October 16, 2021

கருணாநிதி எந்த அறிவுரையையும் அளிக்க தேவையில்லை! – முதல்வர் ஓ .பி\.எஸ், காட்டம்!,

”காவிரி விவகாரம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கும் குற்றச்சாட்டு களுக்கு விளக்மான பதில் அளித்து எனவே, இது குறித்து கருணாநிதி தமிழக அரசுக்கு எந்த ஒரு அறிவுரையையும் அளிக்க தேவையில்லை”என்ற ரீதியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ops vs karuna
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தேவையின்றி அறிக்கைப் போர் தொடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘முல்லைப் பெரியாறு பிரச் சனையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் ஈடுபட வேண்டும்!’ என மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட் டுள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழர் நலனையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் அம்மா தான்.

எனவே தான், முல்லைப் பெரியாறு அணையில் இன்றைக்கு 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு பொறுக்க முடியாமல், தி.மு.க.வி னாலும், தன்னாலும் சாதிக்க முடியாததை, ஏன் கனவிலும் நினைக்க முடியாததை, அம்மா சாதித்துக் காட்டி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் ஒரு தரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

மேலும், இப்பிரச்சினை தொடர்பாக பிரதமருக்கு இது பற்றி கடிதம் ஒன்றை எழுதியதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நான் இருந்து விட்டேன் என்ற ஒரு பொய்யை இடையே அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. முல்லைப் பெரியாறு அணையில் முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில், நீர் மேலாண்மையினைக் கருத்திற் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவு ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பிரதமருக்கு தற்போது எந்தவித கடிதமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்துவது அனைத்து தரப்பினரின் கடமையாகும். இதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரதமருக்கு தற்போது கடிதம் எதுவும் எழுதப்படவில்லை. ஏனெனில், முல்லைப் பெரியாறு தாவா தீர்க்கப்பட்ட ஒன்று. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான, உச்சநீதிமன்றத்திலேயே தமிழக மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் அம்மா. எனவே, இந்த தீர்ப்புக்கு மேலும் கேரள அரசு எதுவும் செய்திட இயலும் என்ற ஒரு வீணான அச்சத்தை கருணாநிதி ஏற்படுத்த முயன்றால் முல்லைப் பெரியாறு நீரை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

எந்தப் பிரச்சனையில் எந்த வித அணுகுமுறையை கடைபிடிப்பது என்பதில் கருணாநிதிக்கும், தி.மு.க.விற் கும் தான் என்றைக்குமே குழப்பம். முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக 5 பேர் கொண்ட குழுவினை உச்சநீதிமன்றம் அறிவித்த போது, அதில் இடம் பெறுவது பற்றி கருணாநிதிக்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.அவரது குழப்பத்தை தீர்த்துக் கொள்ளக் கூடிய இடம் அவரது கட்சியின் பொதுக் குழுவோ, செயற்குழுவோ இல்லை என்றாலும், தி.மு.க.வின் பொதுக் குழுவில், தமிழக அரசின் சார்பில் ஐவர் குழுவில் இடம் பெறுவது தேவை இல்லை என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார் கருணாநிதி. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனையான முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விடை கண்ட அதிமேதாவி கருணாநிதியின் அறிவுரை இந்த அரசுக்கு தேவையில்லை என்பதை அவருக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கருணாநிதி தனது அறிக்கையில் கேரள அரசின் முயற்சிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். கேவியட் மனு என்றால் என்ன என்பது பற்றி கருணாநிதிக்கு ஒன்றுமே தெரியாது என்னும் தனது அறியாமையைத் தான் அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, இது குறித்து கருணாநிதி தமிழக அரசுக்கு எந்த ஒரு அறிவுரையையும் அளிக்க தேவையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.காவேரி நதிநீர் பிரச்சனை என்றாலும், முல்லைப் பெரி யாறு அணைப் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும், தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், தமிழர்களின் நலன் காப்பதற்கும் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருபவர் அம்மா தான். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசின் செயல்பாட்டால், முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 141.35 அடி அளவிற்கு நீர் தேக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகள் கட்ட விருப்பம் கோரும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்யக்கூடிய நன்மை என்பதை கூறி, இது போன்ற அறிக்கைகளை தமிழர்களுக்கு எதிராக கர்நாடகமும், கேரளமும் பயன்படுத்திடக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, ‘நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற புறநானூற்றின் வரிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன். ”என்று அதில் கூறியுள்ளார்.