காரணமாகின்றன.

கணக்கில் காட்டப்படாத வர்த்தகப் பரிவர்த்தனைகள், தனியாக ஒரு கணக்குப் புத்தகம் பராமரித்தல், கணக்குகள், விற்பனை, ரசீதுகளைத் திரித்தல், உற்பத்தியைக் குறைவாகக் காட்டுதல், செலவுகளைத் திரித்துப் பதிவு செய்தல், ஹவாலா நடவடிக்கைகள், மறைமுக நிறுவனங்களை நிறுவுவது, துணை நிறுவனங்கள் மூலம் சர்வதேசப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை கருப்புப் பணம் உருவாகும் வழிமுறைகளென வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

மனை விற்பனை, தங்கம் – வெள்ளி விற்பனை சந்தை, நிதி நிறுவனங்கள், பொது கொள்முதல், லாப நோக்கமில்லாத (?) அமைப்புகள், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம், வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம், முறைசாரா சேவைத் துறை போன்றவை கருப்புப் பணம் உருவாக உகந்தவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

உயர் கல்வியையும், சுரங்கத் தொழிலையும் கூட இந்தப் பட்டியலில் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு சேர்த்துள்ளது.ஹவாலா, பொருளுக்கு கூடுதல் விலைவைத்து விற்பனை செய்தல், சர்வதேச வைப்பு ரசீதுகள் மூலம் முதலீட்டை அதிகரிக்கும் இந்திய நிறுவனங்கள், வரிச் சலுகை கிடைக்கும் நாடுகளில் நேரடி அன்னிய முதலீடு, பங்குப் பத்திரங்கள் மூலம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கருப்புப் பண புழக்கம் தாராளமாக உள்ளது.

வரியே இல்லாத அல்லது மிகக் குறைவான வரி இருக்கக்கூடிய, வெளிப்படைத்தன்மை இல்லாத சுமார் 80 நாடுகள் கருப்புப் பணத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.பல்வேறு வரித் துறைகள், மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம், அமலாக்க இயக்ககம், பொருளாதாரப் புலனாய்வு அமைப்பு, மாநில காவல் துறையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை, தீவிர மோசடிகள் புலனாய்வு அலுவலகம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, ஒருங்கிணைக்கும் அமைப்புகளான மத்தியப் பொருளாதார புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, உயர் நிலைக் குழு ஆகியவற்றுக்கு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவரும் பொறுப்புள்ளது.

கருப்புப் பணம் உருவாவதையும், இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் புழங்குவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க இதுவரை அளிக்கப்பட்ட ஆலோசனைகளும், மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போயின.அதிக வரி விதிப்பே கருப்புப் பணம் உருவாகக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், வரி விதிப்பு விகிதம் 1971-இல் 98 சதவீதத்தில் இருந்தது இப்போது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.ஆனால், இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருந்த கருப்புப் பணத்தின் அளவு 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வரி செலுத்துவதை எளிமையாக்குதல் மற்றொரு தீர்வாகக் கூறப்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர இந்தத் தீர்வும் உதவாது.காரணம், கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் சிக்கலான வகையில் கணக்குகளைப் பராமரிக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஒரு கணக்கும், அதிகாரப்பூர்வமற்றதாக ஒரு கணக்கும் பராமரிக்கின்றனர். இது சிக்கலானது.

அதேபோல, பொது மன்னிப்பு வழங்குதல் அல்லது உயர் மதிப்பு கரன்சிகளின் மதிப்பைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளும் பயன் தராது.அப்படியென்றால், எந்தவிதமான நடவடிக்கைகள்தான் பயன் தரும்? கருப்புப் பணத்தின் உதவியுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள்தான் கருப்புப் பணம் உருவாவதற்கான முக்கிய காரணகர்த்தாக்கள்.

அரசியல்வாதி, தொழிலதிபர், அரசு அதிகாரிகள் ஆகியோர் கொண்ட கூட்டணிதான் கருப்புப் பணத்தை உருவாக்கி பாதுகாக்கிறது.அதனால்தான், அடுத்தடுத்து அமைந்த அரசுகள் முயற்சி மேற்கொண்டபோதும் கருப்புப் பணம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

பி.எஸ்.எம். ராவ்

பட உதவி :sikhsiyasat.net