September 27, 2021

”எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளின் போராட்டமும்”-புலிகள் தலைவர் பிரபாகரன் பேட்டி !! வீடியோ

இந்திய ராணுவத்துக்கு எதிராக நாங்கள் போரிட்ட நிலையிலும்கூட எங்களுக்கு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தார் எம்ஜிஆர்” : புலிகள் தலைவர் பிரபாகரன்.
ltte mgr
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளின் போராட்டமும் பற்றி புலிகள் தலைவர் பிரபாகரன் ஒருமுறை அளித்த பேட்டியில்,”!கடந்த 1980 களில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த என்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறிப்பாக பழ.நெடுமாறன் போன்றவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதிலும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் என்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்.

முதன்முதலாக அவர் எங்களை சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்திருந்தார் எல்லா அமைப்புகளையும். அந்தவகையில் பாலா அண்ணன், பேபி சுப்பிரமணியம், சங்கர அண்ணன் ஆகிய மூன்று பேர் எங்கள் சார்பாக முதல் சந்திப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவரிடம் (எம்ஜிஆரிடம்) கதைத்தபோது எந்த உதவியும் செய்யத்தயாராக இருப்பதாகத்தெரிவித்திருந்தபோது அடுத்த சந்திப்பில் நானும் சென்று எல்லாரும் கதைத்துக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் சங்கர அண்ணன் மெதுவாக (எம்ஜிஆரிடம்) எங்களுக்கு ஆயுதங்கள் ரீதியாகவும் உதவி தேவைப்படுவதாகக்கூறினார்.

அதற்கு எம்ஜிஆர் ஆயுத ரீதியாக என்ன உதவி தேவைப்படுகிறது என்று கேட்டார். அதற்கு ஆயுதங்கள் வாங்கி அதை அங்கு கொண்டு சென்று எங்கள் மக்களுக்காகப் போராட வேண்டும் என்று சொன்னதுடன் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறினோம். அது ஒரு பிரச்சனை இல்லை அதை உங்களுக்குத் தந்துவிடுகிறேன் என்று உடனே (எம்ஜிஆர்) சொன்னார். ஒரு தயக்கமும் இல்லாமல் உடனே சொன்னதும் எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாகப் போய்விட்டது. எங்களால் நம்பவே முடியாமல் போய்விட்டது, உண்மையாச் சொல்கிறாரா என்ற அளவுக்கு எங்களால் நம்பமுடியவில்லை. சரி அடுத்தநாள் வந்து சந்தியுங்கள் என்று எங்களை அனுப்பினார்.

அடுத்தநாள் அவரைச் சந்தித்தபோதே அந்தத் தொகையை எங்களுக்குத்தந்தார். அது எங்களுக்கு அவர் மீது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்குப்பிறகு அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது, அவரை நானும் அடிக்கடி சந்தித்தபோது மனம் விட்டு பழகக்கூடிய எளிமையான தன்மை அவரிடம் இருந்தது. அவர் ஒரு முதலமைச்சர் என்ற அதிகாரத்தோடு எங்களிடம் பழகவில்லை ஒரு சொந்த சகோதரரைப்போலவே எங்களிடம் பழகினார், எங்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு தரவேண்டும் என்பதில் விருப்பத்தோடு இருந்தார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் விட்டுவிடக்கூடாது எதிர்த்துப்போராட வேண்டும்..அதற்கான நிதி உதவி, ஆயுத உதவியில் இருந்து அனைத்து உதவிகளையும் தரத்தயாராக இருப்தை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அவருக்கு எங்கள்மீது தனிப்பட்ட ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது.

அப்போது அவர் செய்த உதவிதான் இன்னைக்கு உலகம் முழுவதும் நாங்கள் அறியப்படுவதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. அந்த நேரம் அந்த அளவுக்கு எங்களுக்கு உதவி கிடைத்திராவிட்டால் நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. அந்த வகையில் அன்று அவர் செய்த உதவி எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறது. நான் அவரை அண்ணா என்றுதான் அழைத்தேன்.

அவரது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் இருந்திருந்தால் நிச்சயம் எங்களுக்கு இப்போதும் உதவியிருப்பார். மத்திய அரசு எங்கள் மீது ஒரு தவறான நிலைப்பாடு எடுத்தபோதும்கூட, அது மத்திய அரசின் கருத்து என்னைப்பொறுத்தவரை நான் உனக்கு ஆதரவாகவே நிற்பேன் என்று சொன்னவர். இந்திய ராணுவத்துக்கு எதிராக நாங்கள் போரிடும் நிலைவந்தபோதுகூட அதுபற்றி கிட்டு, எம்ஜிஆரிடம் நேரில் சந்தித்து நிலவரம் பற்றிக்கூறியபோது அந்த சூழ்நிலையிலும் கிட்டுவிடம் மிகப்பெரிய தொகை ஒன்றைக்கொடுத்து எங்களுக்கு உதவினார். காரணம் இந்திய ராணுவம் எங்களையும், எங்கள் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதில் அவருக்கு உடன்பாடு இல்லை. எங்கள் ஆயுதப்போராட்டத்தை அவர் நம்பினார்.

தமிழக மக்களைப்பொறுத்தவரை எங்களுக்கு எப்போதும் ஆதரவாகவே உள்ளனர். எங்கள் அமைப்பின் மீதான மத்திய அரசின் தடைகாரணமாகவே அவர்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு உதவிவிடக்கூடாது என்பதற்காகவே எங்கள் அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. அதையும் தாண்டி அம்மக்கள் எங்களுக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்து வருகிறார்கள். உதாரணமாக பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள் எங்களை ஆதரித்ததற்காக சிறைக்குக்கூடச் சென்றனர்.

– பிரபாகரன், விடுதலைப்புலிகள் தலைவர்

பிரபாகரன் பேட்டியை வீடியோவில் பார்க்க + கேட்க : https://www.youtube.com/watch?v=ASx21WL03y0

தகவல் :