ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!

உணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது.

கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரிய வேண்டுமானால் நமது பாரம்பரிய பாடல்களையும் கதைகளையும் முதலில் கற்றுத்தர வேண்டும். பாட்டின் மூலம் நம்முடைய நாட்டின் இயற்கை வளம், விலங்கினங்கள், பறவை வகைகள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
sep 7_story_telling
பழங்குடி மக்களின் அறிவுசால் சொத்துரிமைப் பாதுகாப்பு பற்றி ஒரு கலந்துரையாடல் நடந்தது. துவக்கத்தில் இருளர்கள் இருவர் ஒரு பாட்டு பாடினார்கள். ஒரு பெண்ணின் சகோதரர்கள் தேனெடுக்கப் போகிறார்கள். அதுதான் பாட்டின் கரு. அவர்கள் போகும் வழியை விவரித்து அவர்கள் ஆபத்து ஏதும் இல்லாமல் திரும்ப வேண்டும் என்று அப்பெண் பாடுகிறாள். அந்தப் பாட்டில் காடு வந்தது, கானகம் வந்தது, சுனை வந்தது, நீர் வந்தது. அன்று தொண்டை மண்டலம் பச்சையாகவும் ஈரமாகவும் இருந்திருக்கிறது என்று தெரிந்தது.

கதைகளிலும் பாடல்களிலும்தான் இதுபோன்ற தொலைந்து போன நிஜங்கள் பதிவாகி இருக்கும். அயல்நாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் பொலிவியா நாட்டு பெண்மணி ஒரு பாட்டுப் பாடினார், “”நிலத்தாயைக் காப்பாற்றுங்கள், எங்கள் பச்ச மாமாவைக் காப்பாற்றுங்கள்’ என்று. பச்ச மாமா என்றால் நிலத்தாய் என்று பொருள். என்ன ஒரு பொருத்தம்? பச்சையம்மா என்பதுபோல தொனிக்கிறது. பச்சையன்னைதானே அவள்?

“திருப்பாவை’யை படித்துப் பாருங்கள். விடியும் நேரம் பற்றி ஆண்டாள் சொல்வாள். முதலில் புல் சிலம்பியது, பிறகு ஆனைச்சாத்தன் பேசியது, பிறகு எருமையை ஓட்டிச் சென்றார்கள், பிறகு குயிலினங்கள் கூவின. இன்று – குருவிச் சத்தத்தை கேட்காத, பாலை பாக்கெட்டில் பார்க்கும் குழந்தைக்கு இது தெரிய வேண்டும். “”ஆனை ஆனை அழகர் ஆனை… கட்டிக் கரும்பை மிதிக்கும் ஆனை.. காவேரி ஜலத்தைக் குடிக்கும் ஆனை”. குழந்தைகளுக்கு இங்கே காவேரி எப்படி திமிறிக்கொண்டு ஓடியது என்று தெரிய வேண்டும். இதுதான் முதலில். பிறகு வேண்டுமானால் ஜாக் அண்டு ஜில்.

கதைகளும் அப்படித்தான். கதை சொல்வதன் மூலம் சரித்திரம், பாரம்பரியம், தேசப்பற்று, நல்லது, கெட்டது எல்லாவற்றையும் குழந்தைகள் கேட்கும். இதற்கெல்லாம் மேலானது மனிதத் தொடர்பு. கணினியிலும் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாகவும்கூட கதைகளும் பாடல்களும் கேட்கலாம். ஆனால் நேராக நாம் குழந்தைகளுக்கு சொல்வதுபோல அவை ஆகாது. நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தேன். என் தந்தையின் அத்தை கதை சொல்வார். எவ்வளவோ கதைகள். இதிகாசம், இலக்கியம், விக்கிரமாதித்தன், தெனாலி ராமன், நாயன்மார், தாகூர், கல்கி, பிரதாப முதலியார் சரித்திரம், திக்கற்ற இரு குழந்தைகள், அக்பர் இன்னும் பல. எனக்கு ஆங்கில எழுத்தாளர்கள் அவர் மூலம்தான் அறிமுகம். கதாபாத்திரங்கள் பேசும்பொழுது குரலை மாற்றி ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காட்டுவார். ஜெயகாந்தன் கதை, ஒரு காலனியில் திருடன் வந்ததும் அனைவரும் பயப்படுவதும், சந்தேகப்படுவதும் வெறுப்பதுமாய் இருக்க ஒரு குழந்தை மட்டும் அவனை நேசத்துடன் அணுகும். இதைவிட உயர்வான பள்ளிக்கூடம் இருக்க முடியுமா?

