April 14, 2021

எழுவர் விடுதலை; எல்லாம் மேலே இருக்கறவர் பார்த்துக்குவார்- கவர்னர் தரப்பு தகவல்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு தொடர்பாக கடந்தசில தினங்களுக்கு முன்னர் சுப்ரீம்கோர்ட் ,கவர்னர் இது குறித்து முடிவு அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இது குறித்து மத்திய அரசும் நான்கு நாட்களில் கவர்னர் முடிவு அறிவிப்பார் என தெரிவித்திருந்தது. தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுவிப்பு விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாக கூறி இருந்தனர்.

இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக கவர்னர் தரப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட்டிலும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பேரறிவாளன் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு வரும் 9ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.