September 25, 2021

ஐ திரைப்படம் குறித்த கூட்டல் + கழித்தல்!

ஐ திரைப்படம் வெற்றியா ? தோல்வியா ? இந்த கேள்விக்கு பதில் கிடைக்க இன்னும் 5 நாட்கள் ஆகும்… சிறந்த படமா ? சுமார் படமா ? மோசமான படமா? இந்த கேள்விக்கு எல்லா விதமான பதிலும் கிடைக்கிறது. சிறந்த படம் என சொல்பவரகள் 1. விக்ரம் ரசிகர்கள் … தீவிர ரசிகர்கள் .. 2 கேள்விகள் கேட்காமல் … பதில்களைத் தேடாமல் ஜாலியாக படம் பார்க்கும் வகையைச் சேர்ந்தவர்கள் … சுமார் படம் என சொல்பவர்கள் … 1.நிரம்ப எதிர்பார்த்து அவர்கள் நினைத்தது இல்லை எனும் போது இருக்கும் கடுப்பில் பேசுபவர்கள் … 2. படத்தை அலசி ஆராய்ந்து .. முந்தைய சங்கர் படங்களோடு ஒப்பிட்டு பார்ப்பவர்கள் மோசமான படம் என சொல்பவர்கள் … 1. கதையின் அடிப்படையையே ரசிக்காதவர்கள் … 2. பரவிக் கிடக்கும் லாஜிக் ஓட்டைகளை மட்டும் சுட்டிக் காட்டி இதன் பின்னணியில் உள்ள உழைப்பையும் முதலீட்டைப் பற்றியும் கவலைப் படாதவர்கள் ……………… இப்படி எந்த வரிசையிலும் இல்லாமல் படம் குறித்து சில மனமார்ந்த பாராட்டுகளையும் … பதில் கிடைக்காத கேள்விகளையும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
i jan 16
முதலில் மனமார்ந்த பாராட்டப் பட வேண்டியவை
1……. தயாரிப்பாளரின் நம்பிக்கை … கனவு … முதலீடு … தைரியம் ….
2……. சங்கரின் உழைப்பு …
3……. விக்ரம் என்கிற நடிகனின் அர்ப்பணிப்பு … அபாரமான நடிப்பு
4……. சீன தேசத்தின் அழகியல்… அவற்றை படம் பிடித்த தொழிலியல்…
5……. கவர்ச்சி .. நடிப்புத்திறமை …மொழி தெரியாமல் சரியாக வாயசைத்த எமி
6…… கலகலப்பான வசனங்களால் கைதட்டல் வாங்கும் சந்தானம்
7…… ஆங்கிலப் படங்களுக்கு இணையான ஒப்பனை… ஆடை வடிவமைப்பு
8….. வழக்கம் போல லஞ்ச ஒழிப்பு .. அரசியல் ஊழல் … என யோசிக்காமல்
காதல் கதை என தீர்மானித்து அதை வித்தியாசமான பின்னணியில் சொல்ல முயற்சித்த இயக்குனரின் அடிப்படை சிந்தனை.
9…… படம் முழுவதும் உள்ள பிரும்மாண்டத்திற்கு காரணமான கலை இயக்குனர்
10…. படத்திற்கான பாடல்களை இசைக் கோர்வையால் செதுக்கிய ரஹ்மான்.

இனி சில பதில் இல்லா கேள்விகள்… படத்தை பலமாக பாதித்த வைரஸ் கிருமிகள்..

1… இந்த மாடர்ன் உலகத்தில் மாடல் உலகத்தில் ஒரு பிரபல மாடல் அழகியின் தாயார் தன் மகளுக்கு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரே என்கிற கவலையில் 20 வருட மூத்த uncleக்கு ” ஏன் தம்பி இருக்கணும் நீங்களே கல்யாணம் பண்ணிக்கலாமே ” என பழைய பட அம்மா போல கேட்பதுவும் … ultra model கதாநாயகியும் அஞ்சாங்கிளாஸ் படிச்சவ மாதிரி சரி என்பதுவும் … இப்படி ஒரு கல்யாணத்தை நிறுத்திய நாயகன் உடனடியாக உண்மைகளை சொல்லாமல் அவளை கட்டிப்போட்டு துன்புறுத்துவதுவும் … ஐயயோ ஐயோ … யாருமே இல்லையா இதையெல்லாம் முதலிலேயே இயக்குனரிடம் சொல்ல .. அல்லது அவருக்கும் சொந்த புத்தி இல்லையா என்றெல்லாம் தோன்றும் போதே படம் அன்னியன் போல ஜொலிக்காமல் அன்னியமாகிறது.

