October 19, 2021

ஐ.நாவில் செலவுக்கு பணத் தட்டுப்பாடு!

சர்வதேச அளவில் நடந்த இரண்டு உலகப் போர்களால் சிதையுண்டு, வேற்று கிரகத் தீவுகள் போல் ஆகிப்போன பல தேசங்களில், வேற்றுமை காரணமாக மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலமே அழிந்துவிடும் எனக்கருதி வலிமை மிக்க ஒரு அமைப்பாக, பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்த ‘ஐக்கிய நாடுகள்’ சபை, 1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கப்பட்டது. உலகின் 193 நாடுகளை உறுப்பினர் களாக கொண்டுள்ள ஐ.நா.வின் 2018-19 நிதியாண்டின் பட்ஜெட் ரூ.3,700 கோடி. இந்த பட்ஜெட் நிதியை உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களுடைய பொருளாதார பலத்துக்கு ஏற்ப கொடுத்து வருகின்றன. இதில், அமெரிக்கா தான் ஆண்டு தோறும் அதிகபடியான அதாவது 22 சதவிகிதம் நிதி வழங்கி வருகிறது. ஐநா.வின் நிர்வாகப் பணிகள், மாநாடுகள், சர்வதேச அமைதிப்படைகள் உட்பட பல்வேறு வகைகளில் இந்த நிதியை ஐநா செலவு செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு ஐ.நா. செலவுக்கு பணமில்லாமல் திண்டாடி வருகிறது. இது பற்றி ஐநா பொதுச் ெசயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாம் இதற்கு முன்பு அனுபவப்படாத வகையில், தற்பொழுது நிதிப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை செலுத்த தாமதப்படுத்தியதால், இந்த பற்றாக்குறை ஏற்பட்டு  உள்ளது. இதே நிலைமை நீடித்தால், ஐ.நாவில் செலவுக்கு பணமே இல்லாமல் போய்விடும். ஐ.நா.வின் இந்த நிலை குறித்து உறுப்பு நாடுகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையால், சபையின் மதிப்பு சீர்குலையும் அபாயம் உள்ளது எனவும் உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 112 உறுப்பினர் நாடுகள், தங்களுடைய வழக்கமான பட்ஜெட்டை செலுத்தியுள்ளன. இந்தியா கடந்த ஜனவரி 29ம் தேதியே இந்த ஆண்டிற்கான தனது பங்களிப்பாக 17.91 மில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளது. ஈராக், மால்டோவா, ஜப்பான் மற்றும் மெக்சிகோ நாடுகளும் தங்களின் முழு பங்களிப்பையும் செலுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட 81 நாடுகள் இந்த ஆண்டிற்கான தங்களின் பங்களிப்பை செலுத்தவில்லை. இந்த பட்டியலில் அமெரிக்காவும் அடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.