September 20, 2021

எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பிரதமர்? – நோபல் பரிசு வாங்கிய மலாலா லட்சியம்!

”பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ என்னை கவர்ந்தவர் ஆவார். அவர் வழியில் எதிர் காலத்தில் அரசியலில் நுழைந்து அவரைப் போன்று பிரதமர் ஆக வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்.”என்று அமைதிக்கான நோபல் பரிசை பெற்று கொண்ட மலாலா கூறி உள்ளார்.
malala nobel
நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு, ராணி சஞ்சா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் நார்வே நோபல் பரிசு குழுவின் தலைவர் ஜார்ப் ஜார்ன் ஜாக்லேண்ட் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கி சிறப்பித்தார்.இந்த விழாவில் பேசிய மலாலா, “நான் ஒரு தனி பெண்ணாக இங்கு காட்சியளிக்கலாம். ஆனால் எனது குரல் 66 மில்லியன் பெண் குழந்தைகளின் குரலை ஒலிக்கின்றன. சில நேரங்களில் மக்கள் கேட்கிறார்கள் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று? ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், அவர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்பது தான். என் முன்பாக இரண்டு தேர்வு உள்ளது. ஒன்று அமைதி. மற்றொன்று பேச்சு. நான் பேசுவதை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் ஏராளமான குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. ஏராளமான குழந்தைகள் வறுமையின் காரணமாக கல்வி கற்க இயலாமல் போகிறது. எனது கிராமத்தில் இதுவரை பெண்களுக்கான மேல்நிலைப்பள்ளி இல்லை. எனது குறிக்கோள் எனது சகோதரிகளும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதே. இங்கிருந்து தான் நான் துவங்க வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வியறிவு பெறும் வரை, எனது போராட்டம் ஓயாது.

இப்படி சமுதாயத்திற்கு உதவ வேண்டியது எனது முக்கிய கடைமையாக கருதுகிறேன். நான் எடுத்து கொண்ட பெண் கல்வி பிரசாரத்தின் மூலம் இன்று பல குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதை காண முடிகிறது.எனது நாட்டுக்கு (பாகிஸ்தான்) சேவை செய்ய வேண்டும் என்ற கனவு எனக்கு நிறைய உள்ளது. பாகிஸ்தானை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு ஆகும்.

அதிலும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ என்னை கவர்ந்தவர் ஆவார். அவர் வழியில் எதிர் காலத்தில் அரசியலில் நுழைந்து அவரைப் போன்று பிரதமர் ஆக வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்.மேலும் இப்போதைக்கு எனது படிப்பை இங்கிலாந்தில் முடிக்க உள்ளேன்.” என்றார்