August 15, 2022

கரியமில வாயு உமிழ்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டாமா?

அனைத்து மாநில சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர்கள் மாநாடு புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாசு அளவைக் கண்காணிக்க தில்லி, சென்னை, ஆக்ரா, கான்பூர், லக்னெü, வாராணசி, ஃபரீதாபாத், ஆமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 நகரங்களில் தேசிய காற்றுத் தரக் குறியீட்டு எண் அளிக்கும் முறையைத் தொடக்கி வைத்தார்.
pollution india
அப்போது மோடி பேசுகையில், பருவநிலை மாற்றம் குறித்தோ, சுற்றுச்சூழல் குறித்தோ கவலைப்படுவதில்லை என இந்தியா குறித்து தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவை குறித்த பேச்சுகளும், விவாதங்களும் இப்போது அதிகரித்த வண்ணம் உள்ளன. புவிவெப்பமயமாதல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

பூமியானது பிற கோள்களிலிருந்து மாறுபட்ட தன்மை கொண்டது. காரணம், உயிரினங்கள் வாழ ஏதுவான வெப்பநிலை பூமியில்தான் உள்ளது. பிற கோள்களில் ஆய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. பூமியின் இந்த தட்பவெப்பநிலைக்குக் காரணம் சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல்தான்.

சூரியனிடமிருந்து வெப்ப சக்தியானது பூமியில் தேவையான அளவுக்கு அதிகமாகவே விழுகிறது. அதேசமயம், வெப்ப சக்தியானது பூமியிலேயே தங்கிவிடாமல் உடனுக்குடன் விண்வெளிக்கே திரும்பிச் சென்று விடுகிறது.பூமியின் மீது விழும் சூரிய ஆற்றல் பூமியிலேயே தங்கிவிட்டால் பூமி எரிந்து விடும். ஆற்றல் முழுவதும் திரும்பிப் போய்விட்டால் பூமி பனியில் உறைந்து விடும்.

சிக்கலான இந்தச் சூழலில் பூமியிலுள்ள உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சூரியனின் ஆற்றலை ஈர்த்து வைத்து போதுமான தட்பவெப்பநிலை நிலவுவதற்கு, பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே காரணமாக அமைந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தில் (காற்று மண்டலம்) 78% நைட்ரஜன் வாயுவும், 20% ஆக்ஸிஜனும், 2% பசுமைக் குடில் வாயுக்கள் எனப்படும் குறிப்பிட்ட வாயுக்களும் அடங்கியுள்ளன.

இவற்றில் நைட்ரஜன், ஆக்ஸிஜனுக்கு வெப்பத்தைப் பிடித்து வைக்கும் தன்மை கிடையாது. பசுமைக்குடில் வாயுக்களுக்குத்தான் அத்தகைய தன்மை உள்ளது. பூமியில் போதுமான தட்பவெப்பநிலை ஏற்படவும் பசுமைக்குடில் வாயுக்கள்தான் காரணமாக உள்ளன. ஆனால், மனிதனின் செயல்பாடுகளால் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு இயற்கைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

பசுமைக்குடில் வாயுக்கள் என்பது 1. கரியமில வாயு, 2. மீத்தேன், 3. நைட்ரஸ் ஆக்ûஸடு, 4. ஹைட்ரோ புளோரோ கார்பன், 5. சல்பர் ஹெக்சா புளோரைடு, 6. பெர் புளோரோ கார்பன் உள்ளிட்டவை ஆகும்.

இவற்றில் கரியமில வாயுவால்தான் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது. பொதுவாக, புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டால் கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுகிறது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களாலும், நிலக்கரியை எரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களாலும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையாலும் கரியமில வாயு அதிகரிக்கிறது.

அதேசமயம், காடுகள் அழிக்கப்படுவது, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவது போன்ற காரணங்களால், கரியமில வாயுவை உறிஞ்சும் ஆதாரங்கள் குறைந்து வருகின்றன.

கடந்த 250 ஆண்டுகளில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அடர்த்தி பன்மடங்கு உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த 250 ஆண்டுகளில்தான் தொழில் புரட்சி, தனிமனித வசதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சர்வதேச எரிசக்தி முகமையானது சில கண்டுபிடிப்புகளை மையமாக வைத்து புவி வெப்பமயமாவதை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் சீனாவும், அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் உள்ளன.

தனிநபர் கரியமில வாயு உமிழ்வில் அமெரிக்கர்களே முன்னணியில் உள்ளனர். அமெரிக்காவில் ஆண்டுக்கு 19.70 மெட்ரிக் டன்களும், ரஷியாவில் 11 மெட்ரிக் டன்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.17 மெட்ரிக் டன்களும், இந்தியாவில் 1.31 மெட்ரிக் டன்களுமாக தனிநபர் கரியமில வாயு உமிழ்வின் அளவு உள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா கரியமில வாயு வெளியேற்றத்தில் 4-ஆம் இடத்தில்தான் உள்ளது. ஆனால், குறைவான மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவோ இரண்டாம் இடத்தில் உள்ளது.

2030-ஆம் ஆண்டில்கூட இந்தியாவில் தனிநபர் கரியமில வாயு உமிழ்வானது உலக சராசரியான 4.22 டன்களைத் தாண்ட வாய்ப்பில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தனிநபர் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது வளர்ந்த நாடுகளின் கடமையாகும்.

வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், வளர்ந்த நாடுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெளியேற்றிய கரியமில வாயு மாசின் ஒட்டுமொத்த பாதிப்புதான் தற்போது பருவநிலை மாற்றத்தில் உண்டாகியுள்ள பிரச்னைக்கு காரணம். சுற்றுச்சூழலில் கரியமில வாயு மாசை அதிகரித்ததில் வளர்ந்த நாடுகளின் பங்கே அதிகம் உள்ளது. எனவே, அதிகப்படியான கரியமில வாயு மாசுக்கு வளர்ந்த நாடுகளே அதிகபட்ச பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
pollution india. 2
கரியமில வாயு வெளியேற்றம் குறித்து வளரும் நாடுகளை நிர்பந்திக்கும் வளர்ந்த நாடுகள், முதலில் தங்கள் நாடுகளில் ஏற்படும் கரியமில வாயு மாசை குறிப்பிட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். அதேசமயம், வளரும் நாடுகளுக்கு தூய்மை வளர்ச்சிக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.

என்.எஸ். சுகுமார்