October 16, 2021

ஊழல் என்பது மனித உரிமையை மீறிய செயல் ஆகும். ! -ஹைகோர்ட்டு தீர்ப்பு விவரம்

”ஊழல் என்பது மனித உரிமையை மீறிய செயல் ஆகும். இது சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்து கிறது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான சூழலே எழவில்லை. இதே போன்ற ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை. 10 மாதங்களுக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.”என்று கூறியே ஜெ. ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளார் நீதிபதி
jaya-oct 8
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஹைகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது உத்தரவில்,”“1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66½ கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை தனிக்கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் பிறகு சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.

ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். 2-வது குற்றவாளி சசிகலாவின் கணவர் நடராஜன். இவர் அரசு துறையில் துணை இயக்குனராக இருந்துள்ளார். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சசிகலாவின் உறவினர்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு கர்நாடகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பெங்களூர் தனிக்கோர்ட்டு இந்த வழக்கு விசாரணை நடத்தி கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் முதல் குற்றவாளி சார்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி வாதிட்டார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மற்றும் பல்வேறு ஐகோர்ட்டுகள் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதத்தை முன்வைத்தார். முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் 2-வது மற்றும் 3-வது குற்றவாளிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமித்தேசாய் பல்வேறு தகவல்களை இந்த கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு வந்தார். வருமான வரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை தனிக்கோர்ட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார். பெங்களூர் தனிக்கோர்ட்டு 6 முக்கியமான அம்சங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி சரியான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க போதிய காரணம் இல்லை.

அரசு சார்பில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவில் குற்றவரிகள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று நிபந்தனை வழங்க ஆட்சேபனை இல்லை என்று அரசு சிறப்பு வக்கீல் கூறுகிறார். இது வேடிக்கையாக உள்ளது.

விசாரணை நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழல் என்பது மனித உரிமையை மீறிய செயல் ஆகும். இது சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான சூழலே எழவில்லை. இதே போன்ற ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை. 10 மாதங்களுக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு விரும்பினாலும் மேற்குறிப்பிட்ட விஷயங்களையும், ஊழலின் தீவிரத்தையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.”என தெரிவித்துள்ளார்