October 19, 2021

”கத்தி” வந்தால்தான் ’பூஜை ’ரிலீஸ்! விஜய்க்கு சப்போர்ட்டாக விஷால் அதிரடி!

‘கத்தி’ தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கும் வேளையில், படத்தை எதிர்த்து வரும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் இன்று (திங்கள்கிழமை) மாலை சந்திப்பு நடைபெற்றது.அந்தச் சந்திப்பில் பத்திரிக்கை யாளர்களிடம் வேல்முருகன் பேசும்போது, “லைக்கா நிறுவனம் என்ற பெயர் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இது தொடர்பாக பெயர் எடுக்கிறோம் என்று ஐங்கரன் நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், லைக்கா நிறுவனம் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால், எங்களது எதிர்ப்பு தொடரும். இது தொடர்பாக சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் இருவருமே “உங்களுடைய ஆதரவு இல்லாமல், படத்தை திரையிட மாட்டோம். எங்களுக்கு திரையரங்க பாதுகாப்பு தான் முக்கியம்” என்று கூறினார்.இதனிடையே விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு போன் செய்த விஷால், “‘விஜய்யின் கத்தி படம் வரவில்லை என்றால் என்னுடைய பூஜை திரைப்படமும் தீபாவளியன்று திரைக்கு வராது. என் சக ஹீரோவுக்காக நான் இந்த முடிவை அறிவிப்பேன். இந்த தீபாவளியை மக்கள் புதுப்படம் இல்லாமல் கொண்டாடட்டும். கத்தி வராமல் என் படம் மட்டும் தியேட்டருக்கு வந்து கலெக்ஷனை அள்ளிக் கொண்டு போவது நான் இருக்கிற சினிமா தொழிலை அவமதிப்பது போன்ற செயலாகும்” என்று கூறியிருக்கிறார்.
katthi & poojai oct 20
இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த ‘கத்தி’ படமும், விஷால் நடித்த ‘பூஜை’ படம் மட்டுமே வெளிவரப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கும் இடையேதான் வசூல் போட்டி உள்ளது. இதனிடையே ‘பூஜை’ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 400 திரையரங்குகள், கேரளாவில் 100 திரையரங்குகள், தெலுங்கில் 500 திரையரங்குகள் வெளிநாடுகளில் 100 திரையரங்குகள் என ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பூஜை’ படம் வெளியாவது உறுதியாகி விட்டது

அதே சமயம் ஜயங்கரன் கருணா மூர்த்தி சென்னை காவல்துறை ஆணையரை நேற்று சந்தித்து கத்தி திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு மனு கொடுத்தார்.ஆனால் காவல்துறை அதிகாரிகள் என்ன பதில் அளித்தார்கள் என்பது குறித்து தகவல் தெரிய தெரியவில்லை.இந்நிலையில் இன்று வரை தொடரும் எதிர்ப்புகள் காரணமாக பெரும்பாலான தியேட்டர்களில் முன் பதிவு தொடங்கவில்லை. மதுரையில் மட்டும் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி தீபாவளியன்று கத்தி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் சகல தரப்பிலும் எழுந்துள்ளது. ஆனால் கத்தி படத்தின் அனைத்து பிரச்சனைகளும் இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த நிலையில்தான் .‘கத்தி’ படத்தை திரையிட யாரும் முன் வரவில்லையென்றால் தன்னுடைய ‘பூஜை’ படத்தையும் தீபாவளிக்கு வெளியிடப் போவதில்லை.என் சக ஹீரோவுக்காக நான் இந்த முடிவை அறிவிப்பேன். ” என்று விஷால் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இச்செய்தியை விஷால் பி ஆர் ஓ தரப்பு மறுத்துள்ளது