September 29, 2021

ஏமாற்றத்தின் அடையாளமாக திருநாமத்தை பயன்படுத்துவதா?ஹைகோர்ட்டில் வழக்கு

சினிமா, மற்றும் போராட்டங்களில் ஏமாற்றத்தின் அடையாளமாக, நாமத்தை பயன்படுத்துவதை தடுக்க கோரிய மனு மீதான விசாரணை, இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
court nov 27
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த பெரியநம்பி ஸ்ரீநரசிம்ம கோபாலன், ஐகோர்ட் மதுரை ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,”பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் திருச்சின்னம்தான் திருநாமம். வைணவத்தை பின்பற்றுபவர்கள் நெற்றியில் திருநாமம் இடுவதை பெருமையாக கருதுகின்றனர். வேதங்கள், கீதையில் திருநாமத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமை கொண்ட நாமத்தை, ஏமாற்றுகிற, ஏமாற்றப்பட்டதன் அடையாளமாக திரைப்படங்கள், போராட்டங்களின் போதும், அது தொடர்பான போஸ்டர்களிலும் பயன்படுத்துகின்றனர். ஒரு மதத்தின் புனிதமான அடையாளத்தை தவறாக பயன்படுத்துவது தண்டிக்கக்கூடிய குற்றம் என அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25ல் கூறப்பட்டுள்ளது.

இது இந்திய தண்டனைச் சட்டம் 295வது பிரிவின் கீழ்குற்றமாகும். வருங்காலத்தில் திருநாமத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் பங்கேற்பவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். திரைப்படங்களில் ஏமாற்றத்தின் அடையாளமாக திருநாமத்தை பயன்படுத்துவதை தடை செய்ய சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.