September 18, 2021

ஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை

டில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த நிதி கமிஷன்களால் தமிழகம் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளது. 15ஆவது நிதி கமிஷனில் சில விதிமுறைகள் மாற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டில்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4ஆவது நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ”இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

வேளாண்மை துறை

”விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டுவரும் இந்த மாநாட்டின் குறிக்கோள் நிறைவேறவேண்டும். அதற்கு இணைய தேசிய வேளாண் சந்தை (e-Nam), மண் சுகாதார அட்டைகள், பின்தங்கிய மற்றும் முன் தங்கிய சந்தைகளை இணைத்தல், நீர் பாதுகாப்பு மற்றும் பாசன நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவற்றை இணைத்து செயல்படுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சுகாதாரம்

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தினால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின்மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 26.86 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் உள்ள தேசிய சுகாதார திட்டத்துடன் இணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

”6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு கருத்தில்கொண்டு செயலாற்றி வருகின்றது. இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1.68 லட்ச தாய்மார்கள் மற்றும் 6.85 லட்ச குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 1,477 கிராமங்களில், யாரும் இல்லாமல் அநாதையாக விடப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கும் சிறப்பு இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் தடுப்பூசி வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றோம்” என்று கூறினார்.

மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தாருங்கள்

”தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களும் சமூகப் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளன. மத்திய அரசின் திட்டத்தின்கீழ், வரும் 2018 – 2019 நிதியாண்டிலாவது இந்த 2 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகளை அமைக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.

காவிரி வாரியம் உடனடியாக அமைக்கவேண்டும்

”தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிகளின் நீரையே முழுவதுமாக நம்பியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை உடனடியாக கொண்டுவரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

நதிகள் இணைக்கப் படவேண்டும்

”நாட்டில் உள்ள நதிகளை ஒன்றிணைக்கப்படவேண்டும். அதன் மூலமாக மட்டுமே அனைத்து மாநிலங்களும் பயன்பெற முடியும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னார், பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகியற்றை இணைக்கவேண்டும் என்று முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்” என்று நினைவுகூர்ந்தார்.

நிதி கமிஷனால் தமிழகம் பாதிப்பு

”அடுத்தடுத்த நிதி கமிஷன்கள், தமிழகத்திற்கு நியாயமற்றதாக இருந்துள்ளன. 14ஆவது நிதி கமிஷன், மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய வரியின் அளவை 32 சதவீத வரியில் இருந்து 42 சதவீத வரியாக தமிழகத்திற்கு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்திற்குள் வழங்கப்படும் நிதியின் அளவு 4.969 சதவீதத்தில் இருந்து 4.023 சதவீதமாக குறைந்தது” என்று பழனிசாமி கூறினார்.

”15 ஆவது நிதி கமிஷனும் எங்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். அதில் உள்ள சில விதிமுறைகள் மட்டும் சரிசெய்யப்பட்டுவிட்டால் அதிலிருந்து தமிழ்நாடு சிறிது பயனடையும்” என்று கேட்டுக்கொண்டார்.

.தமிழகத்தில் உள்ள காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படவேண்டும். கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் புணரமைப்பு பணிக்காக கூடுதலாக ரூ.10 கோடியை ஒதுக்கவேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆற்றிய ஆங்கில உரையின் நகலைக் காண இங்கே கிளிக் செய்யவும்

https://drive.google.com/open?id=10Htd2idw4WSSXzp7V_pP3gFioPiZ9cKD