’கங்காரு’ டீம் வைரமுத்துக்கு நடத்தும் பாராட்டு விழா!
நாயகனுக்கு எய்ட்ஸ் வருவது மாதிரி’மிருகம்’ படமெடுத்த ,சொந்த அண்ணி மேல் காமம் கொள்வது மாதிரி கதையுள்ள ‘உயிர்’, மற்றும் சர்ச்சை விஷ்யம் கொண்ட ‘சிந்து சமவெளி’ போன்ற பரபரப்பு படங்களை இயக்கி சலசலப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சலச்லப்புக்கும் இடம் இல்லாமல் ‘கங்காரு’ என்றொரு படத்தை இயக்கி வருகிறார். தங்கையை அண்ணனும், அண்ணனை தங்கையும் கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுவது தான் படத்தின் கதை. போதாக்குறைக்கு காதலியும் காதலனை கங்காரு போல காப்பாற்றுகிறாராம்.
80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘அமைதிப்படை’ இரண்டாம் பாகத்தைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
நாயகனாக புதுமுகம் அர்ஜுனா, நாயகியா வர்ஷா அஸ்வதி நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் படத்துக்காக கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளனர். சாய்குமார் கதை எழுத, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்
படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்தப் போகிறார்களாம். அக்டோபர் 14-ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடங்கி.