October 16, 2021

கிராமத்துல இருக்கிறவன் சேறுல கால வச்சால்தான் சிட்டில இருக்கிறவன் சோத்துல கைய வைக்க முடியும்…இன்னும் கூட பலருக்குத் தாங்கள் சாப்பிடும் அரிசி எப்படி வருகிறது, அதற்காக ஒரு விவசாயி எவ்வளவு கஷ்டப்படுகிறான், விவசாயத்துக்கு ஆதாரமான தண்ணீர் இல்லாமல் எவ்வளவு தவிக்கிறான், என்பதை நடு உச்சி மண்டையில் ஆணி அடித்தாற் போல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
katthi oct 22
ஒரு மாஸ் ஹீரோவான விஜய் இது போன்ற படத்தில் நடித்ததை நாம் கண்டிப்பாக வரவேற்றே ஆக வேண்டும்…விஜய் ரசிகர்களே வெறும் நடனமும், பன்ச் வசனமும், அதிரடி ஆக்ஷன் மட்டும் உங்கள் ஆதர்ச நாயகனை உயர்த்திப் பிடிக்கும் விஷயமல்ல. சமுதாயத்திற்கு சில கருத்துக்களை சொல்லும் படங்களிலும் நடித்தால்தான் அவரைப் பற்றிய இமேஜ் இன்னும் உயரும் என்பதை நீங்களும் உணர வேண்டும்.

ஒரு புகைப்படம் ஆயிரம் கருத்துக்களை உணர்த்தும் என்பார்கள், அப்படித்தான், ஒரு திரைப்படம் என்பதும் ஆயிரமாயிரம் கருத்துக்களை நம் மனதில் பதிய வைத்து விடும்.

கிளைமாக்சுக்கு முன்பாக விஜய் பேசும் அந்த வசனங்கள், சமீப கால தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ பேசியதில், உண்மையாகவே கைதட்டலைப் பெற வைக்கும் வசனங்கள். நமது நாட்டிற்கு ஆயிரமாயிரம் கம்பெனிகள் வேண்டாம், கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்தாலே போதும், நம் நாடு பொருளாதாரத்தில் வல்லரசாகிவிடும். வழக்கமானா பழி வாங்கும் கதைகள், ரவுடியிசக் கதைகளைப் பார்த்து சலித்துப் போன நாம் ‘கத்தி’ போன்ற படங்களை கத்திக் கத்தி வரவேற்க வேண்டும்.

தென் தமிழகத்தில் தன்னூத்து என்ற கிராமத்தில் விளைநிலங்களை வளைத்துப் போட்டு, அங்கு குளிர்பான கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் துடிக்கிறது. ஆனால், எம்.எஸ்.சி ஹைட்ராலஜி படித்த விஜய் அவர்களது கிராமத்திற்குக் கீழ் மிகப் பெரிய நீராதாரம் இருக்கிறதென்றும், அதைக் கண்டுபிடித்தால் இரண்டு மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறார். அவரின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் கம்பெனி முதலாளியான நீல்நிதின் முகேஷ் விஜய்யை கூலிப் படை வைத்துக் கொலை செய்ய முயல்கிறார். அப்போது, எதிர்பாராமல் உயிர் பிழைக்கும் விஜய்யை, கொல்கத்தாவில் ஜெயிலில் இருந்து தப்பி வந்த இன்னொரு விஜய் காப்பாற்றுகிறார். மீண்டும் ஜெயிலுக்கு செல்லாமல் இருக்க உருவ ஒற்றுமையின் காரணமாக போராட்டம் நடத்தி வரும் விஜய் இடத்தில் ஜெயில் கைதியான விஜய் சென்று விட, போராட்டம் நடத்திய விஜய் கொல்கத்தா சிறைக்கு அனுப்பப்படுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.

விஜய்க்கு முதலில் ஒரு மகத்தான ‘வெல்கம்’. அவர்களுடைய ரசிகர்களை மட்டும்  மனதில் கொள்ளாமல் இப்படிப்பட்ட படங்களிலும் நடித்திருப்பதை கண்டிப்பாக வரவேற்க வேண்டும். வழக்கமான விஜய்யை இந்தப் படத்தில் எதிர்பார்த்து வரவேண்டாம். அதற்காக அடிதடி ஆக்ஷன் எல்லாம் இல்லையா என நினைக்காதீர்கள்..அட்டகாசமான அதிரடி ஆக்ஷனும் உண்டு, அசத்தலான டயலாக்குகளும் உண்டு. கிராமத்தினருக்காக போராடத் துடிக்கும் ஜீவானந்தம் கதாபாத்திரத்திலும் சரி, அதன் பின் ஜீவானந்தமாக நடிக்க வரும் ‘கத்தி’ என்கிற கதிரேசன் கதாபாத்திரத்திலும் சரி, விஜய்யின் அழுத்தமான நடிப்பு பாராட்ட வைக்கும் ஒன்று. ஹீரோயிசம் என்பது ஹீரோவின் கதாபாத்திரத்தில் மட்டுமல்ல, கதையிலும் இருக்கிறது என்பதை இந்தப் படம் புரிய வைத்துள்ளது.

சமந்தா இரண்டு பாடலுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். விஜய் நடிக்கும் படம் என்றாலே காதலிலும், கதாநாயகியிடமும் ஒரு குறும்புத்தனமும், கலகலப்பும் இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். மொத்தமாக நான்கு பக்கம் வசனம் மட்டுமே பேசியிருப்பார்…இருந்தாலும் ஒரு நல்ல படத்தில் நாமும் இருக்கிறோம் என்பதில் சமந்தா பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

விஜய்யின் நண்பனாக சதீஷ், கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். கார்ப்பரேட் கம்பெனியின் வில்லனாக நீல் நிதின் முகேஷ், தோற்றத்திலேயே அவருடைய திமிர்த்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

இடைவேளை வரை மிகச் சாதாரணமாகவே கதை நகர்வது கொஞ்சம் மைனஸாகத் தோன்றுகிறது. ஆனால், தன்னூர் கிராமத்தைப் பற்றிய அந்த வீடியோவைப் பார்த்ததும் நம் கண்கள் கலங்கிவிடுகிறது. அதன் பின்தான் படம் சரியான திசையிலும், வேகத்திலும் நகர்கிறது.

அனிருத் இசையில் ‘செல்ஃபி புள்ள… பாடலும், ஆத்தி…பாடலும்,” மறுபடி மறுபடி கேட்க வைக்கும். ‘கத்தி’க்கான தீம் மியூசிக் டபுள் ஓகே… நம் சொந்த மண்ணை உயிராக நினைக்கும் அனைவருக்கும் ‘கத்தி’ கண்டிப்பாகப் பிடிக்கும்…நல்ல படங்களை நாமும்  ‘தோள்’ கொடுத்து வரவேற்போம்…

 

நன்றி:http://www.screen4screen.com/kaththi-review/