September 29, 2021

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியாச்சு!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு 119-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். கண்காட்சியை கவர்னர் ரோசய்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.
ooty flower show
கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மற்றும் ரோஜா மலர்களை கொண்டு 40 அடி அகலம், 40 அடி உயரத்தில் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மகால் வடிவம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். ஏராளமானவர்கள் அதன் முன் நின்று தங்கள் செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 20 வகையான ஆர்க்கிட் மலர்கள், காஷ்மீரில் மட்டுமே பூக்கும் துலீப் மலர்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்த ஆண்டு புதிதாக நெதர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4 வண்ணங்களில் மலரும் துலீப் மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மலர் கண்காட்சியின் நுழைவு வாயிலில் இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆந்தூரியம், ஜெரிபெரா உள்ளிட்ட மலர்களை கொண்டு அழகிய நுழைவு வாயில் மற்றும் தோரணங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் சிறப்பம்சமாக 106 நாடுகளின் தேசிய மலர்கள் சுற்றுலா பயணி களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் காடுகளில் உள்ள மரங்களில் காணப்படும் பாசி களை கொண்டு குட்டியுடன் கூடிய யானை வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது.

பூங்காவில் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு இருந்த பல்வேறு வகையான மலர் செடிகள் மலர் மாடத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இவற்றில் மலர்ந்திருந்த மலர்கள் கண்களை கவரும் வகையில் இருந்தது. மேலும் வெலிங்டன் ராணுவ கல்லூரி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் சார்பில் கண்காட்சியில் பல்வேறு மலர் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. பூங்காவில் உள்ள குளத்தில் மலர்களால் டால்பின்கள் வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது. மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று கண்டு களித்தனர்.

இந்த கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நிறைவு விழாவில் சிறந்த மலர் அலங்காரங்கள் மற்றும் அரங்குகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.