September 27, 2021

ஐயா.. எங்கள் லெட்டர் பேடை அபேஸ் பண்ணிட்டாங்கய்யா! – தே மு தி க போலீஸில் புகார்!

தே.மு.தி.க.வின் லெட்டர் பேடில், விஜயகாந்த் கையெழுத்தையும் போட்டு, அவர் அறிக்கை வெளியிட்டதுபோல, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் அந்த அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. போட்டியிடவில்லை, என்ற வாசகத்திற்கு பதிலாக திராவிடமுன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என்ற தவறுதலான வாசகம் அதில் இடம் பெற்று இருந்தது.
dmdk vi kan jun 3
இந்த தவறான போலி அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதான், தே.மு.தி.க. வழக்கறிஞர்கள் அணி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. வழக்கறிஞர்கள் அணி செயலாளர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில்,” நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் வழக்கறிஞர் அணி செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எங்கள் கழகத்தின் லெட்டர் பேடை தவறாக பயன் படுத்தி அதில் எங்கள் கழகத்தின் தலைவர் அறிக்கை கொடுத்ததுபோல, ஒரு அறிக்கையை மோசடியாக தயார் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது எங்கள் கட்சியின் தலைவருக்கும், எங்கள் கட்சிக்கும் அவப்பெயரையும், களங்கத்தையும் விளைவிப்பதாகும். தவறான இந்த போலி செய்தியை வெளியிட்டுள்ள நபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன், விஜயகாந்த் பெயரில் வெளியான போலி அறிக்கையின் நகலையும் இணைத்திருந்தனர்.