September 23, 2021

ஒரு பெண் போடும் உடை பற்றி விவாதம் எழுப்பும் அளவுக்கா வெட்டியா இருக்கிறார்கள்?

வெளிநாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு முதலில் போதிக்கபடுவது இது தான். பெண் ணை உற்று நோக்காதே, வேறு பார்வையில் பார்க்காதே, ஆண் , பெண் இருவரையும் சமமாக பாரு என்பது..அங்கு இந்திய மாணவர்களுக்கு கெட்டப் பெயர் வாங்கி தரும் விஷயமும் இதான். பார்வையில் தவறு என்பதை பலர் புரிந்து கொள்ளவே இல்லை. இப்பொழுது பர்தா போட்டுப் பழகிய கணகளுக்கு இடுப்போ, கையோ ஆபாசம். இதுவே நம் நாட்டில் இடுப்பு தெரிய புடவைக் கட்டுவது சகஜம்.. அதே சமயத்தில் முந்தானை விலகாமல் இருக்க வேண்டும் நமக்கு. இதே இன்னொரு நாட்டில் புடவைக் கட்டும பொழுதே முழுக்க கட்ட மாட்டார்கள். சிலர் முந்தானையை இடம் மாற்றி கட்டுவார்கள். இன்னொரு இடம் சென்றால் ஜாக்கட் சட்டையும், கைலி போன்ற உடையும்தான் அவர்கள் கலாசாரம்.
edit sep 24a
சரி அப்படி என்றால் என்ன வேண்டும் என்றாலும் உடுத்தலாமா? நீங்கள் என்ன உடுத்தறீங்க என்ற கேள்விகள் வருது..கண்டிப்பாக ஜிம் போனால் நான் அதற்கு ஏற்ற இறுக்க உடையும்..நீச்சல் சென்றால் நீச்சல் உடையும், கல்யாணம் சென்றால் பட்டுப் புடவையும் கட்டுவேன். ஆபிசுக்கு நீச்சல் உடையில் எப்படி செல்ல முடியாதோ அப்படிதான் நீச்சல் குளத்துக்கும் நைட்டி போட்டுக் கொண்டு செல்வது.

பொதுவாக ஜீன்ஸ், சட்டை போன்றவை எல்லா பெண்களுக்கும் வசதியான உடை.. நம் ஊரில் தடி ஜீன்ஸ் போட முடியவில்லை..எனவே காட்டனில் வந்த லேக்கிங்க்ஸ் மேலே சுடிதார் போன்ற அமைப்பு பெண்களுக்கு எளிதாக இருந்ததாலும்..அடுத்து ஜீன்ஸ் அளவுக்கு மாடர்னாக இல்லாமல் குர்த்தாக்கு பொருத்தமாக உள்ளதாலும் லேக்கிங்க்ஸ் பழகிக் கொண்டனர்.

எதைப் போட்டாலும் ஆபாசம் என்னும் கூட்டத்துக்கு..அடுத்து ஒரு காற்றில் , ஒரு இடத்தில உள்ள துணி விலகல் கூட ஆபாசம் என்பவர்களுக்கு என்ன பதில் சொல்லுவது?…இவர்களின் பெரும்பாலான பாட்டி அல்லது ஆயாக்கள் சட்டை போடாதவர்கள்தான்..கிராமத்து அம்மாக்கள் குளத்தில், ஆற்றில் குளித்து விட்டு உள்பாவடையை உயரக்க கட்டிக்கொண்டு கல கலவென்று பேசிக்கொண்டு இடுப்பில் குடத்தை வைத்துகொண்டு தெரு வழியாக வீட்டுக்கு சென்றவர்கள்தான். பொது இடத்தில குளிக்கும் பொழுது அப்பல்லாம் நாங்கள் நைட்டி போட்டுக் கொண்டு குளித்ததை பார்த்தது இல்லை. ஆற்றங்கரையில் என் பாட்டி புடவை உலர்த்தி காயப்போட்டு உடுத்திக் கொண்டு போவதைக் கூட பார்த்து இருக்கிறேன். எந்த ஆணும் கிராமத்தில் ஒரு அசிங்கமான பார்வை பார்த்ததாய் இல்லை அப்படி பார்ப்பாங்க என்று எந்த அம்மாவும் சொன்னதாய் நினைவில்லை.நம் கலாசாரத்தில் உடை பெரிய விஷயமே இல்லை.

