September 24, 2021

ஏன் குடும்பம் தனிச் சிறப்பு வாய்ந்த நிறுவனமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது?

’’சாப்ட வர்றீங்களா’’

”ம்’’

”கிளம்பிட்டீங்களா”

“ம்ம்”

”டீ போடணுமா?”

“ம்ம்ம்”

’செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றீங்களா?”

’’ம்ஹூம்”

இது மனைவியும் கணவனும் பேசுவது.
edit sep 2a
இப்பொழுது கணவனும் மனைவியும் பேசுவது.

“இங்க வச்ச சட்டையை காணோமே?”

சமையலறைக்குள் இருந்து ஒரு டம்ளர் பட்டென்று வைக்கப்படும் சப்தம் கேட்பது.

“ இங்க இருந்த கர்ச்சீஃப் எங்கதான் போகுமோ?”

தட்டொன்று வேகமாக தரையில் வைக்கப்படும் சப்தம்.

“வண்டி சாவியைக் காணோமே”

குழம்புக் கிண்ணம் ஒன்று வேகமாக கீழே போடப்படும்.

இவ்வுரையாடலை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொண்டு செல்லலாம்.

திருமணமான புதிதிலோ, காதலிக்கும் நேரத்திலோ வாய் ஓயாமல், தொட்டதற் கெல்லாம் சிரித்துக் கொண்டும், சின்ன விஷயம் ஒன்றுவிடாமலும் பகிர்ந்து கொள்ளும், கணவனும் மனைவியும் அதிகபட்சம் ஐந்தாண்டுகளில் வீட்டில் அன்னியோன்யமான பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள். வீடுகளில் பேச்சென்பதே வெறும் செய்திகளை கேட்டறிவதற்கு என்பதாகிவிடுகிறது. முப்பது வயதிற்குமேல் குழந்தைகள்மூலம் பேசிக் கொள்கிறார்கள். ஐம்பது வயதிற்குமேல் சுத்தமாக பேச்சொழிந்து போகிறார்கள். ஒரு சில தம்பதியினருக்கு இந்த கால எல்லை முன்பின்னாக இருக்கலாம். ஆனால் விலகி நிற்கும் சதவீதம் நிச்சயம் இருக்கவே செய்கிறது.

கணவன் மனைவியை சார்ந்திருக்கும் இடங்களும், மனைவி கணவனை சார்ந்திருக்கும் இடங்களும் குடும்பத்திற்குள் என்னவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மேற் சொன்ன உரையாடல்கள் ஓரளவுக்கு உதவி புரியலாம்.

நம்முடைய உறவுகளிலேயே மிக உன்னதமான உறவாக கணவன் – மனைவி உறவைச் சொல்லுகிறோம். இருவரும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பை உலகின் தனிச் சிறப்பு வாய்ந்த சமூக நிறுவனமாக கொண்டாடுகிறோம். குடும்ப அமைப்பு குலைந்து   விடக்கூடாது என்பதில் நீதிபதிகளில் இருந்து அரசியல்வாதிகள் வரையிலான சமூகத்தின் அனைத்துத் தரப்பு பெருமக்களும் கவனமாக இருக்கிறார்கள்.

ஏன் குடும்பம் தனிச் சிறப்பு வாய்ந்த நிறுவனமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது? உலகம் முழுக்க ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழவில்லையா?அன்பாக இல்லையா? குழந்தை பெற்றுக் கொண்டு தங்களுடைய சந்ததியை வளர்க்கவில்லையா என்றால், நம் பதில் ஆம் தான். ஆனால் உலகின் வேறெங்கும் இல்லாத ஒரு பிணைப்பு, பந்தம், அன்பு இன்னும் குடும்பத்தின் வழியாக நம்மிடையே ஒட்டிக் கொண்டிருக்கிறது என வாதித்துக் கொண்டிருக்கிறோம். இதில் உண்மை எவ்வளவு தூரம் இருக்கிறது என வாதித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
edit sep 2b
நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், ஓர் இடத்தில் தங்கி, இனக் குழுக்களாக சேர்ந்து வாழத் தொடங்கிய பிறகே நாகரிகங்கள் உருவாகின. பண்பாடு, கலைகள் எல்லாம் குழுவாக மனிதன் வாழத் தொடங்கிய பிறகே வடிவம் பெற்றன. எனவே, குழுவாக சேர்ந்து வாழ்வது மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், உயிரினங்கள் எல்லாவற்றிற்குமான பாதுகாப்புதேடும் அடிப்படையான குணமாகும். சேர்ந்து வாழ்வது என்பது பலம். சக்தியின் ஒருங்கிணைப்பு. இனக் குழு மக்கள் சேர்ந்து வாழ்ந்ததில் இருந்தே குடும்பம் உருவானது. குடும்பம் என்பது சமூகத்தின் மிகச் சிறிய அலகாக இருந்தாலும், அதுவே பரிணாமத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உருவாக்கும் அலகாகவும் மாறியது.

