May 13, 2021

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை – வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம்.
Jayakanthan by jamaal.mini


தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். பாரதி, புதுமைப்பித்தன் இவர்களின் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை.1950-களில் சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. அவரது படைப்புகளுக்குப் புகழும் உரிய அங்கீகாரமும் கிடைத்தன. அந்த இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் “உன்னைப் போல் ஒருவன்” சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.

எந்தவொரு எழுத்தாளர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு உண்டு. ஜெயகாந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் பெரிதும் சிறப்புடையன. அவரது முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ‘முன்னுரை இலக்கியம்’ எனும் ஓர் தனித்த இலக்கிய வகைமையை நம்மால் அடையாளம் காண முடியும்.

ஜெயகாந்தன் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில்,”நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்… “என்று பட்டியலிட்டவர் சாகித்திய அகாதமி விருது,2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது,2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது மற்றும் ரஷ்ய விருதுகளை பெற்றுள்ளார்.”எழுத்து எனது ஜீவன் – ஜீவனம் அல்ல” என்று மார் தட்டிச் சொன்ன ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே!. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றால் அஃது மிகையில்லை என்ற நிலையில் ஜெயகாந்தன் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம்.

படம் : Artist Jamal

1 thought on “எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

  1. ஜெயகாந்தன் இப்போது நலமாகவே இருக்கிறார்

Comments are closed.