நான் விளையாடும் பொழுது உடைகளையும், ஆண் பசங்களோட விளையாடாதே ஒரு மாதிரி பார்பாங்க என்ற வார்த்தையை என் அம்மா, பாட்டி, சித்தி யாரிடமும் கேட்டதில்லை. இந்த பார்வைகள் ஏன் திடீர் என்று மாறிப்போனது..எங்கு போனாலும் இந்தியப் பார்வை என்று ஏன் ஆனது?

சமூகம் இதை ஆபாசம் என்க..பெண்களும் பயந்து இது ஆபாசம் என்று நினைக்க, வளரும் விடலைப் பருவதினரும் இது கவர்ச்சிப் போல என்று மனம் மயங்க..ஒரு பாலினம் இன்னொரு பாலினத்துடன் இணைந்து பழக முடியாத அளவுக்கு சுவரை ஏற்றி கட்டிக்கொண்டு போகிறோம்..

ஊருக்கு சென்று இருந்த ஒரு தோழி சொன்னது..அங்குள்ள சில ஆண்களின் பார்வை ஊசி மாதிரி குத்திக்கொண்டே இருந்தது ..நானே புடவையை சரி செய்துக் கொண்டே இருந்தேன் என்று..இங்கு இருப்பவர்களிடமே அப்படி ஒரு உணர்வு ஏற்படும்  பொழுது.. வெளிநாட்டுப் பெண் வந்தால்.. அவளுக்கு எப்படி இருக்கும்..ச்சே என்றாகிறது மனம்..இவர்களுக்குள் மாற்றம் எப்படி உருவாக்குவது?

விளையாட்டு வீராங்கனைகளை கூட இன்னும் கொஞ்ச நாட்களில் விட்டு வைக்க மாட்டார்கள் போல..இதை எப்படி சரி செய்வது..சமூக தளங்களில் பெண் உடை அவள் சுதந்திரம் என்பதை அடிக்கடி விவாதிப்பதன் மூலமும்..பெண்கள் தன வீட்டு ஆண் குழந்தைகளிடம் உடைப் பற்றிய பார்வைகளை திறந்த மனதுடன் விவாதித்து அவர்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தை மாற்ற முடியும்.
edit sep 24 b
ஆனால் மீடியாவோ, கலைதுறையோ இதை செய்யாது..காரணம் என்னவென்றால் அவர்களுக்கு இதை காட்டியே பணம் சம்பாதிக்க வேண்டும்.இதை மட்டுமே பர பரபாக்க வேண்டும்..இதையே தொழிலாக செய்ய வேண்டும். இதை அவர்கள் விட மாட்டார்கள்..நாம்தான் விட வேண்டும். வெளியே வர வேண்டும்..பரந்துபட்ட பார்வையை ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் போதிக்க வேண்டும்..நாளைய நம் பெண் குழந்தைகள் வாழ அழகான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

ஜீன்ஸ் பற்றி ஏற்பட்ட சமூக வலைதள விவாதத்தை சொன்னப் பொழுது..என் பையனை ஒரு வெளிநாட்டுப் பெண் கேட்டாளாம்…” உங்கள் ஊரில் ஒரு பெண் போடும் உடை பற்றி விவாதம் எழுப்பும் அளவுக்கா வெட்டியா இருக்கிறார்கள்?? என்று”

அப்படிதான் இருக்கோம் போல..!?

கிருத்திகா தரன்

2 thoughts on “ஒரு பெண் போடும் உடை பற்றி விவாதம் எழுப்பும் அளவுக்கா வெட்டியா இருக்கிறார்கள்?

Comments are closed.