2…. ஒரு திருநங்கை கதாபாத்திரத்தை திறமைசாலி என அறிமுகம் செய்து அட என வியக்கும் போதே அடுத்தடுத்த காட்சிகளில் நடக்கிறது அ…நியாயம் ஏதோ நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்டதோ என பொறுத்துக் கொள்ளலாம் என பார்த்தால் அந்த பாத்திரத்தை முக்கியமான எதிர் மறை பாத்திரங்களில் ஒன்றாக்கி … ஒரு கொடுமையான தண்டனையாலும் … சந்தானம் சொல்லும் வசனங்களாலும் அந்த மொத்த சமூகத்தையும் அசிங்கப் படுத்திய கொடுமை இவர் ஜெண்டில்மேன் இயக்குனரா என சந்தேகம் வருகிறது.

3…. நாயகியின் 10 வயதில் அவளை முத்தமிட்டவனையே சூடு போடு கொடுமைப் படுத்திய வில்லன் சுரேஷ் கோபி அதே கதாநாயகியுடன் உறவு வைத்தே தீர வேண்டும் என துடித்த மாடல் வில்லனுடன் இணைந்தே திட்டமிட்டு ஹீரோவை அழிக்கிறாராம் .. அதே நாயகியை திருமணம் செய்து கொள்ளும் விழாவுக்கு அழைக்கிறார். அவர் சாட்சியாக தன் வக்கிரங்களை பகிரங்கமாக ஹீரோவுக்கு சொல்கிறார். இப்படிப்பட்ட வில்லன்கள் நிறைந்த இப்படத்தின் இயக்குனரா முதல்வன் ரகுவரன் போன்ற கதாபாத்திரத்தையும் நமக்கு தந்தார். என்ன கொடுமை சார் இது.

4…. சுரேஷ் கோபி கொடுத்த வைரஸ் தாக்கியதில் ஹீரோவுக்கு பல் போகிறது .. முடி போகிறது .. பலம் போகிறது … ஆனால் அதற்கு பின் யார் என்ன தந்தாரோ அதே விக்ரம் டிரெயின் மேலே சண்டை போடுகிறார் .. கடப்பாரையால் அடி வாங்கினாலும் அசுர பலத்துடன் எழுகிறார். ஹீரோவுக்கு போடும் ஊசி அயல் நாட்டில் இருந்து வருகிறது .. நாய்க்கடி பட்ட வில்லனுக்கு போடும் வைரஸ் , நாய்க்கடிக்கான ஊசி போன்ற பேக்கிங்கில் சில நிமிடங்களிலேயே தயாராகிறது .. எந்திரன் விஞ்ஞானியை … ரோபோ சிட்டியை படைத்தவர்தான் இந்த படத்தின் ஜிம் ஹீரோவையும் ஜீரோ வில்லன்களையும் படைத்தார் …. சுஜாதா சார் some how please come back …

5…. சீன தேசத்தில் நடக்கும் சைக்கிள் சேஸ் மற்றும் சண்டைக் காட்சியில் ஏதேனும் விறுவிறுப்பு .. பிரமிப்பு .. இருக்கிறதா … இப்படி அயல் நாட்டில் அடியாட்களை வைத்து ஹீரோவை அடிக்கும் செல்வாக்கு படைத்தவர் உள் நாட்டில் உள்ளூர் விளம்பரத்தில் நடிக்கிறாராம் … தவிக்கிறாராம் … அது ஒரு நகைச்சுவைக் காட்சியாம். எனனதான் ஆச்சு நம்ம டைரக்டருக்கு…

6. … ராம்குமார் ஒரு வில்லன். தோற்றத்தில் வில்லத்தனம் இல்லை … நடிப்பில் அது தெரியவில்லை … காட்சிகளில் புதுமையும் இல்லை … எதுவும் இல்லை . .. இங்கெல்லாம் வில்லன் பாத்திரத்தில் நடிக்கத் தெரிந்த ஒரு நடிகரை தேர்வு செய்திருந்தாலாவது பரவாயில்லை.. நல்ல மனிதராக தோன்றும் போது impress இவர் வில்லன் என வரும் போது ஐயோ பாவம் … இப்படியும் ஒரு கொடுமை இப்படத்தில்….

7. .. உச்ச கட்ட கொடுமை சுரேஷ் கோபியின் கதாபாத்திரமும் அந்த முகத்தால் தர முடியாத வில்லன் நடிப்பும்.
கடைசியாக எதிர்பார்ப்பை ஏற்றும் வித்தை தெரிந்த இயக்குனர் இம்முறை அதை நிறைவேற்றும் பொறுப்பில் தவறி விட்டாரோ என தோன்றுகிறது …. அதன் விளைவுகள் தயாரிப்பாளரை பாதிக்குமா … நடிகர் விக்ரமின் உழைப்புக்கு உரிய வெற்றி கிடைக்குமா … என தெரியவில்லை .. தெரிந்து விடும் சில நாட்களில்…..!

வெங்கட்சுபா