April 11, 2021

ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் விலகியது விவோ!

சீன நிறுவனங்கள் எல்லைப் பிரச்னையை தொடர்ந்து எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் விலகியுள்ளதால் புதிய ஸ்பான்சரை தேர்வு செய்யும் நெருக்கடிக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை. நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் யார் என்ற சிக்கல் பிசிசிஐக்கு எழுந்துள்ளது. 2018ம் ஆண்டுமுதல் 5 ஆண்டுகால ஒப்பந்தத்துக்காக ரூ.2199 கோடி அளித்து ஸ்பான்சராக இருந்து வருகிறது விவோ. ஆனால் சமீபத்தில் இந்திய சீனா எல்லையான லடாக்கில் இருநாட்டுப்படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன நிறுவனங்களின் முதலீடுகளை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மக்களிடையே சீன நிறுவனங்கள் மீது எதிர்ப்புணர்வு எழத்தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனம் விலக முடிவு செய்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் ஸ்பான்சராக தொடரவும் 2023 ஆம் ஆண்டுவரை ஐபிஎல் கூட்டணியில் தொடரவும் விவோ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.