பிடித்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான இடமாக குடும்பம் இருக்கிறது. அந்த விருப்பம் மட்டுமே முதன்மையாக இருந்தவரை குடும்பங்களில் அமைதி தழுவவே செய்திருக்கும்.

ஆனால், குடும்பத்திற்குள் யார் முக்கியமானவர் என்ற நீயா நானா தொடங்கிய பிறகு, குடும்பம் சுவர்களால் ஆன, இறுக்கமான ஒரு கட்டிடமாக மாறிவிட்டது.

மனிதர்களின் ஒழுக்கத்தை, பாலியல் தேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக குடும் பங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் ஓர் ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதும், ஒரு பெண் பல ஆண்களுடன் திருமணம் செய்து கொள்வதும் இயல்பான ஒன்றாகவே நடைமுறையில் இருந்தது. ஆனால், ஆணும் பெண்ணும் சேர்ந்த உறவில் பிறந்த குழந்தைகளை ஒட்டி பல்வேறு சிக்கல்கள் முளைத்தன. குடும்பத்தின் சொத்து ரிமை உள்ளிட்ட இச்சிக்கல்களுக்கான தீர்வாகவே மனித உறவுகள் முறைப் படுத்தப்பட்டன. இரண்டாவது, ஆண் தனக்கு விருப்பமான பெண்ணை தன்னுடைய பிரத்யேகமான உடைமையாக நினைக்கத் தொடங்கியதும் குடும்பம் என்ற அமைப்பு நிலைபெறுவதற்கான முதன்மையான காரணமாகும்.

மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற நிறுவனம் மிக ஆழமான இடத்தைப் பெறவில்லை. அங்கு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியோடு வாழ்வதே முதன்மை. பிடிக்கும் காலம் வரை ஒன்றாக இருப்போம் என்ற புரிதலுடன் தான் அவர்கள் இணைகிறார்கள். என்ன நடந்தாலும் பிரியக்கூடாது என்ற கட்டாயத்துடன்தான் நாம் ஒன்றிணை கிறோம். நிறுவனம் அவர்களுக்கு முக்கியமில்லை. நமக்கு நிறுவனம் மிக முக்கியம். குறிப்பாக குடும்பம் என்ற நிறுவனம் மதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தை முறித்துக் கொள்ள விரும்பும் ஆணோ பெண்ணோ தங்களின் மதநெறிகளில் இருந்து வழுவியதாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள். இங்கு ஒரு தம்பதியின் சொந்த வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. அவர்களின் வாழ்க்கையோடு மதம், சாதி, பரம்பரையின் பெருமை, வட்டாரத்தின் பழக்கவழக்கங்கள் என அசைக்க முடியாத கனத்த சங்கிலிகள் பிணைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு கனத்த ஏற்பாடுகளுடன் தாம்பத்யதிற்குள் நுழையும் இருவருக்கும் தெளிவான, தீர்மானமான கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. தனி நபர்கள் தோற்கலாம். ஆனால் அமைப்பு தோற்கக் கூடாது. அது மெல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் அமைதியையும் குலைத்துவிடும் என்ற பதற்றம் எப்பொழுதின் சமூகத்தின் அடிநாதமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் எளிதாக பிரிந்துவிட முடியாது என்ற கட்டுப்பாடே, இணைவதற்கு முன்பே பலருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லி, ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும் திருமண ஏற்பாடுகளை நிதானமாக நினைத்துப் பார்த்தால் இருவருக்குமே பயத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. “மாப்ளே, கடைசியா சிரிச்சுக்கடா” என ஆண்கள் தங்களுக்குள் கலாய்த்துக் கொள்வதும், “இனிமேல் நீ அவங்க வீட்டுப் பெண்” என பெண்களை பயமுறுத்துவதும் இந்த பதற்றத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.

