September 25, 2021

ஐஏஎஸ் உடை விவகாரம் …ஒரு அலசல்!

சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித் தலைவர் தேவசேனாபதி. இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமுள்ள, எந்தவித வளர்ச்சியும் இல்லாத, மிகப் பின்தங்கிய மாவட்டங்களில் பணியாற்றும் ஆட்சித்தலைவர்கள். துடிப்பு மிக்க இளம் ஆட்சிப்பணியாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
edit vicchu 18
கடந்த மாதம் இந்தப்பகுதிகளில் மக்கள் நலப்பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திரமோடியும், மாநில முதல்வர் ராமன் சிங்கும் சென்றனர். அப்போது அமித் கட்டாரியா சுத்தமான நீலக்கலர் சட்டையும், கருப்புப் பேன்ட் மற்றும் லெதர் ஷூக்கள் அணிந்திருந்திருக்கிறார். குளிர்கண்ணாடியும் அணிந்திருந்திருக்கிறார். (முதல்படம்).
தேவசேனாபதி படத்தில் உள்ளதுபோன்ற உடை அணிந்திருக்கிறார் (இரண்டாவது படத்தில் வலது புறம் இரண்டாவது நபராக வெள்ளைச் சட்டை, கருப்பு பேன்ட்டில் இருப்பவர்).

இவர்கள் இருவருக்கும் மாநிலத்தின் பொது நிர்வாகத்துறை சார்பில் ”அனைத்திந்திய சேவைப்பணி (நடத்தை) விதிமுறைகள் 1968 பிரிவு 3(1) சொல்வதுபோல ” ஒவ்வொரு சேவைப்பணி உறுப்பினரும் அனைத்து நேரங்களிலும் கடமைக்கு முழு ஒருங்கிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றாமல் இருப்பது உறுப்பினராக அல்லாததற்கு சமம்” என்பதற்கு ஏற்றார்போல தங்கள் செயல் இருக்கவில்லை. எனவே இதுபோன்று எதிர்காலங்களில் நடந்து கொள்ளக்கூடாது என இந்த அரசு தங்களை எச்சரிக்கிறது என்று எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

மேலும் GAD எனப்படும் பொது நிர்வாகத்துறையின் அதிகாரிகளும், ஐஏஎஸ் ஆட்சிப்பணியாளர்கள் விஐபிக்களை சந்திக்கும்போது, நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, விழாக்களுக்குச் செல்லும்போது, ஐஏஎஸ் அகாடமிக்குப் பயிற்சிக்குச் செல்லும்போது அணியவேண்டிய உடைகள் பற்றி வழிகாட்டுதல்கள் உள்ளன என்றே கூறுகின்றனர்.
எனினும், இந்த எச்சரிக்கைக் கடிதங்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் பெருத்த விவாதத்தை உருவாக்கியது. அதேசமயம், இதுபற்றிய விவாதத்தில் பங்கேற்ற பலரும் பல கோணங்களில் இதுபற்றி விவாதித்துள்ளனர்.

காரணம், இது பிரிட்டிஷ் அரசாங்க காலத்தின் பழமையான நடைமுறைகளைப் பின்பற்றுபது போல உள்ளது என்றும், காலம், இடம், சூழலுக்கு ஏற்றார்போல நாகரிகமாக, சுத்தமான உடை அணிந்தால் போதுமானது என்றுமே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பெயர் வெளியிடாத ஒரு ஐஏஎஸ் அதிகாரி, 43 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு இடத்தில் இரண்டு மூன்று நாட்கள் களத்தில் பணியாற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பந்த்காலா எனப்படும், அந்த மாநில அரசின் பொது நிர்வாகத்துறை கூறும் உடைகளை அணியவேண்டும் என்பதே கொடுமையான ஒரு எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். (படத்தில் உள்ள இறுக்கமான கருப்புக் கலர் உடையே பந்த்காலா சூட்).
அதேசமயம் ஐபிஎஸ் அதிகாரிகள் காக்கி யூனிபார்ம் அணிகிறார்களே என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் உடல் ரீதியான அவர்களின் உடற் பயிற்சி முறைகளும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான உடற்பயிற்சி முறைகளும் வேறு வேறு என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

1958 ம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த சோமசுந்தரம் மத்திய உள்துறை அமைச்சர் ஜி.பி.பந்த், அமைச்சர் சி.சுப்ரமணியன் ஆகியோர் ஊட்டி வந்திருந்தபோது தலையில் தொப்பி அணிந்த நிலையில் அவர்களோடு உரையாற்றியதைக் குறிப்பிடும் மூத்த அதிகாரிகள் சட்டீஸ்கர் அதிகாரிகளிடம் வாழ்மொழியாக அவர்களின் உடைகள் பற்றி சுட்டிக்காட்டியிருக்கலாம் என்றும் எச்சரிக்கை கடிதம் எழுத்துப்பூர்வமாக அளித்தது அவசியமற்றது என்றுமே கூறுகின்றனர்.

இதுவே எனது நிலைப்பாடும். மேலும், ஒரு மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, பலி எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம்பேர். அங்கு மீட்புப்பணியில் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் களத்தில் ஈடுபட்டு வருகிறார் அப்போது பிரதமர் நரேந்திர மோடி அங்கே வருகிறார். அப்போதும் படத்தில் காணப்படும் கருப்புக்கலர் பந்த்காலா சூட் கோட்டை அணிந்தே இருக்கவேண்டுமா அந்த ஐஏஎஸ் ஆட்சித்தலைவர்?

– விஷ்வா விஸ்வநாத்