September 24, 2021

ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தமா? ஆரம்பமாகிறது அடுத்த எல்லைத் தொல்லை!

”ஒகேனக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது பாரம்பரிய வகையிலும், சட்டரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் குறுகிய நோக்கத்துடன் ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது.” என்றும் மேலும் ஒக்கேனக்கல்லில் நம் நிலையை உறுதிப் படுத்த தமிழ் அமைப்புகள் போராட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
hokenakkal dec 8
கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு, ரெயில் மறியல் என பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினைக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை திசை திருப்பும் வகையில் எல்லைப் பிரச்சினையை கர்நாடகா தற்போது கையில் எடுத்துள்ளது. ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தம் என்று தற்போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஒகேனக்கல் கர்நாடகா மாநிலத்திற்கு சொந்தம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போதைய கர்நாடக முதல்-மந்திரி மீண்டும் ஒகேனக்கல்லுக்கு சொந்தம் கொண்டாடும் வகையில் பேசியுள்ளதால் தமிழக எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக்குழு தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன் ,மூத்த அரசியல் கட்சி தலைவரும், கர்நாடக முதல்-மந்திரியுமான சித்தராமையா ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்று பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒகேனக்கல் எல்லை தொடர்பாக ஏற்கனவே பலமுறை பிரச்சினைகள் எழுந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் சர்வே துறை, தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களின் சர்வே துறை ஆகியவை ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றை மையப்படுத்தி தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளை அளவீடு செய்து எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் எந்த காலத்திலும் கர்நாடக ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது இல்லை. மொழிவாரி மாநிலம் அமைப்பதற்கு முன்பும் ஒகேனக்கல் தமிழகத்திலேயே இருந்தது. ஒகேனக்கல்லில் இருந்து மேற்கு திசையில் 70 கிலோமீட்டர் தூரத்தில் அஜ்ஜிப்பாறைக்கு அப்பால் வரை தமிழக எல்லைப்பகுதி உள்ளது. ஒகேனக்கல் தமிழகத்தின் ஒரு பகுதி என்பது பாரம்பரிய வகையிலும், சட்டரீதியிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த அரசியல் கட்சியினர் குறுகிய நோக்கத்துடன் ஒகேனக்கல் கர்நாடகாவிற்கு சொந்தம் என்ற கருத்தை பரப்புவது கண்டனத்திற்குரியது.தமிழகத்திற்கு சொந்தமான ஒகேனக்கல்லின் உரிமைகளை பாதுகாக்க ஒகேனக்கல் உரிமை பாதுகாப்புக்குழு தொடர்ந்து போராடும். தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று நஞ்சப்பன் எம்.எல்.ஏ. கூறினார்.