October 22, 2021

என் வீடு! என் உரிமை!! – நடிகர் கார்த்திக் தன்னிலை விளக்கம்!

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வரும் வேளையில், இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
Karthik
இது தொடர்பாக கார்த்திக் கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக் களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக்கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தரவேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் தெரிவித்து இருந்தார். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்தனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் கொடுத்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா, அதிரடி புகார் மனு ஒன்றை நேற்று இரவு தேனாம்பேட்டை போலீசில் கொடுத்தார். ”எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன். என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.”என்று சுலோச்சனா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே தனது குடும்ப விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி விளக்கம் கொடுக்க செய்தியாளர்களை கார்த்திக் இன்று(அக்டோபர் 31) சந்தித்தார். அப்போது அவர்,”என் பர்சனல் குடும்பப் பிரச்னை சர்ச்சைக்குள்ளாகி விட்டதால் வெட்கப்படுகிறேன். இப்போது நடப்பது என்னவென்றால் போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பார்ட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன்.

ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் இந்த பிரச்னையை முடிக்க அவர் முன் வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன்” என கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தகவல் :http://jannalmedia.com/dpages.php?id=2156

1 thought on “என் வீடு! என் உரிமை!! – நடிகர் கார்த்திக் தன்னிலை விளக்கம்!

  1. வீட்டுக்கு வீடு வாசப்படி.

Comments are closed.