”வாழ்க்கையில் மாற்ற முடிந்ததை தானே மாற்ற முடியும், தலைவரே நீங்க மாத்துங்க தலைவரே, எத்தனை சட்டை வேண்டுமானாலும் மாத்துங்க” என என்னுடைய நண்பன் ஒருவன் அடிக்கடி கிண்டல் செய்து சிரிப்பான். ஏன் எல்லா ஆண்களுக்கும் திருமணம் என்பது பெரிய கால்கட்டு என்பது போலவும் அத்துடன் அவர்களின் சகல சுதந்திரங்களும் பறிபோவதை போலவும் ஆண்கள் பேசிக் கொள்கிறார்கள் என எனக்குப் புரிவதே இல்லை. சொல்லப் போனால், ஒரு திருமண பந்தத்தின் மூலமாக, ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் முழுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வேர்விட்டு வளர்ந்த ஒரு தாவரத்தை பெயர்த்தெடுத்து வேறோர் இடத்தில் நட்டோ மானால், மிக அரிதாகவே அந்த தாவரம் உயிர் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இயற்கையை விஞ்சும் வகையில் பெண்கள் வேர் பிடித்துக் கொள்கிறார்கள். புதிய மனிதர்கள், புது வகையான உணவுப் பழக்க வழக்கங்கள், சுவை, வீட்டின் நடைமுறை, உறவினர்கள் என்று எல்லாமே புதுசான சூழலில் ஒரு பெண் வாழ நேர்வதை நினைத்தால், மிக ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், இதை வழக்கமான ஒன்றாக நினைக்க வைத்து, எளிதாக திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடுவதில் சமூகம் தன்னுடைய சாமர்த்தியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.

ஒரு நகைக்கடை விளம்பரத்தில், பிரகாஷ்ராஜிடம் தங்களின் பெண் குழந்தைகளை அறிமுகப்படுத்துபவர்கள், இது என் மூத்த டென்ஷன், இது என் முதல் டென்ஷன், இது என்னோட ரெண்டு டென்ஷன் என்று கூறுகிறார்கள். இதில் மாநிலத்தில் முதல் மதிப் பெண் எடுத்த ஒரு மாணவி என்று அறிமுகம் வேறு. அறிவும் அழகும் திறமையும் இருந்தாலும் பெண் குடும்பத்தின் டென்ஷனாகவும் வயிற்றில் கட்டப்பட்ட நெருப்பா கவும் சொல்லி வளர்க்கப்படுவதால்தான் வேரோடு பிடுங்கி நடப்படும்போது பிழைத்துக் கொள்கிறாள். இதுதான் அடைய வேண்டிய இடம், இதற்காகவே தான் பிறப்பெடுத்தோம் என்ற மனப் பயிற்சி எதற்கும் தயாரானவளாக அவளை உருமாற்றுகிறது.

உடைக்க முடியாத தபசொன்றை போல் இருவரின் முன்னும் நிறுத்தப்படும் இந்தப் போட்டியில், வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல…அமைப்பில் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இணையும் முதல் நாளே இருவரின் தோள்களிலும் சுமத்தப் படுகிறது. தங்கள் விருப்பங்களை மீறி அழுந்தும் சுமை ஆணையும் பெண்ணை யும் ஒருவர்மேல் ஒருவர் கசப்புடையவர்களாக மாற்றுகிறது.

வாய் ஓயாமல் பேசி, சிரித்து சிரித்து அன்பு செலுத்தியவர்கள் ஒற்றை வார்த்தையில் பேசுவதும், பேசாமல் போவதும், அன்பற்றவர்களாகவும், ஒருவருக்கு ஒருவர் வாழ்நாள் எதிரிகளாகவும் மாறிப் போவது இந்தக் குடும்பம் தரும் அழுத்தமே… அழுத்தப்படும் எல்லாம் வெடித்தே தீரும் என்பது விதி…

வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் நம் கண்முன்னால் இரண்டே தேர்வுகள் உள்ளன.

அப்பாவிகளாய் அதில் சிக்கி வாழ்வைத் தொலைத்த மனிதர்களை காப்பதா?

நம் பெருமையின் அடையாளமாய் திகழும் குடும்பத்தைக் காப்பதா?

அ. வெண்ணிலா