எந்த சமூகம் ஆனாலும் விளிம்பு நிலை மக்கள் சிந்திக்காதவரை இந்த அவலங்களுக்கு முடிவு கிடையாது!

எங்குபோய் முடியுமோ தெரியவில்லை..பொன்பரப்பியில் கலவரம் என்றார்கள். தலித் வீடுகளை வன்னியர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். யாரும் அதை மறுக்கவில்லை. சாதிப்பெயரை சொல்லியபடியே வீடுகளை தாக்கும் வீடியோ காட்சிகளை தாராளமாகவே பார்க்கமுடிந்தது. தேர்தல் தொடர்பான சண்டை சாதிக்கலவரம் அவதாரமெடுத்தது..

கடைசியில். வழக்கம்போல உ.ண்மை கண்டறியும் குழுக்கள் படையெடுத்தன. ஆனால் எங்கிருந்து சம்பவங்கள் ஆரம்பிக்கப் பட்டன என்பதை ஒப்புக்காக பதிவுசெய்யக்கூட ஒரு தரப்புக்கு அவசியமே இல்லை என்ற மனநிலை….அவ்வளவு ஏன்? ஒரு பெரிய அரசியல் தலைவருக்கே, இன்னொரு தரப்பில் பாட்டிலால் குத்தப் பட்டவரை பற்றியோ, அடித்த உதைக்கப்பட்ட மாற்றுத் திறனா ளியோ பற்றியோ ஏன் தெரியவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையே கிடைக்கவில்லை.

சம்பவ இடத்தில் செய்தி சேகரித்த செய்தியாளர் ஒருவர் அணிந்திருந்த மஞ்சள் சட்டையால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு தாக்கப்பட்டதுகூட யாருக்கும் பெரியதாக தெரிவில்லை. அவரே அடித்துக்கொண்டார் என்று சொல்லாமல் விட்டார்களே என்ற சந்தோஷம்

அப்போதும் சொன்னோம், இதுபோன்ற உணர்ச்சி மயமான விஷயங்களில் எண்ணெய் ஊற்றுவதை விட, வன்முறைக்கு காரணமானவர்களை தனியாக பிரிக்கவேண்டும் என்றும். பிரச்சினைக்கு காரண மான ஆதார புள்ளியை ஊர் பெரியவர்கள் துணை கொண்டு காவல்துறை சாந்தப்படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

இப்போது பண்ருட்சி அருகே குச்சிப்பாளையத்தில் வன்னியர்கள் மீது விடுதலை சிறுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் என வீடியா காட்சிகளோடு தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்பரப்பி மீது காட்டிய அக்கறையில் கால்வாசி யைக்கூட மீடியாக்க ளும் அரசியல் கட்சிகளும் – குச்சிப்பாளையம் சம்பவத்தின் மீது ஏன் காட்ட வில்லை என்ற கேள்விக்கெல்லாம் விடைகிடைக்கவே கிடைக்காது..

ஒன்று மட்டும் தெரிகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஒழுக்கம் கற்றுத்தந்து இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவதைத் தவிர, மற்ற எல்லா கேவலமான வேலை களையும், சாதிக்காக போராடுகிறோம் என்று சொல்பவர்கள் செய்துக்கொண்டிருக்கிறார்கள்..

ஏதாவது எழவு நடந்தால்தான் சாதித் தலைவர் களும் இது மாதிரி சம்பவங்களை வைத்து பிழைப்பு நடத்தும் சோ கால்ட்டு அறிவு ஜீவிகளும் ஓடிவருகிறார்களே தவிர, மற்றபடி, இவர்கள் ஒரு சமூகத்தின் முன்னேற்ற த்திற்காக எத்தனை பேருக்கு படிக்க உதவியாக இருந்து வேலைகள் பெற்றுத்தந்துள்ளார்கள், இப்போ தும் தந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

வன்னியர்களில் ஒரு தரப்பினர், நாம் ஆண்ட பரம்பரை பெருமை பேசி, அவர்கள் நம் அடிமைகள் என்று சொல்லி சொல்லி குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமியிடமும் இந்த போதனை ஒரு தரப்பில் நன்றாகவே நடக்கின்றன.

