February 7, 2023

கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!

நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத் துணைபோகின்ற அதிகாரவர்க்கத்தினருக்கும் நிச்சயம் பொருந்தும்.

அதுவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது நமது நாட்டின் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்து புறப்பட ஆரம்பித்துவிட்ட இந்த மின்னணு யுகத்தில், பேட்டி என்ற பெயரில் முகத்துக்கு நேராக ஏதாவது ஒரு மைக் நீட்டப்பட்டுவிட்டால் போதும், ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது பேசிவிட்டுப் பின்பு தவிப்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
31 - talk less
அந்தக் காலத்தில் நேருஜி, கிருபளானி, பிலுமோடி, ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பாராளுமன்ற சட்டமன்ற விவாதங்களானாலும் சரி, மேடைப்பேச்சு-பேட்டிகளானாலும் சரி, சொல்ல வந்ததைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைப்பார்கள். அக்கறையற்ற முன்தயாரிப்பு மற்றும் அநாகரிக விமரிசனங்கள் ஆகியவற்றுக்கு மேற்கண்ட அரசியல் தலைவர்களின் பேச்சுக்களிலோ பேட்டிகளிலோ இடமே இருக்காது என்பதை அவர்களது எதிரணியினர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால், சமீப வருடங்களாகச் சில அரசியல்வாதிகள் தங்களது பேட்டிகள் மற்றும் மேடைப்பேச்சுக்களில் இடம் பொருள் ஏவல் அறியாமல் எதையாவது பேசிவிட்டுத் தங்களுக்கும் தங்களது கட்சித்தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுவதும், கடைசியில் வேறு வழியில்லாமல் தாங்கள் சொன்னதை வாபஸ் பெறுவதும் வழக்கமாகிவிட்டது.

“கட்சித்தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் ஜனாதிபதி பதவியையும் பெறலாம்’ என்று கூற விரும்பிய ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் ஒருவர் , அதற்கு உதாரணமாக அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டில் குறித்து ஏதோ சொல்லிவிட, கடைசியில் தமது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்ததை ஊடகங்கள் மூலம் அறிந்தோம்.

“ஐந்து ரூபாய்க்கு வயிறாரச் சாப்பிடலாம்’ என்று பேட்டியளித்து எல்லாத்தரப்பினரது வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டார் மத்திய அமைச்சர் ஒருவர். புதிதாகப் போடவிருக்கும் தார்ச்சலைகள் நடிகை ஒருவரின் கன்னத்தைப் போல வழுவழுப்பாக அமைக்கப்படும் என்று கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார் இன்னொரு வடமாநிலத்து மந்திரி.

அணையிலிருந்து நீர்ப்பாசனம் சரியாகச் செய்யப்படாதது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மகாராஷ்டிர மாநிலத்து மந்திரி ஒருவர் சட்டென்று கோபப்பட்டு, “நான் என்ன சிறுநீர் கழித்தா அணைகளை நிரப்ப முடியும்’ என்று பதில் கேள்வி கேட்டு கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துப் பிறகு மன்னிப்புக் கேட்டுவைத்தார்.

கர்நாடகத்தின் மாண்டியா பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்கும் நடிகையைப் பற்றிக் கொச்சையாக விமரிசித்துக் கண்டனம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் தேவ கவுடா கட்சியின் உள்ளூர்த்தலைவர்கள் இருவர்.

இதையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் தரப்பு நடத்திய திடீர்த்தாக்குதலில் நமது இந்திய இராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதையும் கொச்சைப்படுத்தும் விதமாக, “உயிரை விடுவதற்காகத்தான் இராணுவத்தில் சேருகிறார்கள்’ என்று புத்திசாலித்தனமாக பதிலளித்து, சகலரது கண்டனத்தையும் பெற்றபின்பு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் பீகார் மாநில மந்திரி ஒருவர்.

மேற்கண்டவாறு எக்குத்தப்பாகப் பேசி விடுகின்ற அரசியல்வாதிகள் அனைவருமே தங்களுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்த உடனே வருத்தம் தெரிவிப்பதும் இல்லை.

“எனது பேச்சைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்’. அல்லது “எனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது’ என்ற தயாரான பதிலையே கொடுக்கிறார்கள். கண்டனங்கள் பெரிய அளவில் கிளம்பி, அது கட்சித்தலைமையின் கோபத்தைக் கிளறி, அதன் காரணமாகத் தங்களது பதவிக்கு ஆபத்து என்ற நிலைமை உருவானால் மட்டுமே வருத்தம் தெரிவிப்பது என்ற நிலைமைக்கு இறங்கி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் சற்றும் குறையாதவர்கள் இல்லை என்று அதிகாரவர்க்கத்தினரும் அடிக்கடி நிரூபித்தபடியேதான் இருக்கிறார்கள்.

நாளொன்றுக்கு இருபத்தேழு ரூபாய் சம்பாதித்தால் கிராமப்புறங்களிலும், முப்பத்துநான்கு ரூபாய் சம்பாதித்துவிட்டால் நகர்ப்புறங்களிலும் ஒரு குடும்பம் வசதியாக வாழ்ந்து விடலாம் என்று கூறி வறுமைக்கோட்டுக்கு ஒரு புதிய வியாக்கியானத்தையே எழுதிவிட்ட திட்டக் கமிஷன் அதிகாரிகளை என்னென்று சொல்வது? இது மட்டுமா? பிரதமர் மன்மோகன் சிங்கின் முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியின் போது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரை, தலையில்லாக் கோழிகள் என்று கோபமாக விமரிசித்த அமெரிக்காவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் பிறகு மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.

இதையெல்லாம் அவதானிக்கும் நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 1970-80 களில் தமிழகத்திலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றி ஒரு வேடிக்கையான விமரிசனம் பத்திரிகைகளில் வந்தது.

அவர் பாராளுமன்றத்தில் ஒரு தடவை கூடத் தமது வாயைத் திறந்ததில்லை என்று அபாண்டமான புகார் கூறப்படுகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அவர் சில முறை பாராளுமன்றத்தில் தமது வாயைத் திறந்திருக்கிறார். கொட்டாவி விடுவதற்காக…..

நமக்கென்னவோ, கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்குகிறவர்களைவிட, கொட்டாவி விடுவதற்காக மட்டுமே பொது இடங்களில் வாயைத்திறக்கிற மேற்படி நபர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. என்ன… சரிதானே?

எஸ். ஸ்ரீதுரை