September 29, 2021

எங்கே தேடுவோம்? எப்படித்தான் தேடுவோம்?

ஆப்ரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகைக்காக கடந்த 8–ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் வரை சென்று விட்டு திரும்பிய இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக விமானம் காணாமல் போய் விட்டது. அதில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி சுபாஷ் சுரேஷ், கண்காணிப்பாளர் எம்.கே.சோனி ஆகியோரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. நாகப்பட்டினத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் பறந்து கொண்டிருந்த போது அந்த சிறிய விமானம் மாயமானது. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
missing-aircraft
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 15 கப்பல்கள், அந்த பகுதியில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் பாரா மோட்டார் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. நேற்று 3–வது நாளாக தேடும் பணி நீடித்தது.

கன்னியாகுமரி கடல் பகுதியிலும் நேற்று தேடும் பணி நடைபெற்றது. சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதிநவீன ரோந்து படகுகளில் சென்று தேடினார்கள்.ஆனால் 3 நாட்கள் ஆகியும் விமானத்தை பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.மாயமான விமானத்தை கண்டுபிடிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியையும் கடலோர காவல்படை நாடி இருக்கிறது.