அதேபோல,இன்னொரு பக்கம்.. இவ்வளவு காலம் ஒடுக்கப்பட்டிருந்தோம்- இனி எவனை வேண்டுமானா லும் அடி, என்ன வேண்டுமானாலும் செய், கடைசியில் நம் சாதிப்பெயரை சொல்லி திட்டிவிட்டான் என்று ஒரு கேஸ் கொடுத்தால் போதும்.. அவர்கள் கதையே கந்தல் என தலித் மக்களில் உள்ள இளைய தலைமுறைக்கு ஒரு தரப்பால் நன்றாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நேரடி அனுபவத்தை வைத்தே சொல்கிறேன். கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் வன்னியர், தலித் குழந்தைகளை கண்டிக்கவே ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர். எங்கே ஆரம்பித்து அதை எப்படி சாதிப்பிரச்சினையா மாற்றிவிடுவார்களோ என்ற ஆசிரியர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது..

இன்னொரு பக்கம் பள்ளிக்கு சென்றுவரும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தொல்லை அதிகம் என்பதால், படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று பல கிராமங்களில் பெண்களின் கல்வி நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இரு சமூகத்தினர் சம்மந்தப்பட்ட காதல் திருமணம். உலகப்போர்களை விட மோசமான போர்களை ஏற்படுத்துக்கூடிய விஷயம் அது.. மற்ற சமூகங்களின் கலப்பு மணங்களை விட்டுவிடுங்கள், இதே வன்னியர்-தலித் திருமணங்கள் மாநகரங்களில், நகரங்களில் சர்ச்சையே இல்லாமல் நடக்கும். காரணம் வெரிசிம்பிள், இரு தரப்புமே நன்றாக படித்து நல்ல வேலையில் கௌரவமாக இருக்கும் அவ்வளவே.

மறுபடியும் கிராமத்திற்கே வருவோம்..நடக்கின்ற எல்லா இம்சைகளுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய காரணங்கள்தான் பின்னணி.. என்ன வேணாலும் செய்துவிட்டு வா, நம் பின்னால் பெரிய கூட்டமே இருக்கிறது என்று ஏற்றிவிடும் சிலரின் கொடூரமான புத்தி. எப்பேர்பட்ட அப்பா டக்கரா இருந்தாலும், நாம ஒரு கேஸ் குடுத்தா போதும், அவன் கதி அதோ கதிதான் என்ற அருமையான போதனை

இதற்கு மேலே ஊடகங்களில் உள்ள சில புண்ணிய வான் மக்களின். கைங்கர்யம்..சாதிய கொடுமைக்கு அப்பாற்பட்டு தனி மனித குற்றச்சம்பவம் என்றாலும் அதில தலித் சம்மந்தப் பட்டுவிட்டால் போதும். உடனே சாதி முலாம்பூசி 24 மணிநேர பதற்றத்துக்கு கொண்டு போய்விடுகிறார்கள். நேரடியாக களத்தில் போய் விசாரிப்பதற்கு முன்பு வாட்ஸ்அப் வாந்தி களையும் பேஸ்புக் பேதிகளையும் முகமே சுளிக்காமல் வாரி அப்படி மெயின்லைன் மீடியாவில் கொட்டிவிடுகிறார்கள்.

பிரச்சினை நடந்தால், உடனே அங்கு தலையிட்டு இரு தரப்பையும் சாந்தப்படுத்தி கொதிப்பை அடக்கவேண்டியது முக்கியமான விஷயம். இரு தரப்பிலும் நன் மதிப்பை பெற்ற ஊர்ப்பெரியவர் கள் இதனை அழகாக செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெரியவர்களை யாருமே மதிக்காத ஆணவப்போக்கு.. 70 வயது பெரியவரை, 15 வயது சிறுவன் யோவ் பெருசு நீ பொத்திக்கிட்டு போ என்று சர்வசாதாரணமாக சொல்கிறான். அந்த சிறுவனை கண்டிக்க வேண்டிய பெற்றோரோ,, அவனை வீரம் மிகுந்த பிள்ளையாக பார்ப்பார்கள் பாருங்கள், அவர்களை காண கண்கோடி வேண்டும். இதனுடைய நீட்சிதான் கொஞ்ச காலத்தில் அந்த பையன் குற்ற வழக்குகளில் சிக்கிகொள்வது..

