October 20, 2021

ஏலம் போகிறது மெரினா நீச்சல் குளம்..!

ஞாயிறுதோறும் நண்பர்களுடன் மெரினாவில் ஜாக்கிங் போவது வழக்கம். அப்போது மெரினா நீச்சல் குளத்தை கடந்து தான் செல்வேன். மற்ற நாட்களில் ஓரளவிற்கு இருக்கும் கூட்டம் ஞாயிறு என்றால் அள்ளும்.எனக்கு பிடித்தமான விசயங்களில் ஒன்று நீச்சல் என்பதால் நானும் அவ்வப்போது இந்த நீச்சல் குளத்திற்குள் பாய்ந்திருக்கிறேன்.
swimming pool
ஏழை நடுத்தரம் அதிகாரத்திலிருப்பவர்கள் என இங்கு பலதரப்பட்ட முகங்களை காணமுடியும். அதிலும் பெரும்பாலும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்கள் தான் அதிகளவில் வருவார்கள்.

ஒரு மணி நேர கட்டணம் 15 ரூபாய் என்பதால் அந்த சிறுவர்கள் பணத்தை கட்டிவிட்டு ஆசை தீர குளித்துவிட்டு போவார்கள். அதோடு இந்த நீச்சல் குளத்திலிருந்து தான் பல ஏழை நீச்சல் வீரர்கள் தேசியளவில் சென்று பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறார்கள்.

ஆனால் இனிமேல் அதுபோன்ற குழந்தைகளின் நீச்சல் ஆசை என்பது கனவாகக்கூடும். ஏனெனில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த குளத்திலிருந்து வருவாயை அள்ள திட்டம் போட்டிருக்கும் சில களவாணிகளின் கூட்டுச் சதியால் மாநகராட்சி இதனை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்திருக்கிறது. இன்று ஏலம் நடக்கவிருப்பதாக தகவல் வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஆனந்தமாக குளிக்கும் இந்த சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தெரியாது.. இனிமேல் அவர்கள் இந்த நீச்சல் குளத்தை கேட்டுக்கு வெளியே நின்று தான் பார்க்க வேண்டும் என்பது.

தனியார்கள் வசம் போனால் இஷ்டத்திற்கு பேக்கேஜ் போட்டு அமவுண்டுகளை வசூலிப்பார்கள். சாதாரண மக்கள் உள்ளே நுழைய முடியாது.

மாநகராட்சி பள்ளிகளை எல்லாம் கிட்டத்தட்ட சோலி முடித்தாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக மெரினா குளத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு மாநகராட்சி வசமிருக்கும் மேலும் சில நீச்சல் குளங்களையும் தனியாரிடம் தள்ளுவதற்கான சூழ்ச்சி தான் இது. வழக்கறிஞர் நண்பர்கள் இதை தடுக்க வழக்கு போட முடிவு செய்திருக்கிறார்கள்..

அதற்கு முன் மெரினா நீச்சல் குளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலை வாபஸ் பெற்றுக் கொள்வது தான் மக்கள் முதல்வருக்கும், மாநில முதல்வருக்கும் அழகு..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா