October 22, 2021

ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர்

அப்போது காலை பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் சக நண்பர்களோடு அரட்டையடித்து கொண்டிருந்தேன். அங்கே வந்த நண்பர் மீனாட்சி எங்களை நோக்கி நேராக வந்தார்.

“நேத்து நைட் படம் பார்த்துட்டு ஆபீஸூக்கு போறதுக்குள்ளே எனக்கு ஒரு ஃபோன்கால் வந்துச்சு. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ரொம்ப நல்லா இருக்காமேன்னு…?’ ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர் கேட்டார்.

நாம இப்பதானே ஃப்ரிவியூ ஷோ பார்த்துட்டுப் போறோம். அதுக்குள்ளே எப்படி இந்தப் படம் சூப்பர்னு சொல்றாங்களேன்னு எனக்கு சந்தேகம்.

உங்களுக்கு எப்படி நியூஸ் வந்துச்சுன்னு கேட்டேன்.
3 - cinema onai
படம் நல்லா இருக்குன்னு ட்விட்டர்ல ரவிஷங்கர் (@claythoughts) ட்வீட் பண்ணியிருந்தார். அதான் கேட்டேன்னு சொன்னாங்க. உண்மையிலேயே நல்லப் படம்” என்றார் மீனாட்சி.

இவ்வளவுக்கும் நான் ட்விட்டரில் 24*7 புழ்ங்குகிற ஆளும் இல்லை. அப்படி நான் ட்வீட் செய்ததன் ரியாக்ஷன் தான் நண்பர் மீனாட்சியின் அந்த வார்த்தைகள். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்ததுமே அப்படத்தைப்பற்றி ட்வீட் பண்ணவேண்டுமென்று தோன்றியது. காரணம் படம் முழுக்க வில்லத்தனத்தோடு படபடக்க ஓடி, இறுதியில் குட்டிப் பெண் ஆட்டுக்குட்டியின் காலில் மனிதத்தோடு விழுந்து மடியும் அந்த ஓநாய்.!

கதை இருந்தால் ஓ.கே. இல்லையென்றாலும் ஓ.கே. சீனுக்கு சீன் காமெடி இருந்தால் போதும், லாஜிக் கூட தேவையே இல்லை. முடிந்தால் தாளம் போட வைக்கிற இரண்டு பாடல்கள் இருந்தால் போதும். என்ற மனோபாவத்திற்கும் வந்திருக்கும்…. ‘எதற்கும் வருத்தப்படாத வாலிப சங்கத்தில்’ கெளரவ உறுப்பினர்களாகி இருக்கும்… தமிழ் ரசிகர்களான நமக்கு டைம்பாஸ் சமாச்சாரத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற முடிவுக்கு நம் கலைப் படைப்பாளிகள் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு முழுக்காரணமும் நாமே.

அருமையான கதையம்சத்தோடோ அல்லது வித்தியாசமான முயற்சியிலான படைப்புகளோ வரும்போது அதை நாம் ஆதரிப்பதே இல்லை. அதற்கு பிறகும் நல்லப் படமெடுக்க வேண்டுமென்ற கட்டாயம் அவர்களுக்கு ஏன் இருக்கபோகிறது?ஜாலி பார்ட்டியாக இருந்தால் உங்களுக்கு நான் மேலே சொன்ன சமாச்சாரம் ஒரு புலம்பலாகதான் தெரியும். சினிமாவை ரசிக்கிற ஒரு ரசனையாளனாக இருந்தால் என் ஆதங்கம் உங்களுடைய மைண்ட் வாய்ஸாக இருக்கும்.

ஓ.கே. ஓநாய் மேட்டருக்கு வருவோம்.