காவல்துறை செயல்பாட்டை அலசினோம் என்றால் அது இன்னும் வேதனையைத்தரும்..இருதரப்பு சண்டை என்ற உடனே பிரச்சினையின் ஆணிவேர் என்ன வென்பதை விசாரிக்காமலேயே, இரு தரப்பின் மீதும் சரிக்கு சமமாக கேஸ்போட்டு எதற்கு தொல்லை என்று நடுநிலை நாயகர்களாகி விடுகிறார்கள் சில காவல்துறை அதிகாரிகள்

இல்லையென்றால் யார் பக்கம் அரசியல் பணம் செல்வாக்கு அதிகமோ அவர்களுக்கு எதிரானவர் கள் மீது மட்டும் வழக்குகளை பதிவு செய்து உள்ளே தள்ளுவது. எந்த சமூகமாக இருந்தால் என்ன, முதலில் தீர விசாரித்த பிறகே வழக்கு நிலைக்கு கொண்டு போக வேண்டும். புகாரில் உள்ள அம்சங்கள் குற்றம் சாட்டப் படுபவருடன் குறிப்பிடத்தக்க அளவிலாவது பொருந்து கிறதா என்பதை காவல் நிலைய அதிகாரிகள் கடுமையாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதை செய்தாலே பல பொய்புகார்கள் ஓடிப்போய் விடும், வடிகட்டப்படுதில் தேறும் உண்மையான புகார்கள் வலுப்பெற்று, சட்டத்தின் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும்.

கிளைமாக்ஸ்சுக்கு வருவோம். பிரச்சினைகளுக் கெல்லாம் தலையாய காரணமாக இருப்பவர்கள், சும்மா இருப்பவர்களை இன்னும் நல்ல மொறை. நல்லா மொறை என உசுப்பிவிடுபவர்கள்தான். எவனாக இருந்தாலும் கல்வி, பொருளாதாரம், நல்ல பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கினால் உலகமே அவனை வணங்கும் என்பதை சொல்லிக்கொடுக்கவே மாட்டார்கள்.
வன்முறையில் இறங்கினால் சட்ட ரீதியான பின்விளைவுகளையெல்லாம் இவர்கள் சொல்லவே மாட்டார்கள். இவர்களின் ஒரே தேவை தன் சொல்கேட்டு அடிதடியில் இறங்கி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்ளக்கூடிய உணர்ச்சிவசப்பட்ட ஒரு கூட்டம்.

அருகாமையில் உள்ளவர்களை அடித்து உதைத்து எதிரிகளாக மாற்றி அப்படியென்ன வாழ்க்கை யில் சாதித்துவிடுகிறோம் என்பதை உணர்ச்சிவசப்படும் கூட்டம் புரிந்து கொள்ளவேண்டும். காலம் காலமாக பகையை வளர்த்து என்ன செய்யப்போகிறார்கள் என்றே புரியவில்லை..

நீங்கள் என்ன சாதி, மதமோ இனமோ? தொலைதூரத்தில் உள்ள வெளிமாநிலத்திற்கு செல்கிறீர்கள். திடீரென்று சாதி,மதம், இனம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வைத்து கலவரம் நடக்கிறது. அந்த ஒன்றில் நீங்கள் சம்மந்தப்பட்டு, அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தின் நிலை என்ன? யாரோ எங்கே செய்த தவறுக்கு நம்மையும் தாக்குவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்ளும்போது உங்களின் மனநிலையை யோசித்து பாருங்கள்.

அதே பயம், சாதிப்பிரச்சினையால் உள்ளுரில் இருக்கும்போதே வந்தால் உங்களின் மனநிலை.. உங்கள் குடும்பத்தை பற்றிய மனநிலை? எவ்வளவு வேதனையாக இருக்கும். எந்த சமூகம் ஆனாலும் விளிம்பு நிலை மக்கள் சிந்திக்காதவரை இந்த அவலங்களுக்கு முடிவு கிடையாது!

ஏழுமலை வெங்கடேசன்