சில கதைகளைத் திரும்பத் திரும்பக் கேட்போம். “”சொல்லியாச்சே” என்பார். “”பரவாயில்லை பாட்டி” என்போம். குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான செயல்முறை மிக அவசியம். அவர்களுக்கு அது பாதுகாப்பான உணர்வை அளிக்கும்.

“தொலைக்காட்சிப் பெட்டியும் கணினியும் குழந்தைப்பருவமெனும் விலைமதிக்க முடியாத செல்வத்தைத் திருடிவிட்டன.

கதைகள் நம் கற்பனை வளத்திற்கு வரம்பு கட்டாது. உதாரணத்திற்கு “பொன்னியின் செல்வ’னை எடுத்துக் கொள்வோம். என்னுடைய வந்தியத்தேவனும் உங்களுடைய வந்தியத்தேவனும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள். இவர் வேறு, அவர் வேறு. ஒரு நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடித்து விட்டால் நம்மெல்லோருடைய வந்தியத்தேவன்களும் அவருடைய உருவத்தில் சிறைப்பட்டுப் போவார்கள். அது தவறு என்று சொல்லவில்லை.

பாரதியார் என்றாலோ அபிராமி பட்டர் என்றாலோ கண்களில் உன்மத்தப் பரவசம் ஒளிரும். எஸ்.வி. சுப்பையாதான் நம்முன் நிற்பார். அபாரமான நடிகர். கதை கேட்பதன் பலனைச் சொல்கிறேன். எல்லாவற்றையும் இட்டது இட்டபடி என்று சித்திரித்துவிட்டால் கற்பனைக்கு எங்கே இடம்?

கதை சொல்லும்பொழுது பெரியவர்கள் குழந்தைகளருகே அமர்ந்திருப்பார்கள். இது குழந்தைகளின் மன வளத்திற்கு முக்கியம். பல விஷயங்களை கதைகள் மூலம் கற்றுத் தரலாம். கலாசார ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் புலப்படும். புதுப்புதுச் சொற்கள் அறிமுகமாகும். நாங்கள் விக்கிரமாதித்தன் கதையும் கேட்டோம். ஆர்தர் அரசன் கதையும் கேட்டோம். அவர்கள் ஆட்சி புரிந்தவை வித்தியாசமான நாடுகள் என்று புரிந்தது. வெவ்வேறு மனிதர்கள், அனுபவங்கள் எல்லாம் கதைகளில் வரும். அதை சிறு வயதிலேயே தெரிந்துகொண்டால், “நான் பிடித்த முயலுக்கு மூணு கால்’ என்ற அணுகுமுறை இருக்காது. வேற்றுமைதான் மனிதர்களின் சிறப்பு என்று தெரியும்.

