September 18, 2021

ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தாச்சு!

ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பலின் எடை 7 ஆயிரத்து 500 டன். 164 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. 30 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இதில், 40 அதிகாரிகளும், 350 மாலுமிகளும் பணியாற்றுவார்கள். கடற்படையின் அங்கமாக செயல்படும் அமைப்பின் வடிவமைப்பில், மாஜாகான் கப்பல் கட்டும் நிறுவனம், இதை கட்டி உள்ளது. இந்த கப்பலில், விண்ணில் பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கடலிலும், தரையிலும் உள்ள இலக்குகளை குறிபாய்ந்து தாக்கும். அதிநவீன ராடார்கள், 76 எம்.எம். மற்றும் 30 எம்.எம். ரக துப்பாக்கிகள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.என்.எஸ் கொல்கத்தா போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக அரபிக் கடலில் சோதனை செய்து இந்திய கடற்படை சாதித்து இருந்தது நினைவு இருக்கிறதா? அப்படி பர்பகெட்டாக வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் நம் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
INS-Kochi-main
இது, கொல்கத்தா பிரிவுக்காக அதுவும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது கப்பலாகும். இந்த கப்பலை இந்திய கடற்படையில், முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி, மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது. அங்குதான் அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு, கப்பலை கடற்படையில் சேர்த்தார். அவர் கப்பலை சுற்றிப் பார்த்தார்.

“இந்த கப்பலின் தோற்றம், வெளிநாட்டு கடற்படை கப்பலைப் போல நன்றாக உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கான உள்நாட்டுமய திட்டத்தை கடற்படை வகுத்துள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தி கூடங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் துறையிலும் இதுதொடர்பாக மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில், நமது கடற்படைதான் ஆதிக்கம் செலுத்தும். இன்னும் 5 ஆண்டுகளிலேயே, ஏவுகணை தொழில்நுட்பத்தில் உள்நாட்டுமயம் பெரிய அளவில் இருக்கும்.” என்று மனோகர் பாரிக்கர் கூறினார்.