எங்கிட்ட மோதாதே – சினிமா விமர்சனம்!

இன்றைய காலக்கட்டத்தில் நசிந்து போய் விட்ட கட் அவுட் கலாச்சாரத்தையும், ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையே நிலவி வந்த மோதலையும், இதற்குள் நுழைய பார்க்கும் அரசியலையும் வைத்து வெளியான படம் தான் ‘எங்கிட்ட மோதாதே’.அதிலும் சினிமா ரசிகர்களுக்கு பேர் போன திருநெல்வேலியை பின்னனியைக் கொண்டு கே.ஆறுச்சாமியின் கலை இயக்கத்தில் .. கட்-அவுட்டுகளும் திரையரங்க முன் பகுதி செட் அப்பு களும் நேசமணி பேருந்துகளும் . பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிய காலத்திற்கு நம்மை அழைத்து சென்று பரவசப்படுத்த முயல்வது இயக்குநருக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்

eng mar 27

நாகர்கோவிலில் நண்பர்களான ரஜினி ரசிகர் நட்ராஜிக்கும், கமல் ரசிகர் ராஜாஜிக்கும் கட்-அவுட் வரைவது தான் முழு நேர வேலை. தொடர்ந்து கூலிக்கு வேலை செய்ய விரும்பாமல் முதலாளியின் ஆசியுடனே தனியாக கட்-அவுட் வரையும் தொழிலை ஆரம்பிக்க இருவரும் நட்ராஜின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வண்டியேறுகிறார்கள்.

அங்கு கட்-அவுட் தொழில் அமோகமாக போய்க் கொண்டிருக்க, இடையில் ராஜாஜியின் தங்கச்சி சஞ்சிதா ஷெட்டியுடன் நட்ராஜ் காதல், இன்னொரு புறம் அதே ஊரைச் சேர்ந்த பார்வதி நாயருடன் ராஜாஜிக்கு காதல் என தனி ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் அந்த ஊர் அரசியல்வாதியான ராதாரவிக்கு சொந்தமான தியேட்டரில் ரஜினி, கமல் படங்கள் ரிலீசாகிறது. அதில் கட்-அவுட் வைப்பதில் இருவரின் ரசிகர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட, அந்த சண்டையில் தியேட்டர் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் இனி ரஜினி, கமல் படங்களை திரையிடப்போவதில்லை, கட்-அவுட் வைக்கவும் அனுமதியில்லை என்கிற முடிவுக்கு வருகிறார் ராதாரவி. அதோடு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நட்ராஜ்- ராஜாஜி இருவரையும் பிரித்தும் விடுகிறார்.

அரசியல்வாதியான ராதாரவியின் அந்த சூழ்ச்சியை ரஜினி- கமல் ரசிகர்கள் மீண்டும் இணைந்து எப்படி முறியடிக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

முன்னரே குறிப்பிட்டது போல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 80 கால காட்டங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப்படம். அந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் ஜானி ஆர்ட்ஸ் உட்பட பல கட்-அவுட் வரைபவர்கள் பிரபலம். அந்த சந்தோஷச் சிதறல்களை மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநார் ராமு செல்லப்பா.

இயல்பாகவே நட்ராஜிடம் ரஜினியின் மேனரிசங்கள் இருந்து வருவது உண்மை, அதை இந்தப் படத்தில் ரஜினி ரசிகர் கேரக்டருக்கு மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நூறு சதவீதம் நட்ராஜ் ரஜினி ரசிகர் கேரக்டரில் பொருந்தியிருக்கிறார்.

கையில் ஸ்டைலாக பெயிண்ட் பிரஸ்ஸைப் பிடிப்பது, துண்டு பீடியை உதட்டில் வைத்து இழுக்கும் போது காட்டுகிற ஸ்டைல், நடையில் ஸ்டைல், தலை முடியை கோதி விடுகிற ஸ்டைல் என படம் முழுக்க அச்சு அசல் ரஜினி ரசிகராகவே வந்து ரசிக்க வைக்கிறார்.

அதேபோல கமல் ரசிகராக வரும் ராஜாஜியும் பொருத்தமான தேர்வு. ரஜினி கேரக்டரில் நட்ராஜ் வேகம் என்றால் கமல் ரசிகர் கேரக்டரில் அமைதியாக வர வேண்டிய இடத்தில் அமைதியாகவும், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும், ஆட்டம் போட வேண்டிய இடத்தில் ஆட்டமும் போடுகிறார்.

நண்பர் ராஜாஜிக்கு , அவர் தங்கையுடனான தன் காதல் தெரிந்த பின் ., “நானும் மரகதமும் கல்யாணம். பண்ணிக்கலாம்னு இருக்கோம் … “ என்று அவரிடம் கூறிவிட்டு ,’முடிஞ்சா பண்ணிக்கோ …’ எனும் ராஜாஜியிடம் முடிஞ்சதால தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் … ” என்று , டபுள் , டிரிபிள் மீனிங்கில் டயலாக் அடிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே மாதிரி ., “படம் வரையும் போது பின்னாடி தொட்டா சாக அடிச்சு புடுவேன் ..” என்றபடி , அடியாட்களை அடித்து துவம்சம் செய்வதிலும் நட்டி ., ரஜினி ரசிகனாய் செம லூட்டி அடித்திருக்கிறார் .

நட்டியின் ஜோடியாக ஒரு நாயகியாக வரும் சஞ்சிதா ஷெட்டி, அண்ணனுக்குத் தெரியாது சாக்கு போக்கு சொல்லி , நட்டியை சந்திக்க கிளம்பும் இடங்களிலும் சரி .அவருடனான காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை செம யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜாஜியின் ஜோடியாக வரும் பார்வதி நாயர்., முதல் முறையாக இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில்நடித்திருக்கிறார்.

ராதாரவி ஒரு திரையரங்க அதிபர் ‘கம்’ அரசியல்வாதி தோற்றத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். தனது அடியாளின் மூலம் தான் நினைப்பதை செய்துமுடிப்பதில் நின்றுள்ளார். நட்ராஜுடன் வரும் தேங்காய் பொறுக்கி நண்பர் முருகானந்தம் இப்படத்தில் செய்யும் காமெடி சேட்டையில் செமயாய் சிரிக்க வைக்கிறார் ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது மிடுக்கு தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் பலே சொல்லும் அளவுக்கு படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார்.

ப்ளோரண்ட் சி.பெர்ரெரா , பாலாசிங் , தாக்ஷாயினி , வெற்றிவேல்ராஜா ஆகிய ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்
முத்தாய்ப்பா ரசிகன் என்பவன் முட்டாள் அல்ல என்பதையும், ர்சிகர்கர்களுக்குள் அரசியல் இல்லை என்பதையும் சுவைப்பட அதிலும் நெல்லை மண் வாசனையோடு வழங்கிய படத்திற்கு ரசிகர்கள் ஸ்பெஷல் கட் அவுட் வைத்து விட்டது மிகையல்ல