September 17, 2021

கட்சி அலுவலக வாயில் முன் அமர்ந்து உயிர்ப்பிச்சை போராட்டம்! -சுப.உதயகுமார்

கூடங்குளம் அணு உலையில் முதல் இரண்டு அணு உலைகள் முடங்கியுள்ள நிலையில் மூன்று, நான்காவது உலைகள் அமைக்கக் கூடாது,.மீறினால் முக்கிய கட்சி அலுவலகங்களின் வாயில் முன் அமர்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு போராட்டம் நடத்துவோம். என கூடங்குளம் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்தார்.
sp udhayakumar
கோவையில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் ”கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை முரணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள முதல் 2 உலைகளும் தற்போது முடங்கி உள்ளன. இந்நிலையில், 3, 4-ஆவது உலைகள் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் உலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2-ஆவது உலையில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். எங்கிருந்தோ உதிரிப்பாகங்கள் வருவதாகச் சொன்னார்கள்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் எப்படி முதல் உலை வேலை செய்யத் தொடங்கியது. பிறகு எதற்கு 2 மாதங்கள் வெளியில் இருந்து டீசல் வாங்கி வருகிறார்கள் ? இதுவரை ரூ.30 கோடிக்கு டீசல் வாங்கியுள்ளனர். இந்தியா வரவுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை திருப்திபடுத்தவே இதுபோன்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

அங்கு 3,4-ஆவது உலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் சிலரை தவிர, யாரும் இதுவரை அதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இதே நிலை தொடர்ந்தால் ஒரு மாத காலத்துக்குள் ஆலோசித்து, முக்கிய கட்சி அலுவலகங்களின் வாயில் முன் அமர்ந்து உயிர்ப்பிச்சை கேட்டு போராட்டம் நடத்துவோம்.

கூடங்குளத்தில் கடந்த மே மாதம் விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரின் நிலை என்னஎன்றே தெரியாது. ஊடகங்கள் கூட எங்களைப் போன்றவர்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அந்தளவுக்கு உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்றார்.