October 18, 2021

கடன் வாங்கிட்டு ஏமாத்தலையே! – கிங் பிஷ்ஷர் மல்லையா பேட்டி!

கிங் பிஷ்ஷர் விஜய் மல்லையா நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜரானார். தலைமை மேஜிஸ்ட்ரேட் எம்மா லூசி அர்புத்நாட் மல்லையாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் மே மாதத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு, ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு நடைபெற உள்ளது. இந்த வழக்கின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவார்.அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது போது நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதிகளிடம் மல்லையா கோரிக்கை வைத்தார்.

இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், கடன்களை வேறு வகைகளில் திருப்பிவிடவில்லை, அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டார். மேலும் தான் நிரபராதி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது என்றும் மல்லையா கூறினார்.

மேலும் அவர் “நான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், தொடர்ந்து மறுப்பேன். நான் எந்த நீதிமன்ற விசாரணையிலிருந்தும் நழுவவில்லை, என்னுடைய தரப்புக்கான நியாயத்திற்கு போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.நான் ஊடகங்களிடம் இது பற்றி எதுவும் தெரிவிக்கப்போவதில்லை, காரணம் நான் எதைக்கூறினாலும் திரிக்கப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் உள்ளன அது பேசும். எந்தக் கடன்களும் எங்கும் திசைத்திருப்பப் படவில்லை. நீங்கள் பில்லியன் பவுண்டுகள் குறித்து கனவு கண்டு கொண்டேயிருங்கள், ஆதாரமில்லாமல் உங்களால் எதையும் நிரூபிக்க முடியாது.

நான் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா அணிக்கு உற்சாகமூட்ட செல்கிறேன், அது ஊடக விவகாரமாகி விட்டது. எனவே நான் எதுவும் கூறாமல் இருப்பதே நல்லது. ஸ்டேடியத்துக்கு வெளியே இருவர் குடித்து விட்டு ‘திருடன்’ என்றனர், ஆனால் பலரும் என் நலனை விசாரித்தார்கள் என்றார் மல்லையா.இந்தியாவும் இங்கிலாந்தும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் 1992-ம் ஆண்டு கையெழுத்திட்டனர், ஆனால் இதுவரை ஒருவர் மட்டுமே இதன் படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.