பொதுவாகவே மிஷ்கினுக்கும் மீடியாவிற்கும் அப்படியொரு SYNCH. உண்மையில் மிஷ்கினும் மீடியாவும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மாதிரி சமயம் பார்த்து முட்டி மோதி கொள்வது வழக்கம். அதனாலேயே பெரும்பாலான மீடியா மக்களுக்கு இப்படத்தைப் பார்க்க பெரிய ஆர்வமில்லாமல் வந்திருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். நானும் அதே மனநிலையில்தான் ப்ரிவியூ தியேட்டருக்குள் நுழைந்தேன்.

படத்தின் துவக்கத்திலேயே குண்டடிப்பட்டு விழும் வுல்ஃப், சிகிச்சைக்காக நிர்வாணமாக படுத்திருப்பது என ஆரம்பமே அதிர வைத்தது. தீபாவளிக்கு சுட்டீஸ் ‘சடசட’வென வெடிக்கும் பொட்டு வெடி துப்பாக்கி எஃபெக்ட்டில் அடுத்தடுத்து வரிசையாக எதிரிகளையும் போலீஸையும் போட்டுத்தள்ளும் ஓநாயின் ஓட்டத்தில், அந்த கண் தெரியாத பெண்மணியைச் சந்திக்கும் காட்சியில் வேகமெடுக்கிறது.

கண் தெரியாத அந்த பெண்மணியின் காலில் வில்லனின் கரடிக்கூட்டம் சூடுப் போட்டதாக காட்டும் காட்சியை வைத்து இருப்பது மிஷ்கினின் புத்திசாலிதனம். போலீஸ் ஒருபக்கம், வில்லனின் கரடிக்கும்பல் மற்றொருபக்கம் என சென்னை முழுவதும் ஓநாயை சல்லடைப்போட்டு துரத்தும் காட்சியில் கண் தெரியாத அம்மாவையும், மகளையும் எவ்வளவு தூரம்தான் இழுத்துகொண்டே ஓட முடியும்? ஒரளவுக்குப்பின் கதையை பரபரப்பான காட்சிகளால் நகர்த்த முடியாமல் போய்விடும். அதனாலேயே ஃபிஃப்டி கே.ஜி.யில் இருக்கும் அந்த அழகான அம்மாவைத் தூக்கிகொண்டு ஓடுவது போல திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் அதையும் தாண்டி ஓநாய் உண்மையான பாசத்தோடு அந்தப்பெண்ணை தோளில் தூக்கி வைத்துகொண்டு ஓட ஒட நமக்கு இங்கே தோள்பட்டையில் வலிப்பது போல உணரவைக்கின்றன தொடர்ந்து வரும் காட்சிகள்.

அதேபோல் ஓநாயின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேரும் எமோஷன், மருத்துவக் கல்லூரி மாணவராக வரும் ஸ்ரீயின் கதாபாத்திரத்தை நம்முடைய மனசாட்சியாகவே மாற்றிவிடுகிறது. இப்படியொரு கதாபாத்திரத்தை தடுமாற்றமில்லாமல் காட்டியதற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம்.

ஓநாய் ஏன் கண் தெரியாத குடும்பத்தோடு ஓட வேண்டும், வில்லன் ஏன் துரத்தவேண்டும் என்பதை காட்டுவதற்கு எப்படியும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும். அதை எப்படி ஓபன் பண்ணபோகிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்ததுதான் மிச்சம். இரண்டாம் பாதியிலும் ஓநாயின் ஓட்டம் நிற்கவே இல்லை. இன்னுமா ஃப்ளாஷ்பேக்குக்கான அவசியம் வரவில்லை என்றே யோசிக்க வைத்தது.

ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியை நெருங்கும் போது, கண் தெரியாத அந்த குழந்தை ‘அனிமல் ஸ்டோரி’ கேட்பதையும், அதையே முன் குறிப்பாக வைத்து, ஒரே சீனில் ஒட்டு மொத்த ஃப்ளாஷ்பேக்கையும் மிகமிக மெச்சூர்டாக சொல்லும் பாணியும் அபாரம். இயக்குநராகவும் நடிகராகவும் மிஷ்கின் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் இடம்.

