October 25, 2021

கருணாநிதி உடல்நிலை ; விஷமிகள் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் -ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு முதல் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். இடையில் மூச்சுத்திணறல் காரணமாக அவரது தொண்டையில் துளையிட்டு ட்ரக்யோஸ்டமி குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் உடல நலம் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை பாதிப்படைந்தது. அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகிறது. ஜுலை 25 ஆம் தேதி கருணாநிதியின் இரத்த அழுத்தம் திடீரென குறைந்திருக்கிறது. பதற்றமான டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்க சில நிமிடங்களில் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்துவிட்டது வெண்டிலேட்டர் வைக்கலாமா என்று மருத்துவர்கள் அன்று ஆலோசித்தார்கள். ஆனால் மூச்சு விடுவது இயல்பாக இருந்ததால் வெண்டிலேட்டர் வேண்டாம் என்ற முடிவுக்கும் மருத்துவர்கள் அன்று வந்தார்கள். காய்ச்சல், சிறு நீர் தொற்று ஆகியவற்றுக்கான சிகிச்சைகளைத் தொடர்கிறார்கள். 95 வயதான உடல் என்பதாலும், கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து, மாத்திரை என்று சிகிச்சைக்கு உட்பட்டதாலும் சிறுநீர்த் தொற்றுக்கான ஆன்டி பயோடிக் மருந்துகளை கருணாநிதியின் உடல் முழு அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

மூளையின் இரு பக்கங்களும் சிறப்பாகச் செயல்படும் ஓர் மனிதர் கருணாநிதி மட்டும்தான் என்று பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி வியப்புடன் ஒரு முறை தெரிவித்திருக்கிறார். “ஆளும் திறமை என்பது இடது மூளை தொடர்பானது. அதேசமயம் காவியமும் கற்பனையும் வலது மூளை தொடர்பானது. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். ஆனால் இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது என்பது கருணாநிதி ஒருவருக்குத்தான்’’ என்று நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி பாராட்டியிருந்தார்.அப்படிப்பட்ட புகழை உடைய கருணாநிதியின் மூளை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செயற்பாட்டைக் குறைத்துக் கொண்டிருப்பதுதான் தற்போதைய உடல் நிலையின் முக்கியக் கூறாக இருக்கிறது. இதனிடையே கருணாநிதியின்  உடல்நிலை  குறித்து பல்வேறு விரும்பத்தகாத செய்திகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து கட்சித்தொண்டர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

நேற்றிரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். இதையடுத்து திருமாவளவன், வைகோ, நல்லக்கண்ணு, கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.

கருணாநிதியின் உடல் நிலை சரியாகி வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாவதால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,“தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்கவும் வேண்டாம், அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம்.

நம் அனைவரின் உயிருக்கும் உயிரான கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான கட்சித் தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவரின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்து வரும் அனைத்து தரப்பு மக்களும் நம்ப வேண்டாம் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம் – அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.