October 21, 2021

எனது 25 ஆண்டு கால கனவு! – “வெண்முரசு’ ஜெயமோகன் நெகிழ்ச்சி!

எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரத நாவல் வரிசையான “வெண் முரசு”வின் முதல் நான்கு பாகங்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. முதல் பாகமான ‘முதற்கனலை’திரைப்பட நடிகர் கமல்ஹாசன் வெளியிட இயக்குநர் சார்லஸ் பெற்றுக் கொண்டார். 2-ம் பாகமான மழைப்பாடலை இசையமைப் பாளர் இளையராஜா வெளியிட எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா பெற்றுக் கொண்டார். வண்ணக் கடல் என்னும் மூன்றாம் பாகத்தை எழுத்தாளர் அசோகமித்ரன் வெளியிட இயக்குநர் ஆண்டனி பெற்றுக் கொண்டார். நீலம் எனப்படும் நான்காவது பாகத்தை எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் வெளியிட வாசகர் கடலூர் சீனு பெற்றுக் கொண்டார்.
jayamohan
இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘மனிதர்கள் எல்லோரும் கதைகளால் பின்னப்பட்டவர்கள். நீங்கள், நாம் எல்லோருமே கதை கேட்பவர்கள். கதைகளால் பின்னப்பட்டவர்கள், நமக்கு மதம் தேவையோ, இல்லையோ, அந்த மதங்கள் தருகிற, அந்த மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை. இசை வடிவத்தில் சொல்வதுதான் வேதங்கள். அதனால் சுருதி என்கிறோம். மகாபாரதத்தை ஜெயமோகன் நாவலாக எழுத, இளையராஜா அதை இசையாக தர, நான் கேட்டு கொண்டே இருப்பேன். வேறெதுவும் தேவையில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. நம் காலத்தில் வணங்கத்தக்க படைப்பாளனாக இந்த மகாபாரத நாவல் வரிசை வழியாக ஜெயமோகன் நமக்கு கிடைத்திருக்கிறார்’’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா ,”ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அவரின் இந்தப் படைப்புக்கு இசையமைக்க நேர்ந்தால், அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் இசையமைக்க முடியுமா எனத் தெரியவில்லை.
மகாபாரதத்தை தமிழில் நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார்” என்றார் அவர்.

எழுத்தாளர் அசோக மித்ரன் பேசும் போது, ‘‘இன்றைய கணினி தொழில்நுட்பம் இல்லாவிட்டால், இப்படியொரு நாவல் முயற்சி சாத்தியமா என்று தெரியவில்லை. கையால் எழுதுவது என்பது மிகவும் அலுப்பு தருகிற விஷயம். கணினி தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த நாவலை ஜெயமோகன் எழுதுவது, பெரிய மகத்தான முயற்சி’’ என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது,‘‘ ஒரு எழுத்தாளனின் மாபெரும் உழைப்பும் ஈடுபாடும் மட்டுமே இப்படியான முயற்சி களை செய்ய தூண்டும். அப்படியான மிகுந்த உழைப்பை தன் படைப்புகளுக்காக தருவதில் ஜெயமோகன் வல்லவர். இது வரை அவர் எழுதியிருப்பவை 20% படைப்புகள் மட்டுமே. இன்னும் 80% படைப்புகள் அவரால் எழுதப்பட இருக்கின்றன. மகாபாரதத்தை காலத்திற்கேற்ப, புதுமையாக எழுதி வருகிறார். இது உலக பேரிலக்கியமாக மலர வேண்டும்’’ என்றார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ஏற்புரையின் போது,”மகாபாரதத்தை நாவலாக எழுத வேண்டும் என்பது 25 ஆண்டுகளுக்கு மேலான என் கனவு.ஐரோப்பிய மரபுகளை எடுத்துரைக்க, கிரேக்க- ஆர்மீனிய மொழிகளில் பரந்துப்பட்ட படைப்புகள் இருப்பதைப்போல், நமது பெருமைமிக்க இதிகாசமான மகாபாரதத்தை பெரிய அளவில் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எனது வேட்கையையும் இந்த நாவலை எழுத முக்கியக் காரணம்.

30 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நாவலை இந்தக் காலத்தில் யார் படிப்பார்கள் என்ற கேள்வி என் முன் வைக்கப்படுகிறது. இதற்கு, 300 பக்கங்களே கொண்ட நாவலாக இருந்தாலும், அந்தப் படைப்பு நன்றாக இóல்லையென்றால் அதனை யாரும் படிக்கமாட்டார்கள் என்பதுதான் என் பதில்.வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை எழுதப்பட்டுள்ள நான்கு நாவல்களை, இணைய தளத்தில் தினமும் சராசரியாக 5,000 பேர் படிக்கின்றனர்.இந்த நாவல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்பு, பீஷ்மர், துரோணர், அர்ச்சுனர், கிருஷ்ணர், திரௌபதி, குந்தி என மகாபாரதத்தின் அனைத்து கதைமாந்தர்கள் பற்றி விரிவாக விவரிக்கும் உலகின் சிறந்த படைப்பாகவும், தமிழில் அதிகம் படிக்கப்படும் படைப்பாகவும் வெண்முரசு விளங்கும்” என்றார் அவர்.