என் கொள்ளுத்தாத்தா ஒரு கதைத் தொகுப்பு வெளியிட்டார். அதற்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள் “”தன்னுடைய கடந்த காலத்தை இளப்பமாக நினைக்கும் தேசம் என்றுமே சிறப்படையாது. நம் தேசிய உயிர், உணர்வு என்ற விளக்கை ஒளிர வைக்கும் எண்ணெய், நம் தியாகிகள், வீரர்கள், நல்லோர்களின் கதைகள்தான். இந்திய ஆண்களும் பெண்களும் உலகுக்கே பாடமாக விளங்கும் வகையில் சிறப்பாக தங்கள் வீரத்தாலும், மனிதநேயத்தாலும், உயர்ந்த வாழ்க்கை நெறியினாலும் தியாகச் செயல்களாலும் விளக்கியுள்ளார்கள். அவர்களைப் பற்றிய கதைகளைக் கேட்டும் படித்தும் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் தேசிய ஒற்றுமை என்ற அடித்தளம் உருவாக வேண்டும்”. கதை சொல்வது என்பது வலிமை வாய்ந்த ஒரு கருவி, மகத்தான குறிக்கோள்களை அதன்மூலம் அடையலாம்.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கதை சொல்லும் நேரம் இருந்தால், குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைவிட அதில் அதிக ஈர்ப்பு இருக்கும். திங்கள்கிழமைதோறும் தலைவலியும் ஜுரமும் வரும் குழந்தைகள்கூட (எனக்கும் வரும்) சுறுசுறுப்பாக பள்ளிக்கு செல்வார்கள். இந்த கதை நேரம் செலுத்தும் உரத்தால் விளையும் நன்மைகள் அளவிட முடியாதது.

குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோமே, அந்தக் குடியிருப்புகளில் ஒன்றாவது குழந்தைகளிடம் நமக்கு மதிப்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறதா? அழகான வர்ணபூச்சும் சுற்றி தோட்டமும் விளையாட இடமும் அந்தக் குழந்தைகள் பெறத் தகுதியில்லையா?

கருஞ் சாம்பல் பூத்த, தரக்குறைவான பொருள்களை வைத்துக் கட்டி குடிசைகளை ஒழித்துவிட்டோம். அங்கு வாழும் குழந்தைகளின் வாழ்க்கையில் வானவில்லின் நிறங்கள் பொலிய ஒரு மணி நேரத்திற்கு கதை நேரமாவது வைக்கலாம். அந்த நேரத்திலாவது அவர்கள் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் உலா வருவார்கள். ஆனால் என்ன செய்வது? ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் தொலைக்காட்சித் தொடர் என்ற பூதம் நமக்கே உரித்தான கதை சொல்லும் பாரம்பரியத்தை விழுங்கிவிட்டன.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டினால் மட்டும் போதாது. நன்னெறியும் சொல்லித் தர வேண்டும். அன்று, கதை மூலமாக தாத்தாவோ, பாட்டியோ, அம்மாவோ, அப்பாவோ நற்குணங்களைக் கற்றுத் தந்தார்கள். இன்றோ அவர்கள், கண்களை உருட்டி சூழ்ச்சி செய்வது எப்படி, வஞ்சம் அகங்காரம் என்பவை என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்து போய் விட்டார்கள். பின் நன்னெறியை யார் புகட்டுவது?

எழுத்தாளர் சூடாமணியின் “இணைப்பறவை’ என்ற சிறுகதையில் பாட்டி சொல்லும் கதை பற்றி வரும். “நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணி கதைகள், புராண, காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜெயிக்கிறது, கெட்டது தோற்கிறது என்கிறதை, இன்னும் அடிப்படைக்குப் போய், வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த்தத்துவம் ஜெயிக்கிறது என்றும் அழிவும் சாவும் தோற்கிறது என்றும் மனசில் பதியறாப்பலே சொல்வா’ – இதைவிட கதை சொல்வதன் நன்மையை எப்படி தெரிவிப்பது?

“ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல். திறந்துகொண்டு உள்ளே போனோமானால் பிரமிக்கத்தக்க பொக்கிஷங்களைக் காணலாம். நம் குழந்தைகள் அங்கு செல்ல வேண்டும்; அவற்றைக் காணவேண்டும்!

பிரபா ஸ்ரீதேவன்