ஆங்காங்கே லாஜிக் மிஸ்ஸானாலும் கூட, அதை யோசிக்க விடாமல் ஓநாயோடு நம்மையும் அந்த நள்ளிரவு பயணத்தில் உள்ளே இழுத்துவிடுகிறது இளையராஜாவின் இசையும், ஒளிப்பதிவும்.

அப்படியே மறுநாள் உட்கார்ந்தது ‘ராஜா ராணி’ படத்தின் ப்ரிவியூவில்.

ஏற்கனவே இந்தப்படத்தைப் பற்றியும் ‘மெளனராகம் – 2’ என்று ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பியிருந்ததால், பழையதை ரீவைண்ட் செய்யும் (இது ரீமேக் அல்ல பாஸ்.. ரீவைண்ட்) முயற்சி எப்படியிருக்கும் என்பதை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
3 - cinema raja rani. 2
சொல்லிவைத்த மாதிரி மெளனராகம்தான். ஆனால் அட்லீ செய்திருக்கும் புத்திசாலிதனம் ‘THERE IS LIFE AFTER LOVE FAILURE..THERE IS LOVE AFTER A LOVE FAILURE’ என்று தனது குருநாதர் ஷங்கரின் பாணியில் ஒரு அட்டகாசமான ஸ்லக் லைனை பிடித்ததுதான்.

மெளனராகத்தின் பாதிப்பு இருந்தாலும், இதில் இரண்டு ஜோடிக்கும் ஃப்ளாஷ்பேக்குகள். அதில் இன்றைய யூத்தின் மன நிலையை பிரதிபலிக்கும் வசனங்கள் என களைக்கட்டியிருக்கிறது என்பது உண்மை.

படத்தில் பட்டையைக் கிளப்புவது நயன்தாரா, ஜெய் அடுத்தது ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். கதையின்படி ஹீரோ ஆர்யா என்றாலும், ஃப்ளாஷ்பேக்கில் இவரது எபிசோட் அவ்வளவாக இம்ப்ரஸிவ்வாக இல்லாததால், ஜெய்க்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். நிச்சயம் ஜெய்க்கு இது ஒரு ரீஎண்ட்ரி.

மெளனராகத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்று இதை சிம்பிளாக சொல்லிவிட முடியாது. காரணம் அட்லீயின் இளமையான அப்ரோச்.

இந்த இரண்டுப் படங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு தளங்களில் கையாளப்பட்ட திரைக்கதை என்றாலும், இரண்டுமே வெற்றிதான்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை…இந்த ஓநாயையும் ஆட்டுக்குட்டியையும் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் இல்லாமல், தொப்புளைக் காட்டாமல், குத்தாட்டம் போடாமல், புகைப்பிடிப்பதையும் சரக்கு அடிப்பதையும் கூடவேகூடாது என்று சொல்லும் முகேஷ் ஹரானேயின் நியூஸ் ரீலை போடுவதற்கான வாய்ப்பை கொடுக்காமல், கதாநாயகியே இல்லாமல், ஹீரோவின் நண்பராகவே வந்து லவ் டிப்ஸ் சொல்லும் சந்தானத்தின் ஸ்டீரியோ டைப் காமெடியை நம்பாமல் ஒரு படத்தை தைரியமாக எடுத்ததற்காக நீங்கள் மிஷ்கினைப் பாராட்ட வேண்டாம்.

ஆனால் முடிந்தால் இந்தமாதிரியான படைப்புகளுக்கு ஆதரவு கொடுங்கள். அது போதும்.மொத்தத்தில் இந்த ஓநாய் இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான சிங்கமாக அவதாரம் எடுத்திருக்கிறது. ராஜா ராணி கலர்ஃபுல்லான ரீவைண்ட்டுக்கும் மவுசு இருப்பதைக் காட்டியிருக்கிறது.

இரா. ரவிஷங்கர்