September 18, 2021

என் நெஞ்சு வலிக்கிறது _ சரத்குமார் ஓப்பன் டாக்!

“நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக உண்மையாக உழைத்திருக்கிறேன். ஆனாலும் என்னைப்பற்றி முறைகேடு செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது, என் நெஞ்சு வலிக்கிறது. தொடர்ந்து இதுபோல் பேசினால், 10 நாட்களில் அவர்களைப்பற்றிய உண்மை ரகசியங்களை வெளியிடுவேன். என் மனதை திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள். அந்த சூழ்நிலையை அவர்கள் உருவாக்கவேண்டாம். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேருக்கு சிக்கல் ஏற்படும். என் பொறுமையை சோதிக்காதீர்கள்” என்று நடிகர் சரத் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
nadigar 1
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலும், விஷால் தலைமையிலும் இரு அணிகள் போட்டியிடுகின்றன. சரத்குமார் அணியை ஆதரிக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று இரவு நடந்தது.

கூட்டம் முடிந்ததும் சரத்குமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகர்கள் ஒரே குடும்பமாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனாலும், தேர்தல் என்று வந்துவிட்டது. நாங்கள் போட்டியிடுகிறோம். தேர்தல் வியூகங்கள், நடிகர்களிடம் நேரில் சென்று ஓட்டு சேகரிப்பது போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. நடிகர் குடும்பம் பிரியக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். ஆனாலும், என்னைப்பற்றி எதிரணியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர். அவதூறாக பேசுகிறார்கள். ஊழல் புகார் சொல்கின்றனர். இதையெல்லாம் கேட்கும்போது, என் நெஞ்சு வலிக்கிறது.

கடந்த காலங்களில் நடிகர்-நடிகைகள் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தேன். கஷ்டப்பட்டு உழைத்தேன். உறுப்பினர்களுக்காக உழைப்பது கடமை என்று கருதினேன். நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக விஜயகாந்துடன் இணைந்து ஒவ்வொரு நடிகர்களிடமும் பணம் திரட்டினோம். அதைக்கொண்டு கடனை அடைத்தோம். மீண்டும் கடன் வரக்கூடாது என்பதற்காக நிறைய ஆலோசனைகள் நடத்தினோம். அந்த ஆலோசனையில், மாதம் ரூ.26 லட்சம் வாடகை வரக்கூடிய நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நல்லதொரு ஒப்பந்தம் போடப்பட்டது. 29 ஆண்டுகள் 11 மாதம் என்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்கு திட்டமிட்டோம். செயற்குழு, பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

அப்போது இந்த ஒப்பந்தம் வேண்டாம், நாங்களே நிதி திரட்டி கட்டிடம் கட்ட ஆவணம் செய்கிறோம் என்று சொல்லியிருந்தால், அந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றிருப்பேன். ஆனால், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் கையெழுத்து வேட்டை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இது அதிர்ச்சி அளித்தது.நடிகர் சங்கத்துக்கு நிறைய நல்லது செய்திருக்கிறேன். நடிகை மஞ்சுளா இறந்தபோது, எத்தனை நடிகர்கள் வந்தனர். நான் போய் நின்றேன். முரளி இறந்தபோது நான்தான் முதல் ஆளாக நின்றேன். பாலச்சந்தர் இறந்தபோது அங்கு இருந்தேன். அங்கு வந்திருந்த ரஜினிகாந்தை கூட்டத்துக்கு மத்தியில் நான்தான் காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன்.
CO3mBKxUAAAcdxK
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற நினைப்பே இல்லாமல் செய்தேன். கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அந்த படத்தை திரைக்கு கொண்டுவர 36 மணி நேரம் உழைத்திருக்கிறேன். கார்த்தியின் ‘கொம்பன்’, விஷாலின் ‘பாயும்புலி’ படங்களுக்கு பிரச்சினைகள் வந்தபோதும் அவற்றை வெளிக்கொண்டுவர முயற்சிகள் எடுத்தேன். அந்த அளவு உறுப்பினர்களை நேசிக்கிறேன். நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே பணிகள் முடிந்து, வருமானம் வர ஆரம்பித்திருக்கும். அதை தடுத்துவிட்டார்கள்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக உண்மையாக உழைத்திருக்கிறேன். ஆனாலும் என்னைப்பற்றி முறைகேடு செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள். தொடர்ந்து இதுபோல் பேசினால், 10 நாட்களில் அவர்களைப்பற்றிய உண்மை ரகசியங்களை வெளியிடுவேன். என் மனதை திறந்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள். அந்த சூழ்நிலையை அவர்கள் உருவாக்கவேண்டாம். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேருக்கு சிக்கல் ஏற்படும். என் பொறுமையை சோதிக்காதீர்கள்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். எங்கள் அணி நிச்சயம் வெற்றிபெறும். எங்களுடைய அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் போட்டியிடுகிறார்கள். மற்ற வேட்பாளர்கள் ஒருவாரத்தில் அறிவிக்கப்படுவார்கள்”என்று சரத்குமார் பேசினார்.