September 18, 2021

கண்டதுண்டா நம் பெற்றோரைப் போன்ற சந்ததியினரை?!

அரபிய நாளேடு ஒன்றில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் வெற்றிகரமாகத் திகழ படிப்பு ஒன்று தான் மிக முக்கிய காரணம்’ என்று எழுதியிருக்கிறார்கள்.சுந்தர் பிச்சை குறித்து எழுதும் மேற்கத்திய ஊடகங்கள் அவருடைய பெற்றோரின் தியாகம் குறித்து எழுதுகிறார்கள். சுதந்திர இந்தியாவில் எழுபதுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறையே தங்கள் சுக துக்கங்களை மறந்து தங்கள் பிள்ளைகளின் உயர்வுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறார்கள்..வாழ்ந்து வருகிறார்கள்.மக்கு முந்தைய தலைமுறை.. நம் பெற்றோர்களின் வாழ்க்கை.. அதைப் போன்றதொரு தியாக வாழ்க்கை.. கிடைக்கவே கிடைக்காது.
edit aug 29
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை என்பது நாட்டின் நலன் சார்ந்து இருந்தது. நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற வெறி ஒவ்வொரு ஜப்பானியனின் மனதிலும் இருந்தது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு வெறி நமக்கு முந்தைய ஜெனரேஷனிலும் இருந்திருக்கிறது. ஜப்பானியர்கள் அதனை ஒரு தாரக மந்திரம் போல சொல்லிச் சொல்லி உயர்ந்தார்கள். நம்மாட்களால் அப்படிச் சொல்ல முடியவில்லை. சொல்லத் தெரியவில்லை. அடுக்குமொழி அரசியல் வாந்திகள் புகுந்து பல வகைகளில் குழப்பி விட்டார்கள்.

படிப்பு.. சேமிப்பு.. இவை இரண்டும் தான் பெரும்பாலான நமது பெற்றோர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. வாழ்நாள் முழுக்கவே தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்த சிந்தனை மட்டுமே அதிகமாக
இருந்திருக்கிறது. ஆனால் அதுவே அடுத்த தலைமுறையான நம்மிடம், “காசு கொடுத்தால் கல்வியை வாங்கிவிடலாம்” என்ற எண்ணம் உருவாகி, கல்விக்கும் மதிப்பில்லாமல், காசுக்கும் மதிப்பில்லாமல் போய் விட்டது.

கலர் என்றில்லை.. கருப்பு வெள்ளை டெலிவிஷன் பெட்டி கூட இல்லாத வீடுகள் எத்தனை எத்தனை? டெலிஃபோன் கனெக்‌ஷன் இருந்ததுண்டா? சொந்தமாக இருசக்கர மோட்டார் வாகனம், கார் என்றெல்லாம் எத்தனை பேர் வைத்திருந்தார்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..அவர்களெல்லாம் இப்போதெல்லாம் நாம் தடாலடியாக முடிவெடுத்து வாங்கிக் குவிப்பது போலவா செய்தார்கள்?

சம்பாதிக்கும் ஒவ்வொரு காசையும் எண்ணி எண்ணிப் பார்த்து செலவழித்து, சேமித்து வைத்தார்கள் நம் பெற்றோர். அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கு என்பதை விட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என்று சேமித்து வைத்தவர்கள் தான் அதிகம். அதே நேரத்தில் தேவைக்கான செலவுகளை எப்போதுமே மறுத்ததில்லை. மாதம் ஒரு தடவையாவது குடும்பத்துடன் தியேட்டர் சென்று சினிமா… அப்படியே ஹோட்டல்… ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா.. என செலவும் செய்யத்தான் செய்தார்கள்.

தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின் போது வெடி, இனிப்பு, கரும்பு என்று எத்தனை குதூகலத்துடன் கொண்டாட வைத்திருப்பார்கள். இன்றைக்கு எவ்வளவு காசு, பணம் பார்த்தாலும் அந்த குதூகலம் மிஸ்ஸிங் போலத் தோன்றுவதில்லையா?

இன்றைக்கும் என் அப்பா ரயில் நிலையத்தில் இறங்கினால் ‘பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பஸ்ஸிலே போயிட்டு, அங்கேருந்து வீட்டுக்கு இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று விடலாம். நடக்க முடியவில்லையென்றால் ஆட்டோ வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறுகிறார். அதே சமயம் அவருடைய பேரன், பேத்திகளுக் கென்றால் கூப்பிடு தூரத்துக்குக் கூட கார் அல்லது ஆட்டோவை ஏற்பாடு செய்கிறார். “பாவம் எதுக்காக நடந்து கஷ்டப்படணும்?”
அந்தக் கஷ்டம் உங்களுக்கில்லையா அப்பா?

தொண்ணூறுகளின் ஆரம்ப காலம் வரையில் பல குடும்பங்களில் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50 அல்லது சுவேகாவிற்கு மாறுவது தான் மிக மிக மிக உட்சபட்ச ஆடம்பரம்.இன்றைக்கெல்லாம் நினைத்தமாத்திரத்தில் எது வேண்டுமானாலும் வாங்கி வந்து விடுகிறோம். அந்தக் காலத்தில் ஒரு மிக்ஸி, கிரைண்டர் வாங்கக் கூட பல மாதங்கள் யோசித்து யோசித்து தானே வாங்குவார்கள்?

எனது 15 ஆண்டுகால குடும்ப வாழ்க்கையில் இதுவரை 3 முறை ரெஃப்ரிஜிரேட்டர் மாற்றியாகி விட்டது – ‘பசங்க வளர வளர பெரிசா தேவைப்படுதே’. ஆனால் என்னுடைய அம்மாவோ தனது 45-வது வயதில் தான் ரெஃப்ரிஜி ரேட்டர் என்ற வஸ்துவையே கண்ணால் பார்க்க ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக அதை வாங்க இயலாத அளவிற்கு சூழலில் எல்லாம் இல்லை. ஆனாலும் அதெல்லாம் ஆடம்பரம் என்ற எண்ணம் தான். 20 வருட காலத்தில் நாங்களெல்லாம் வற்புறுத்தி சமீபத்தில் தான் கொஞ்சம் பெரிய அளவில் இரண்டாவது ரெஃப்ரிஜிரேட்டரை வாங்கியிருக்கிறார் அம்மா. வாஷிங் மெஷின், டிவி என்று அநேகப் பொருட்களிலும் அதே தான்.

குழந்தைகளின் கல்வி, சொந்த வீடு.. இரண்டும் தான் அத்தியாவசியமாக இருந்திருக்கிறது நம் முந்தைய தலை முறைக்கு!அவர்களின் அந்த அர்ப்பணிப்பு.. சான்ஸே இல்லை.. நமக்கு நம் குழந்தைகளுக்கோ வரவே வராது.‘நாம தான் படிக்கலை.. நம்ம பசங்களாவது படிச்சு முன்னேறட்டுமே’ என்ற வார்த்தையைக் கூறாத முந்தைய தலைமுறையினர் வெகு சொற்பம்.உலகில் வேறெங்காவது கண்டதுண்டா நம் பெற்றோரைப் போன்ற சந்ததியினரை?! வணக்கங்கள் என்று கூறுவதெல்லாமே கூட அவர்கள் செய்த தியாகத்திற்கு வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள்தான்.

மாயவரத்தான்