October 16, 2021

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்

தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவ மனையில் காலமானார். அவருக்கு வயது 90.1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார்.இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய அவர், சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(திங்கள் கிழமை) இரவு அவர் காலமானார்.
rajam krishnan
திருச்சி மாவட்டம் முசிறியில், சாத்திர சம்பிரதாயங்களில் பிடிப்பு மிக்க குடும்பத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவரான ராஜம், பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, தமது 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளி சென்று படிக்கவும் அனுமதிக்கப் படவில்லை. ஆயினும் ராஜத்தின் வாசிப்பு தாகத்தைப் புரிந்துகொண்டு அங்கீகரித்த மின் பொறியாளரான கிருஷ்ணன் கதைப் புத்தகங்கள் வாங்கித்தருவது, எழுதுவதற்கு ஊக்குவிப்பது என்று ஒத்துழைத்தார். அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜம், 16வது வயதிலேயே எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகதை, நாவல், கட்டுரை என மூவகை எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக்கொண்டார் ராஜம் கிருஷ்ணன். பள்ளி சென்று முறையாகப் படித்திராத அவரது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன. நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து பயணித்த அவர், தம் சம காலத்தின் அரசியல், சமுதாய நிலைமைகளை உற்றுக் கவனித்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில் பதிவு செய்தார்.

குறிப்பாகப் பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது. படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் ராஜம். எழுத்தோடு நின்றுவிடாமல் பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.

சாகித்திய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் நேரு விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. ஒரு விபத்தைத் தொடர்ந்து உடல் நிலையிலும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானாவர் இன்று காலமானார்.

மேலும் விவரங்களுக்கு:http://www.tamilvu.org/courses/degree/p203/p2033/html/p2033661.htm